தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான் விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``விசாரணை கைதிகள் விக்னேஷ், தங்கமணி மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.
எதிர்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு போல விக்னேஷ், தங்கமணி வழக்குகள் விசாரிக்கப்படாது.

இவர்களின் மரணம் தொடர்பான வழக்கில் அரசு எதையும் மறைக்கவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்களில் எந்த வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்தீர்கள்? ஆதாயத்துக்காக மயிலாப்பூர் தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை, மயிலாப்பூர் இரட்டைக் கொலை வழக்கில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை விரைவாக நடைபெற்றது. காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்'' என்றார்.
