Published:Updated:

`எடப்பாடியால் செடிகளைத்தான் வாங்க முடியும்!' - வெளிநாட்டுப் பயணத்தை கலாய்த்த கே.எஸ்.அழகிரி

எம்.திலீபன்

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மோடி சொன்னார். ஆனால், இன்று ஆட்டோமொபைல் தொழிலில் மட்டும் 3 லட்சம் பேர் வேலையை இழந்திருக்கிறார்கள்.

ks alagiri
ks alagiri

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் கோழிகொண்டான் ஏரியை பொதுமக்களின் பங்களிப்புடன் ஆழப்படுத்தும் நிகழ்ச்சியை இன்று தொடங்கிவைத்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்,

``நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. பொருளாதாரத்தைச் சீர்படுத்த முடியாத அளவுக்குச் சரிந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Modi
Modi
Vikatan

ஒவ்வோர் ஆண்டுக்கும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் மோடி வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், இன்று ஆட்டோமொபைல் தொழிலில் மட்டும் 3 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர். ரிசர்வ் வங்கியிடம் உபரி நிதியைப் பெற்று அன்றாடச் செலவுகளைச் செய்ய வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பொருளாதார சுனாமி ஆகும். பொருளாதாரப் பிரச்னைகளை மூடி மறைக்கவே சிதம்பரம் கைது, காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றைக் கையில் எடுத்துள்ளனர்.

அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காகத் தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்குச் செல்வதை நான் தவறு என்று கூற மாட்டேன். அ.தி.மு.க ஆட்சியில் ஏற்கெனவே 2 முறை நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு மூலதனம் வந்தது. அதன்மூலம், எத்தனை தொழிற்சாலைகள் வந்தன. அந்தத் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் எங்கெங்கு அமைந்துள்ளன. அதனால் வேலைவாய்ப்புகள் பெற்றவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

Edappadi K. Palaniswami
Edappadi K. Palaniswami

முதலில் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடு சென்றுள்ள முதல்வர் அங்குள்ள பூங்காவை சுற்றிப் பார்க்கிறார். அதில் என்ன முதலீடு செய்ய முடியும். அங்கு செடிகளைத்தான் வாங்க முடியும்" என்றார் கொதிப்புடன்.