Published:Updated:

தி.மலை: ``ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல..!" - அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் ஸ்டாலின் ( நா.ராஜமுருகன் )

"ஆன்மிகத்தின் பெயரால் மனிதர்களை சாதியால், மதத்தால் பிளவு படுத்துபவர்களுக்குத் தான் நாங்கள் எதிரிகள்." - ஸ்டாலின்

தி.மலை: ``ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல..!" - அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

"ஆன்மிகத்தின் பெயரால் மனிதர்களை சாதியால், மதத்தால் பிளவு படுத்துபவர்களுக்குத் தான் நாங்கள் எதிரிகள்." - ஸ்டாலின்

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின் ( நா.ராஜமுருகன் )

திருவண்ணாமலைக்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்த மு.க.ஸ்டாலின், இரண்டாவது நாளான நேற்று (09.07.2022) காலை முக்கிய மக்கள் பிரதிநிதி ஒருவரின் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்த பின்னர், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்களான க.பொன்முடி, செஞ்சி மஸ்தான், எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.பி - அண்ணாதுரை, மாவட்டத்திற்கு உட்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தலைமையுரை ஆற்றிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "முதலமைச்சர் சென்னையில் இருந்தாலும், அவர் திருவாரூர்காரர். நாமோ திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையில் நினைத்தாலே முக்தி என்று ஆன்மிக பெருமக்கள் சொல்கிறார்கள். திருவாரூருக்கும், திருவண்ணாமலைக்கும் 'திரு' இருக்கிறது. ஆகவே, இந்த 'திரு'வை என்றைக்கும் பிரித்துப்பார்க்க முடியாது. என்றைக்கும் திரு, திருவாகத்தான் இருக்கும். இன்னும் ஒருபடி மேலே சொன்னால், திரு என்ற திருவாரூருக்கு அடக்கமாக திருவண்ணாமலை இருந்தே தீரும். அப்படிப்பட்ட திருவாரூரில் பிறந்த கலைஞர் தான், திருவண்ணாமலை மாவட்டம் எனும் முகவரியை எங்களுக்கு கொடுத்தார். எங்களுடைய பகுத்தறிவு கோயிலின் மூலவரே தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர் தான்" என்றார்.

அமைச்சர்கள் - முதலமைச்சர் - துணை சபாநாயகர்
அமைச்சர்கள் - முதலமைச்சர் - துணை சபாநாயகர்

அதனைத் தொடர்ந்து, முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டங்களை துவங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாபெரும் வரலாற்றுச் சிறப்புகளையும், ஆன்மிக அடையாளங்களையும் தன்னகத்தே கொண்டது திருவண்ணாமலை. இந்த பகுதியை, தனி மாவட்டமாக உருவாக்கியதே கலைஞர் தான். இத்தகு, புகழ்மிக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் எழுச்சியோடு, ஏற்றத்தோடு, அழகோடு இந்த அரசு விழாவை ஏற்பாடு செய்துள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே, 'எதிலும் வல்லவர் வேலு, அதனால்தான் அவர் எ.வ.வேலு' என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். கலைஞருக்காகவும், எனக்காகவும் தன்னையே ஒப்படைத்துக் கொண்டவர் அவர். எ.வ.வேலுவை, 'விழா வேந்தன்' என்று நேற்று மாலை நான் குறிப்பிட்டதை போல, எல்லாவற்றிலும் தனி முத்திரையைப் பதிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கலைஞர் நினைவகமாக இருந்தாலும், மதுரை நூலகமாக இருந்தாலும், கிண்டி மருத்துவமனையாக இருந்தாலும், இவையெல்லாமே வருங்காலத்தில் தமிழ்நாட்டின் அடையாளங்களாக மாறப்போகிறது. அவற்றை, எ.வ.வேலு உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கோ, எனக்கோ மட்டுமல்ல... நம் மாநிலத்துக்கே பெருமைமிகு அடையாளங்களாக அவை அமையப்போகின்றன.

நான், திருவண்ணாமலையில் இருந்து தொடங்கிய 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பயணமானது, முதலில் பயணமாகத் தொடங்கியது. பின்பு, வெற்றிப் பயணமாக மாறியது. இப்பொழுது, ஆட்சிப்பயணமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு அடித்தளமிட்ட இடம்தான் இந்த திருவண்ணாமலை.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

கழக ஆட்சி அமைந்தாலே, திருவண்ணாமலை மாவட்டமானது புத்தெழுச்சி பெறும். அதை இங்கே கூடியிருக்கிற மக்களாகிய உங்கள் முகங்களில் நான் பார்க்கிறேன். 1975-ம் ஆண்டு அண்ணாமலையார் கோவில் திருப்பணியை முழுமையாக செய்ததும், அக்கோவிலைப் பாதுகாத்ததும் கழக அரசுதான். அண்ணாமலையார் கோயிலானது பழம்பெருமையை கொண்டது. ஆகவே, அதனுடைய தொன்மை மற்றும் கம்பீரம் காரணமாக அதைத் தொல்பொருள் துறை 2004-ம் ஆண்டு கையகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. அச்சமயத்தில் பிரசாரத்திற்காக கலைஞர் திருவண்ணாமலைக்கு வந்தபோது, அவரை ஊர் பொதுமக்களும், பக்தர்களும் சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, ஒன்றிய அரசிடம் பேசி, அண்ணாமலையார் கோயிலை பக்தர்களின் எண்ணத்திற்கேற்ப மீட்டுக் கொடுத்தது தி.மு.க என்பதை மறந்துவிடக் கூடாது. இன்றைக்கு, மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது.

அண்ணாமலையார் கோவில் என்பது தமிழ்நாட்டின் சொத்து. அதைக் கட்டிக்காத்தது தி.மு,க அரசு. இதுபோல, தி.மு.க அரசுக்கும் திருவண்ணாமலைக்கும் நீண்ட உறவு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இம்மாவட்டத்தில் ஏராளமான ஆன்மிகப் பணிகளும் நடந்து வருகிறது. இவையெல்லாம் மதத்தை வைத்து அரசியல் செய்கின்ற கண்களுக்குத் தெரியாது. ஏனென்றால், அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகள் அல்ல... உண்மையான ஆன்மிக வியாதிகள், ஆன்மிக போலிகள்! ஆன்மிகத்தைத் தங்களது அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய எண்ணத்தைக் கொண்டவர்கள் அவர்கள். நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை..! அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்துத் தொழில் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை இன்றைக்கு நடத்தி வருகிறோம்.

நிகழ்ச்சியில் ஸ்டாலின்
நிகழ்ச்சியில் ஸ்டாலின்

அந்த அடிப்படையில்தான் இந்து சமய அறநிலையத்துறை மூலமாக, சிறப்பான பணிகளை இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது இந்த அரசு. கோவிலுக்குத் திருப்பணி செய்வது திராவிட மாடலா? என்று சிலர் கேட்கிறார்கள், கேள்வி எழுப்பி வருகிறார்கள். அனைத்துத் துறையையும் சமமாக வளர்ப்பதுதான் ‘திராவிடமாடல்’ என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்! இன்னும் சொன்னால், திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான நீதிக்கட்சி ஆட்சி காலத்தில்தான், இந்துசமய அறநிலையத்துறை என்ற சட்டமே உருவாக்கப்பட்டது. எது திராவிட மாடல்? என்று கேட்டு, பொய்களுக்கு பெருமை எனும் முலாம்பூசி பேசுபவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆன்மிகத்தின் பெயரால் இன்றைக்கு அவர்கள் அரசியல் நடத்த முயற்சிக்கிறார்கள். ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல... ஆன்மிகத்தின் பெயரால் மனிதர்களை சாதியால், மதத்தால் பிளவு படுத்துபவர்களுக்குத் தான் நாங்கள் எதிரிகள். மனிதர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களைப் பிளவுபடுத்துவதற்கு ஆன்மிகத்தை பயன்படுத்துபவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக நிச்சயமாக இருக்க முடியாது. அறம் என்றால் என்னவென்றே தெரியாத, அறிவுக்கு ஒவ்வாத மூடக்கருத்துகளை முதுகில் தூக்கிச் சுமந்துக் கொண்டிருக்கும் சிலருக்கு... போலியான பிம்பங்களைக் கட்டமைக்க வேண்டுமானால், உளறல்களும் பொய்களும் தான் தேவை. மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புகள், புதிய தொழில்கள், புதிய முயற்சிகள் என்று தமிழ்நாடும் தமிழினமும் முன்னேற சிந்தித்து செயல்படுவதுதான், தி.மு.க., அதுதான் திராவிட அரசியல் மரபு.

நலத்திட்ட உதவிகள்
நலத்திட்ட உதவிகள்
பொய்யும், புரட்டும் பேசி மலிவான விளம்பரம் தேடும் வீணர்களைப் பற்றி ‘ஐ டோன்ட் கேர்’. நான் மட்டுமல்ல, நீங்கள் ஒவ்வொருவரும் 'ஐ டோண்ட் கேர்' என்று சொல்லி நகர வேண்டும்.

கலைஞர் சொல்வார், 'கோப்புகள் சிகப்பு நாடாவிலே கட்டப்பட்டு உறங்கிக் கொண்டிருக்கும்போது, ஊழல் எழுந்து உட்கார்ந்து ஊர்சுற்ற புறப்பட்டு விடுகிறது' என்று குறிப்பிடுவார். அதை மனதில் கொண்டு, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எந்த கோப்பும், எந்தப் பணியும் தேங்க விடக்கூடாது என்ற எண்ணத்தோடு பணியாற்றுங்கள். திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை அடைவோம்" என்றார்.