Published:Updated:

வாரிசுகள் பராக்... பராக்! - காங்கிரஸில் களைகட்டிய சீட் குஸ்தி

காங்கிரஸில் களைகட்டிய சீட் குஸ்தி
பிரீமியம் ஸ்டோரி
காங்கிரஸில் களைகட்டிய சீட் குஸ்தி

ஒவ்வொரு தேர்தலிலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டே, ‘காமராஜர் ஆட்சியை அமைப்போம்’ என்று வெறுமனே மனசாட்சி இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

வாரிசுகள் பராக்... பராக்! - காங்கிரஸில் களைகட்டிய சீட் குஸ்தி

ஒவ்வொரு தேர்தலிலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டே, ‘காமராஜர் ஆட்சியை அமைப்போம்’ என்று வெறுமனே மனசாட்சி இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

Published:Updated:
காங்கிரஸில் களைகட்டிய சீட் குஸ்தி
பிரீமியம் ஸ்டோரி
காங்கிரஸில் களைகட்டிய சீட் குஸ்தி

சாதாரண நாள்களிலேயே காங்கிரஸில் கோஷ்டிப்பூசல்களும் தகராறுகளும் உச்சத்தில் இருக்கும். தேர்தல், கூட்டணி, சீட், தொகுதி என்று வந்துவிட்டால் கேட்கவா வேண்டும்? தி.மு.க-விடம் போராடி 25 தொகுதிகளை வாங்கியதைவிட, அந்த சீட்டுகளைப் பிரித்துக் கொடுக்கும் பிரச்னையில் படாதபாடு படுகிறது காங்கிரஸ் தலைமை. இதில், முக்கியத் தலைகளெல்லாம் தங்களின் வாரிசுகளுக்கு சீட் வாங்குவதிலேயே மும்முரம் காட்ட, கொந்தளித்துக்கிடக்கிறார்கள் நிர்வாகிகள்!

‘இந்த முறை தங்கள் ஆட்சி நிச்சயம்’ என்ற எண்ணத்திலிருக்கும் தி.மு.க., கூட்டணிக் கட்சிகளை இந்த முறை ஓவராகவே படுத்தி எடுத்துவிட்டது. 41-ல் சீட் பேரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் அழுது கண்ணீர்விட்டும்கூட ‘25 மேல் இல்லை’ எனக் கறார் காட்டிவிட்டார் ஸ்டாலின். வாங்கிய 25 தொகுதிகளைப் பிரிப்பதற்குள்ளாக காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த களேபரங்களோ ஏராளம். தமிழக காங்கிரஸ் சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்...

ஊர்வசி அமிர்தராஜ், கரியமாணிக்கம், திருமகன்
ஊர்வசி அமிர்தராஜ், கரியமாணிக்கம், திருமகன்

“ரத்தம் குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள்!”

‘``1967-ல் காமராஜரோடு முற்றுப்பெற்றுவிட்ட காங்கிரஸின் ஆட்சி, இன்றுவரை கைவந்து சேரவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டே, ‘காமராஜர் ஆட்சியை அமைப்போம்’ என்று வெறுமனே மனசாட்சி இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறோம். வருத்தமாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் இந்த அளவுக்குச் சென்றதற்குக் காரணம், கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிப்பூசல்கள்தான். கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, ப.சிதம்பரம், விஷ்ணுபிரசாத், ஜோதிமணி எனக் கோஷ்டித் தலைவர்களின் பட்டியல் அனுமாரின் வால்போல நீண்டுகொண்டே போகிறது. இம்முறை அழுது ஆர்ப்பாட்டம் செய்து எப்படியோ 25 தொகுதிகளைப் பெற்றுவிட்டார் அழகிரி. ஆனால், அதை தி.மு.க-விடமிருந்து பெறுவதற்கு அவர் பட்ட பாட்டைவிட, வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதற்குத்தான் அதிக பாடுபட்டார். முன்பு கோஷ்டித் தலைவர்கள் தங்களுக்கு சீட் கேட்டார்கள் என்றால், இன்று அவர்களின் வாரிசுகளுக்கு சீட் கேட்டு முட்டி மோதுகிறார்கள். ஒவ்வொரு தலைவரும் தங்களின் டெல்லி சோர்ஸ் மூலம் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு நச்சரித்துப் பெற்றிருக்கிறார்கள். இவ்வளவு சுயநலத்தோடு இருப்பவர்கள் எப்படி காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவார்கள்?

வேட்பாளர் தேர்வில் குளறுபடி நடந்துவந்ததால், செயல் தலைவரான விஷ்ணுபிரசாத் எம்.பி மார்ச் 13-ம் தேதி சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்குள்ளேயே கண்டன உண்ணாவிரதம் மேற்கொண்டார். விஷ்ணுபிரசாத்தைக் கண்டித்து, சத்தியமூர்த்தி பவன் உள்ளே அழகிரி ஆதரவாளர்கள் ‘உண்ணும் விரதம்’ என விநோதமான ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். அதே தினம், காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் இப்படிப்பட்ட குஸ்திகளை ஜோதிமணி எம்.பி வெளிச்சம் போட்டுக் காட்டினார். தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் கொந்தளித்துக்கொண்டிருக்கிற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு ஆகியவை வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன் பதில் இல்லை. தொண்டர்களின் ரத்தத்தைக் குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலைச் செவிமடுக்கவில்லை’ என்று பொங்கியெழுந்திருந்தார்.

மோகன் குமாரமங்கலம், ராமச்சந்திரன்
மோகன் குமாரமங்கலம், ராமச்சந்திரன்

‘இப்படி ஒவ்வொருவராகப் பொதுவெளியில் பேசத் தொடங்கினால் கட்சிப் பெயர் நாறிவிடும்’ என்று அஞ்சிய அழகிரி, டெல்லித் தலைமையிடம் சரணடைந்தார். அதன் பின்னர், டெல்லியில் வேக வேகமாகக் காய்கள் நகர்த்தப்பட்டன. ஒரே நாளில், 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் மூலம் அறிவித்தது டெல்லி தலைமை. அதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியை முன்னாள் எம்.எல்.ஏ ஊர்வசி செல்வராஜின் மகன் ஊர்வசி அமிர்தராஜுக்கும், திருவாடானைத் தொகுதியைத் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியின் மகன் கரியமாணிக்கத்துக்கும், ஈரோடு கிழக்குத் தொகுதியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகனுக்கும், ஓமலூர் தொகுதியை ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலத்துக்கும், அறந்தாங்கியை திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரனுக்கும் ஒதுக்கியிருக்கிறது காங்கிரஸ் தலைமை. இவர்கள் தவிர இன்னும் 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இத்தனை வாரிகளுக்கு சீட் கொடுக்கப்பட்டிருப்பதில் நிர்வாகிகளுக்கும் சரி, தொண்டர்களுக்கும் சரி உடன்பாடில்லை. எப்பேர்ப்பட்ட கட்சி... இன்றைக்கு `நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாட்டில் வருவதுபோல, கூத்தாடிக் கூத்தாடி போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார்கள். காமராஜர் ஆட்சி கனவாகவே போய்விடும்போல’’ என்றார்கள் களைப்பாக.

வாரிசுகள் பராக்... பராக்! - காங்கிரஸில் களைகட்டிய சீட் குஸ்தி

“எனக்கு வயதாகிவிட்டது; என் மகனுக்கு சீட் கொடுங்கள்!”

ஏன் இத்தனை வாரிசுகளுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது? கோஷ்டித் தலைவர் ஒருவரிடம் கேட்டோம். ‘‘கட்சியில் தொடர்ந்து பணியாற்றிவரும் திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியுற்றார். எனவே, அவருக்கு மீண்டும் இந்தத் தேர்தலிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. திருநாவுக்கரசரின் மகன் என்ற வாரிசு அடிப்படையில் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் (?!). அடுத்து, பெரியாரின் கொள்ளுப்பேரனும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம், ஈரோடு கிழக்கு என்பது அவருடைய சொந்தத் தொகுதி. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் பதவி வகித்தவர். அங்கே அவரைத் தவிர வேறு யாராலும் வெற்றி பெற முடியாது என்ற நிலையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

‘எனக்கு வயதாகிவிட்டது. எனவே, இம்முறை என் மகனுக்கு சீட் கொடுங்கள்’ என்று கே.ஆர்.ராமசாமி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவரின் மகன் கரியமாணிக்கத்துக்கு சீட் வழங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மூன்று தலைமுறையாக, கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக அவரின் குடும்பம் அப்பகுதியில் செல்வாக்குமிக்கவர்களாக இருக்கிறார்கள். அவரின் குடும்பத்தினரைத் தவிர வேறு ஒருவரை திருவாடானையில் நிறுத்தினால் ஜெயிக்கவே முடியாது. இந்தச் சூழ்நிலையில்தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி செல்வராஜ் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். அதே தொகுதி கிடைத்திருப்பதால், அவரின் மகன் ஊர்வசி அமிர்தராஜுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மோகன் குமாரமங்கலத்துக்கும் இதே காரணத்தின் அடிப்படையில்தான் சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. தொகுதியின் வெற்றி வாய்ப்பைக் கருத்தில்கொண்டுதான் சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது, இதில் பாரபட்சம் பார்க்கப்படவில்லை” என்றார் உஷ்ணமாக.

என்னதான் திறமை, செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு என்று கோஷ்டித் தலைவர்கள், வாரிசு அரசியலுக்கு முரட்டுத்தனமாக முட்டுக்கொடுத்தாலும் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் இன்னமும் கொந்தளிப்பு அடங்கியபாடில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism