Published:Updated:

`மாவட்டத்துக்கு ஒரு குளம்... டார்கெட் நவம்பர்!' - கலக்கும் தமிழக காங்கிரஸ்

ந.பொன்குமரகுருபரன்

மாவட்டத்துக்கு ஒரு குளத்தைத் தூர்வார தமிழக காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்துள்ளது.

தேவந்தவாக்கம் குளம் தூர்வாரும் பணி
தேவந்தவாக்கம் குளம் தூர்வாரும் பணி

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்டத்துக்கு ஒரு குளத்தைத் தூர்வார முடிவெடுத்திருப்பதாகவும், இதற்கான செலவுகளை கடும் சிரமத்துக்கிடையில் சமாளிப்பதாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

இதுகுறித்து நம்மிடம் பேசிய கே.எஸ்.அழகிரி,``தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஓர் ஏவுகணையில் 100 கிலோ வெடிமருந்தை நிரப்பி விண்ணில் செலுத்தக்கூடிய அரசால், ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. ஒரு மாதத்துக்கு முன்னரே செய்திருக்க வேண்டிய இந்த நடவடிக்கையை, மிகக் காலதாமதமாக இப்போதுதான் செய்கின்றனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்டத்துக்கு ஒரு குளத்தைத் தூர்வாருவது என முடிவெடுத்துள்ளோம். தற்போதைக்கு 15 குளங்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரி எடுத்த மண்ணைக்கொண்டே அக்குளத்தின் கரையைப் பலப்படுத்துகிறோம். கடந்த ஜூலை 7-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம் தேவந்தவாக்கம் கிராமத்திலுள்ள ஐந்து ஏக்கர் குளத்தில், தூர்வாரும் பணியைத் தொடங்கினோம். ஒவ்வொரு குளத்தையும் தூர்வாருவதற்குக் குறைந்தது பத்து லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.

எங்கள் கட்சியில் இருப்பவர்கள் யாரும் பெரும் செல்வந்தர்கள் கிடையாது. தொண்டர்கள், பொதுமக்களின் பங்களிப்போடு இப்பணி நடைபெறுகிறது.

தேவந்தவாக்கம் குளம்
தேவந்தவாக்கம் குளம்

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர், நவம்பர் இறுதிக்குள் தமிழகம் முழுவதும் குறைந்தது 30 குளங்களையாவது தூர்வார தமிழக காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார்.

நீர் மேலாண்மையில் அரசையே நம்பியிருக்காமல், மாவட்டக் காங்கிரஸ் தலைவர்களே தீர்மானித்து, மாவட்டத்துக்கு ஒரு குளத்தை தூர்வார வேண்டுமென கட்சித் தலைமை பணித்துள்ளதாம்.

தூர்வாரும் பணி
தூர்வாரும் பணி

காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது, பிற கட்சிகளும் இதுபோன்று குளங்களைத் தூர்வாரினால், தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது.