Published:Updated:

“எல்லோரும் நினைக்கும்படியெல்லாம் காங்கிரஸ் செயல்பட முடியாது!”

கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி

- கறார் கே.எஸ்.அழகிரி...

“எல்லோரும் நினைக்கும்படியெல்லாம் காங்கிரஸ் செயல்பட முடியாது!”

- கறார் கே.எஸ்.அழகிரி...

Published:Updated:
கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி

சில நாள்களுக்கு முன்பாக, “சொத்து வரி உயர்வு முதல்வருக்குத் தெரியாமல் நடந்திருக்கும்!” என்று உடன்பிறப்புகளே மிரளும் வகையில் முரட்டு முட்டுக் கொடுத்திருந்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி. இந்த நிலையில்தான் அவரிடம் தேசிய அளவில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் சவால்கள், உட்கட்சிப் பிரச்னை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

“சோனியா கூட்டிய காங்கிரஸ் எம்.பி-க்கள் கூட்டத்தில், ‘காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது சவால்களை எதிர்கொள்கிறது; எனவே, ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறாரே... அந்த ஒற்றுமை சாத்தியம்தானா?

“பா.ஜ.க சாதி, மத, மொழி அடிப்படையில் மக்களைப் பிரித்து அரசியல் செய்கிறது. அப்படியான சூழலில் காங்கிரஸ் கடுமையாகப் போராடி, பிரித்தாளும் சூழ்ச்சியிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் எங்கள் தலைவர் அப்படி பேசியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் சித்தாந்தத்தால் நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழலில் அவர் எங்களை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னதில் ஆச்சர்யம் இல்லை. இப்போதும்கூட நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்!”

“ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்குள் நிலவும் கோஷ்டி மோதலை வைத்துத்தான் சோனியா அப்படிச் சொன்னதாக தகவல்கள் வருகின்றனவே?”

“இருக்கலாம்... காங்கிரஸ் கட்சி ஒரு கடல்போல, கிழக்கிலிருந்து மேற்கு வரை பரவியிருக்கிறது. சரத் பவாரும், சிவசேனா தலைவர்களும் ‘காங்கிரஸ் இல்லாத அகில இந்திய, மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாய்ப்பில்லை’ என்று சொல்லியிருக் கிறார்கள். அப்படி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் இயக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கடலில் அலைகள் ஏற்படுவது இயல்புதானே!”

“சரத் பவார் பேசுகிறார், சிவசேனா தலைவர்கள் பேசுகிறார்கள்தான்... ஆனால், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் கட்சி எதையும் செய்ததாகத் தெரியவில்லையே?”

“எங்கள் இளம் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எல்லோரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகளெல்லாம் ஒன்றுசேர வேண்டும் என்று சரத் யாதவைச் சந்தித்தபோது சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.”

“அப்படியானால் உங்கள் தலைவர்கள் ஏன் வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்கள்?”

“பேசவேண்டிய நேரத்தில் பேசுவார்கள்... எல்லோரும் நினைக்கும்படியெல்லாம் காங்கிரஸ் செயல்பட முடியாது. சிலர், பலம் குறைந்தால் ‘காங்கிரஸ் வேண்டும்’ என்பார்கள், கொஞ்சம் பலம் கிடைத்துவிட்டால், ‘காங்கிரஸ் வேண்டாம்’ என்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் என்ன சொல்கிறார்கள் எனப் பார்த்துப் பார்த்து நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. எல்லாவற்றிலும் எது சிறந்ததோ அந்த பதிலை, சரியான நேரத்தில் நாங்கள் விரைவில் சொல்வோம்.”

“எல்லோரும் நினைக்கும்படியெல்லாம் காங்கிரஸ் செயல்பட முடியாது!”

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சேர்க்கையில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

“உறுப்பினர் சேர்க்கை ஒரு வாரமாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது. அதற்குள்ளாகவே ஐந்தரை லட்சம் பேர் சேர்ந்திருக்கிறார்கள். இதுவே பெரிய எண்ணிக்கைதான். இதற்கு முன்பு நடந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையில்கூட ஏழரை லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் கவனம் செலுத்தியதால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை. விரைவில் கூடுதலாக உறுப்பினர்களைச் சேர்ப்போம்.”

“இளைஞர் காங்கிரஸ் தேர்தல் முறையாக நடக்கவில்லை. அது தொடர்பான புகார்கள் குறித்து நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றெல்லாம் புகார்கள் எழுந்தனவே?”

“யார் சொன்னார்கள்? எந்த முறைகேடும் நடக்கவில்லை; யாரும் புகார் அளிக்கவில்லை. தேர்தல் மூலமாகத்தான் தலைவர்களும், துணைத் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். நானோ, ராகுலோ அவர்களை நியமிக்கவில்லை. தேர்தல்கூட இணையத்தில்தான் நடத்தப்பட்டது. எனவே முறைகேடு நடந்திருக்க நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை.”

“தமிழ்நாட்டில் பால் பொருள்கள் விலை உயர்ந்திருக்கின்றன, சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது... இது பற்றி உங்கள் கருத்து..?”

“தமிழ்நாட்டில் பால் விவசாயிகள் ஏழைகளாக இருக்கிறார்கள். மத்திய அரசின் வரி விதிப்பால் தீவன விலை உயர்ந்துள்ளது. அதனால், பால் விலையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதை அரசாங்கம் அனுமதிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விலை உயர்வைத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சொத்து வரி குறைவுதான். ஆனால் 150 சதவிகிதம், 100 சதவிகிதம் என்பது மக்களுக்குச் சிரமத்தைக் கொடுக்கும் என்பதால் படிப்படியாக உயர்த்த வேண்டும் என்ற மாற்றுக்கருத்தைச் சொல்லியிருக்கிறோம்.”

“ஆனால், முன்னதாக ‘சொத்து வரி விதிப்பு முதல்வருக்குத் தெரியாமல் நடந்திருக்கும்’ என்று சொன்னீர்களே?”

“முதல்வருடன் பெரிய அளவில் விவாதித்து, ஆழமாகக் கருத்து பரிமாற்றம் செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்களா என்று தெரியவில்லை என்ற அடிப்படையில்தான் அந்தக் கருத்தைச் சொன்னேன். முதலில் அறிவித்துவிட்டு, பிறகு முதல்வருடன் பேசியிருக்கலாம். சில நேரங்களில் சில விஷயங்களை அமைச்சர்களே முடிவு செய்து அறிவிப்பார்கள். பிறகு முதல்வர், அவர்களை அழைத்து விசாரிப்பார். சொத்து வரி விதிப்பு விவகாரத்திலும் இப்படி நடந்திருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். எனவே நான் சொன்னது பிழையல்ல!”

“வருகின்ற ஜூன் மாதத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகள் தமிழ்நாட்டில் காலியாகின்றனவே... என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”

“ஆமாம்... அதில் ஒன்றை காங்கிரஸ் கட்சிக்கு வேண்டும் என்று தி.மு.க-விடம் நிச்சயமாகக் கேட்போம். அதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism