Published:Updated:

`ஆட்சி பணி விதி திருத்த நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது!' - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

ஸ்டாலின், மோடி

`ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. இந்த விவகாரத்தில் என்னுடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து கொள்கிறேன்.' - ஸ்டாலின்.

`ஆட்சி பணி விதி திருத்த நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது!' - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

`ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. இந்த விவகாரத்தில் என்னுடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து கொள்கிறேன்.' - ஸ்டாலின்.

Published:Updated:
ஸ்டாலின், மோடி

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாநில அரசுகளின் ஒப்புதலின்றி மத்திய அரசின் பணிகளுக்குத் தேர்வு செய்துகொள்ளும் சட்டத்திருத்தம் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ``சமீபத்தில் ஒன்றிய அரசு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954-ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. இந்த விவகாரத்தில் என்னுடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து கொள்கிறேன். ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழ்நிலைக்கு இந்த திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இந்த திருத்தங்கள் ஒன்றிய அரசின் வசம் அதிகார குவிப்புக்கு வழிவகுக்கும். அதேபோல, ஆட்சிப் பணி அதிகாரங்களின் பணிச் சூழலை நிர்வகிப்பது குறித்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்கெனவே மாநில அரசுகள் குறிப்பிட்ட சில முதுநிலைகளில் போதுமான எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.

ஒன்றிய குரூப்-1 நிலை அலுவலர்கள் மூலமாகவும், வெளிச் சந்தையிலிருந்தும் வல்லுநர்களைத் தேர்வு செய்யும் முறை மூலமாகவும் ஒன்றிய அரசு தனது தேவையை நிறைவு செய்துகொள்ளும் சூழ்நிலையில், மாநில அரசு முழுக்க முழுக்க தன்னுடைய நிர்வாக தேவைகளுக்குக் குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைத் தான் சார்ந்துள்ளது. மக்களுக்குத் தேவையான பல்வேறு ஒன்றிய - மாநில அரசின் திட்டங்களை மாநில அரசுகளே முன்னின்று செயல்படுத்தி வருகின்றன. தேசிய பேரிடர் களை எதிர்கொள்ளும் சமயங்களில் போதுமான எண்ணிக்கையில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாநில அரசுகளுக்குத் தேவைப்படுகின்றனர்.

மத்திய அரசு
மத்திய அரசு

இந்த நிலையில், மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிக்கு அனுப்பு வற்புறுத்துவது ஏற்கெனவே எண்ணிக்கை குறைபாடு உள்ள நிலையில் நிர்வாகத்தில் ஒரு தொய்வு நிலையை ஏற்படுத்திவிடும். மேலும், ஒன்றிய அரசு வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களைத் தேர்வு செய்யும் முறை ஒன்றிய அரசுப் பணிக்குச் செல்ல விரும்பும் அலுவலர்களின் ஆர்வத்தையும் ஏற்கெனவே குறைத்துவிட்டது என்பதை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தப் புதிய சட்டத்திருத்தமானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தனித்துவம் வாய்ந்த ஒரு அம்சமான அகில இந்திய ஆட்சிப் பணி என்பதனை சேதப்படுத்தி விடும். இந்திய ஆட்சிப் பணி இதுவரை தேசத்திற்குச் சிறப்பான சேவையை ஆற்றி ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையே இணக்கமான உறவுகளின் மூலம் ஒரு வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோடி
மோடி

ஆனால், உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசுப் பணிக்கு மாற்ற முடியும் எனும் நிலை இந்தியாவின் `எஃகு' கட்டமைப்பு என்று அழைக்கப்படும் அரசுப் பணி நிர்வாகத்திற்கு ஒரு நிலையற்ற தன்மையையும், அரசு அலுவலர்களின் பணி ஆர்வத்தையும் குறைக்கும். இதைச் செயல்படுத்தினால் அகில இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஒரு நிரந்தர அச்ச உணர்வுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இது தற்போது வளர்ச்சிப் பாதையில் செல்ல விரும்பும் நம்முடைய நாட்டிற்கு உகந்ததல்ல என்று கருதுகிறேன்.

குடிமைப் பணி அலுவலர்கள் அரசியல் சார்புத் தன்மை இன்றியும், எந்த வித அச்ச உணர்வு இன்றியும் பணியாற்ற வேண்டும். ஆனால், உத்தேசிக்கப்பட்ட சட்டத்திருத்தங்கள் நிர்வாகக் கட்டமைப்பின் தன்மையையும் அதன் பணியாற்றும் செயல்திறனையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மாநிலங்களில் குடிமைப்பணி அதிகாரிகளின் பணிச் சூழலை நிர்வகிப்பதும் சிக்கலாகிவிடும். இவற்றினால் மாநில நிர்வாகமும் அதன் மூலம் தேச நலன் கூட பாதிக்கப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய சட்டத் திருத்தத்தின் விளைவுகள் அச்சமூட்டுவதாக இருக்கின்றன. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் ஆலோசனை மேற்கொள்ளாமல் அவசரமாகச் சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டுவர முயல்வது இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகவும் எதிரானது. இந்த திருத்தத்திற்குத் தொடர்புடைய அமைப்புகளான மாநில அரசுகளும், நிர்வாகக் கட்டமைப்பும் இதனை ஏற்கவில்லை. ஏற்கெனவே, நடைமுறையில் உள்ள ஒரு ஏற்பாட்டினை மாநில அரசுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு எடுத்துக் கொள்வது கூட்டாட்சி அரசியல் அமைப்பிற்கு உகந்ததல்ல.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இது கடந்த 75 ஆண்டுகளாகக் கவனமாக உருவாக்கப்பட்ட இந்த தேசத்தின் சித்தாந்தங்களை வலுவிழக்கச் செய்யும். எதையும் அழிப்பது எளிது ஆனால் மறுகட்டமைப்பு செய்வது கடினமானது. இவ்வாறான கட்டுப்படுத்தக் கூடிய புதிய விதிமுறைகளை வகுப்பதற்குப் பதிலாக மாநில அரசுகளின் ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு, ஒன்றிய அரசு நேர்மறையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அகில இந்திய ஆட்சிப் பணியாளர்கள் பணி அமைப்பினை மேம்படுத்தவும், அவர்கள் பணியாற்றுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்குவதன் மூலம் ஒன்றிய அரசுப் பணிகளுக்கு அவர்கள் தாங்களாகவே எந்த வற்புறுத்தலும் இல்லாமல் சென்று பணியாற்றக் கூடிய நிலையை உருவாக்கலாம்.

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

எனவே, தாங்கள் இது குறித்து மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், நம்மால் கணிக்க இயலாத விளைவுகளை இது நிச்சயம் ஏற்படுத்தும் எனக் கருதுகிறேன். மேலும் சுதந்திரமான சிந்தனை மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் சேவையாற்றும் ஒரு எஃகு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க விரும்பிய சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையை நாம் நினைவு கூற வேண்டும். மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் இந்திய ஆட்சிப் பணி விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாறுதல்களைக் கைவிடுமாறும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து நமது முன்னோர்கள் அளித்துள்ள உயரிய சிந்தனையால் ஆன கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism