அரசியல்
அலசல்
Published:Updated:

15 தொகுதிகளுக்கும் மேலேயே கேட்போம்! - கறார் கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
News
கே.எஸ்.அழகிரி

கடந்த காலங்களில் பல்வேறு வெற்றி தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம். அந்த அனுபவம் எங்களுக்கு இருக்கிறது.

`தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை மாற்ற வேண்டும்’ என்ற குரல் கட்சிக்குள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. கூடவே, கூட்டணி முரண்பாடுகள் வேறு. இந்தப் பின்னணியில் கே.எஸ்.அழகிரியிடம் ஒரு நேர்காணல்...

“ `தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பொறுப்பிலிருந்து உங்களை மாற்ற வேண்டும்’ என்ற குரல் வலுக்க ஆரம்பித்திருக்கிறதே?”

“பொதுவாக, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்தான். சிலநேரம் ஓராண்டு மட்டும் நீட்டிக்கப்படலாம். ஆனால், நான் தலைவராகப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிந்து, ஐந்தாவது ஆண்டு தொடங்கவிருக்கிறது. எனவே, ‘விருப்பமுடையவர்கள் வாருங்கள். தலைமையேற்று நடத்துங்கள்’ என்றுதான் நானும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால், சில நண்பர்கள் என்னை அதிரடியாக மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். பொறுப்பு வேண்டும் என்பதற்காகவோ, கிடைத்த பொறுப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவோ நான் எப்போதும், யாரிடமும் யாசித்ததில்லை.இப்போதும் அப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.”

15 தொகுதிகளுக்கும் மேலேயே கேட்போம்! - கறார் கே.எஸ்.அழகிரி

“ஆனால், எட்டுவழிச் சாலை, பரந்தூர் விமான நிலையம் என நாட்டில் ஏராளமான பிரச்னைகள் இருக்க, அது குறித்தெல்லாம் எந்தக் கருத்தும் சொல்லாமல், பதவியைக் காப்பாற்றிக்கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கிறீர்கள் என்கிறார்களே?”

“எட்டுவழிச் சாலை வேண்டாம் என அ.தி.மு.க ஆட்சியிலேயே நான் சொன்னதில்லை. எத்தனை சாலைகளை புதிதாகக் கொண்டுவர முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. புதிய புதிய விமான நிலையங்கள் வந்தால்தான் தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைய முடியும். அதுவும் சென்னையைச் சுற்றி நிச்சயமாகக் கூடுதல் விமான நிலையம் தேவை.”

“இப்படி நீங்கள் தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பேசுவதே பதவியைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் என்கிறார்களே?”

“சமீபத்தில் டெல்லியில் நடந்த உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். ‘மதச்சார்பற்ற கூட்டணியை பலப்படுத்த வேண்டும்’ என்பதுதான் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே எங்களுக்குப் போட்ட உத்தரவு. எனவே, தேவை யில்லாமல் நான் யாரையும் இகழ்வதுமில்லை, பொருளற்று யாரையும் புகழ்வதுமில்லை. எனக்கு இந்தப் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளவே ஆசையில்லை எனும்போது, அதற்காக யாரையும் பாராட்ட வேண்டிய தேவையுமில்லை.”

“நாடாளுமன்றத் தேர்தலில் 15 சீட்-கள் கேட்போம் என்கிறீர்களே... இது பேராசை இல்லையா?”

“தமிழ்நாட்டில் அத்தனை தொகுதியிலும் போட்டியிட்ட கட்சிதான் காங்கிரஸ். அதோடு ஒப்பிடும்போது 15 தொகுதி அதிகமல்ல. இதைவிடக் கூடுதலாகத் தொகுதிகளை ஒதுக்கச் சொல்லிக்கூடக் கேட்போம். அதற்காகத்தான் ‘நாம் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். அமைப்புரீதியிலாக நம்மை பலப்படுத்திக்கொண்டால் இன்னும் கூடுதல் தொகுதிகள் கேட்கலாம்’ எனக் கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறேன். கொடுப்பார்களா, மாட்டார்களா என்பது இப்போதைக்குத் தேவையில்லாத பேச்சு.”

“காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர், பா.ஜ.க-வுக்குப் போவதற்காகப் பேசிக்கொண்டிருக்கிறாராமே?”

“செய்திகள் வருகின்றன. ஆனால், அது உண்மையா, முக்கியமானதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். காங்கிரஸ் ஒரு கடல். அதில் எந்த மீன் துள்ளுகிறது, எது அமைதியாக இருக்கிறது என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.”

“ ‘கனிமொழிக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்’ என்று சீமான் கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து?”

“சீமானின் வழக்கமான பொருளற்ற பிதற்றல் இது. ‘விதவைகளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் எனப் பேசினேன். உடனே ஒருவன் என்னிடம் வந்து, `ஏன் உங்கள் பாட்டிக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை?’ எனக் கேட்டான். இளம்பெண்கள் விதவையானால் அவர்களுக்கு மறுமணம் செய்துவையுங்கள் எனச் சொன்னேனே தவிர, பாட்டிகளையெல்லாம் பிடித்துத் திருமணம் செய்துவையுங்கள் எனச் சொல்லவில்லை’ எனப் பெரியார் கூறினார். அதே மாதிரி பெண்ணுரிமை என்பதற்காக எதையாவது உளறக் கூடாது. எந்தப் பொறுப்புக்கும் கனிமொழி தகுதியுடையவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கனிமொழியே அதைப் பற்றிக் கேட்காதபோது சிண்டு முடியும் வகையில் சீமான் கேட்பதுதான் நகைச்சுவையாக இருக்கிறது.”

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சி வழக்கம்போல தூங்குகிறதே?”

“நாங்கள் எப்போதோ களப்பணியைத் தொடங்கிவிட்டோம். கட்சியின் செயல்வீரர் களையும், வாக்குச்சாவடி உறுப்பினர்களையும் தயார்படுத்திக்கொண்டிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் 72 சதவிகிதமாக இருந்த எங்களின் வெற்றி விகிதத்தை இந்தத் தேர்தலில் 100 சதவிகிதமாக மாற்ற வேண்டும். அதை நோக்கித்தான் ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.”

“நேரு குறித்து நீங்கள் அவதூறாகப் பேசியதாக தலைமைக்குப் புகார் அனுப்பியிருக்கிறாரே விஷ்ணுபிரசாத்?”

“வழக்கம்போல நான் பேசியதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.”

“கட்சிக்குள் இவ்வளவு பிரச்னைகளை வைத்துக்கொண்டு ராகுலைப் பிரதமர் ஆக்குவோம் எனப் பேசுகிறீர்களே, எப்படிச் சாத்தியமாகும்?”

“ஏன் சாத்தியமாகாது... அரசியல் என்பதே வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில் செயல்படுவதுதானே... இமாலய பலத்தோடு இருந்த காங்கிரஸை வெற்றிகொண்டு பா.ஜ.க ஆட்சி அமைத்ததுபோல, பா.ஜ.க-வை வீழ்த்தி நாங்கள் ஆட்சி அமைப்பதும் எளிது. கடந்த காலங்களில் பல்வேறு வெற்றி தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம். அந்த அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ராகுல் காந்தியைப் பிரதமராக்குவோம். அதில் மாற்றுக் கருத்தில்லை.”