Published:Updated:

`நான் என்னை முன்னிலைப்படுத்தவில்லை..!’ - கொரோனா விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

ஜூன் மாதமும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தடுப்புக்கென்று தனியாக திட்டமிடுதலுடன் செயல்படுகிறது அரசு. இருந்தாலும் சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், ``கொரோனா தடுப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக கொரோனா முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் அதிகாரிகள் விளக்கினார்கள். சில மண்டலங்களில் மட்டும் அதிக பாதிப்புகள் இருக்கின்றன. மக்கள் நெருக்கம் காரணமாக சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் 13 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான், அதிக அளவில் சோதனை செய்துவருகிறோம். மாநிலத்தில் தற்போது வரை 23,495 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 56% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது, 13,170 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா இறப்பு விகிதம் என்பதும் குறைவாகத்தான் இருக்கிறது. அதாவது 0.80%. அதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கொரோனா பரவலைத் தடுக்கவே தமிழகத்தில் தினமும் அதிகப்படியான பரிசோதனைகள் நடத்தப்படுகிறது” என்றார்.

பழனிசாமி
பழனிசாமி

தொடர்ந்து, ``தமிழகத்தில் 15.45 லட்சம் பி.சி.ஆர் கிட்டுகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 11.51 லட்சம் கிட்டுகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியதையும் சேர்த்து, 12.50 லட்சம் பி.சி.ஆர் கிட்டுகள் பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் 4,51,800 பி.சி.ஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளன. பி.சி.ஆர் கருவி சோதனை குறித்த ஸ்டாலினின் குற்றச்சாட்டு தவறானது. நான் என்னை முன்னிலைப்படுத்துவதாகச் சொல்கிறார். அது தவறு. நான் விளம்பரம் செய்யவில்லை. ஸ்டாலின்தான் விளம்பரம் செய்கிறார்” என பி.சி.ஆர் கிட்டுகள் குறித்து எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

மேலும், ``தமிழகத்தில் வென்டிலேட்டர் தட்டுப்பாடு நிலவுவதாகச் சொல்வது பொய். இந்தியாவிலே அதிக வென்டிலேட்டர்கள் கொண்ட மாநிலம் தமிழகம், என்றாலும் மாநிலத்தில் அதிகப்படியான வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தவேண்டிய நிலை வரவில்லை.

ஜூன் மாதமும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு