அரசியல்
Published:Updated:

‘‘என் பேச்சைக் கேட்க யார் வருவார்கள்?’’

கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
News
கே.எஸ்.அழகிரி

கேட்கிறார் கே.எஸ்.அழகிரி

‘அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக யாரை நியமிப்பது?’ என்ற கேள்விக்கு விடைதேடி, கட்சியின் மூத்த தலைவர்கள் முட்டிமோதிக் கொண்டிருந்த நேரத்தில்தான், ‘தமிழக வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள்’ என்று வெந்த புண்ணில் வேல் சொருகிவிட்டுச் சென்றிருக்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் பேசினோம்...

‘‘நீட், மீத்தேன், இந்தித் திணிப்பு... என ஏற்கெனவே காங்கிரஸ் ஆரம்பித்துவைத்த திட்டங்களை இன்றைக்கு அதே காங்கிரஸ் எதிர்ப்பதென்பது நாட்டின் வளர்ச்சிக்குத் தடைதானே... ஜே.பி.நட்டா சொன்னதில் என்ன தவறு?’’

‘‘இது தவறான கண்ணோட்டம். `நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களில் அதைத் திணிக்கத் தேவையில்லை’ என்று ராகுல் காந்தி மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களிலெல்லாம் இதுவரை ஒரு தேசியக் கொள்கை உருவாக்கப்படவில்லை. எனவே, ஆதரவும் எதிர்ப்புமாகக் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. `விவசாயிகள், உள்ளூர் மக்கள் விரும்பாதவரை அவர்கள்மீது இந்தத் திட்டங்களைத் திணிக்க வேண்டாம்’ என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

நேரு காலத்தில், ‘பெரும்பான்மையான மக்கள் இந்தி பேசும்போது, சிறுபான்மையாக இருக்கிற மக்களும் ஏன் இந்தி பேசக் கூடாது’ என்ற வாதம் தோன்றியது உண்மை. ஆனால், இந்தி பேசாத மாநிலங்கள் இதைக் கடுமையாக எதிர்த்ததையடுத்து, ‘இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிறவரை ஆங்கிலமும் தொடர்பு மொழியாக இருக்கும்’ என்று அறிவித்தார் நேரு. இந்தித் திணிப்பை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி ஆதரித்ததில்லை!’’

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

‘‘ `காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்திதான் தலைவராக வேண்டும்’ என மீண்டும் மீண்டும் குடும்ப அரசியலையே ஏன் வற்புறுத்துகிறீர்கள்?’’

‘‘ஒருவருடைய தியாகத்தை, உழைப்பை, செயல்பாட்டைச் சிறுமைப்படுத்தும் விதமாகத்தான் ‘குடும்பம்’ என்று சொல்லிக் கொச்சைப்படுத்துகிறீர்கள். என்னைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியே ஒரு குடும்பம்தான்!

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பிரதமர் பொறுப்பு தேடிவந்தபோதும்கூட, ஏற்க மறுத்தவர் சோனியா காந்தி. தொண்டர்கள் உணர்ச்சிபூர்வமாகத்தான் பார்க்கிறார்கள்.இன்றைக்கு நான் போய் பீகாரில் பேசினால், என் பேச்சைக் கேட்க யார் வருவார்கள்? ஆனால், ராகுல் காந்தி பேசினால், லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ஒரு கட்சியின் தலைமை இவ்வாறுதான் உருவாகிறது. இந்தியா முழுமைக்குமான காங்கிரஸ்காரர்களை உறுதியாகப் பிணைக்கக்கூடிய சக்திகள் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும்தான்!’’

“காங்கிரஸிலும் தனி மனிதத் துதிதான் தூக்கி நிறுத்தப்படுகிறதா?’’

“அப்படியில்லை... சுதந்திரப் போராட்ட காலத்தில், மகாத்மா காந்திதான் ஒட்டுமொத்த தேசத்துக்குமே உத்வேகம் அளிக்கக்கூடிய மனிதராகச் செல்வாக்கோடு வலம்வந்தார். இதைத் தனி மனிதத் துதி என்று பார்க்க முடியுமா? தரம் இல்லாத ஒருவரை, தகுதிக்குமீறி தூக்கி நிறுத்துவதுதான் தனி மனிதத் துதி!’’

‘‘2019 தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ததோடு, ‘மீண்டும் கட்சித் தலைவராக வருவதில் எனக்கு விருப்பம் இல்லை’ என ராகுல் காந்தியே சொல்லிவிட்டாரே..?’’

‘‘1956-ல், அரியலூரில் மிகப்பெரிய ரயில் விபத்து நிகழ்ந்தது. உடனே விபத்துக்குப் பொறுப்பேற்று அன்றைக்கு ரயில்வே கேபினெட் அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியும், இணையமைச்சர் அழகேசனும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அரியலூரில் ரயில் கவிழ்ந்ததற்கும் டெல்லியிலிருந்த இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இதை ஒரு நாகரிகமான செயல்பாடாகத்தான் பார்க்க வேண்டும். `எது நடந்தாலும் நான் என் நாற்காலியை விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்றில்லாமல், பொறுப்புணர்வோடு செயல்பட்டிருக்கிறார் ராகுல் காந்தி.”

‘‘ `காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும்’ என்று மூத்த தலைவர்கள் கடிதம் எழுதுவதையே, ‘பா.ஜ.க தூண்டுதலில் செயல்படுகிறார்கள்’ என்று குற்றம்சாட்டுவது நியாயம்தானா?’’

‘‘ `நிரந்தர தலைவர் வேண்டும்’ என்ற வார்த்தையே தேவையற்றது. அப்படியோர் உணர்வு எனக்கு இருக்குமானால், அதைத் தனிப்பட்ட முறையில் தலைவரிடம் நேரில் தெரிவிக்கலாம். மாறாக, அதை ஒரு கடிதமாக எழுதி, விவாதப் பொருளாக்கி, பொதுவெளிக்கு கொண்டுவருவது எனக்கு ஏற்புடையது அல்ல. ‘பா.ஜ.க தூண்டுதலால்தான் செயல்படுகிறார்கள்’ என்று எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை’ என ராகுல் காந்தியே மறுத்திருக்கிறார்.’’

‘‘ராகுல் காந்தி அப்படிச் சொல்லவில்லையெனில், ‘பா.ஜ.க-வுடன் எனக்குத் தொடர்பிருப்பதாக நிரூபித்தால், அரசியலைவிட்டே விலகத் தயார்’ எனக் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற கபில் சிபல் கோபப்பட்டது ஏன்?’’

‘‘இது தவறான செய்தி. கபில் சிபல், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினரே அல்ல. ஆனால், சில ஊடகத்தினர்தான் ‘கபில்சிபல் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றார்’ எனத் திட்டமிட்டே செய்திகளைப் பரப்புகிறார்கள். இதன் பின்னணியில் பா.ஜ.க-வின் அழுத்தம் இருக்கிறது.’’

‘‘என் பேச்சைக் கேட்க யார் வருவார்கள்?’’

‘‘ப.சிதம்பரமும், ‘கட்சியில் எல்லாமே சரியாக இருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன்’ என்கிறார். மேல்மட்டத் தலைவர்கள் அனைவரிடமுமே கட்சி பற்றிய அதிருப்தி நிலவுகிறதா?’’

‘‘காங்கிரஸ் போன்ற அதீத சுதந்திரமுடைய பேரியக்கத்தில், மாற்றுக் கருத்துகளைக் கொண்டோர் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், அவை கடிதங்களாக, விவாதங்களாகப் பொதுவெளியில் வரக் கூடாது என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து!’’

‘‘தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் போன்றோர் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் வெளிப்படையாக முரண்படுகிறார்களே..?’’

‘‘இருவருமே காங்கிரஸ் கட்சியின் பிரதான கொள்கைகளுக்கு எதிராக ஒருபோதும் பேசியது கிடையாது. சில விஷயங்களில் கட்சியின் மத்தியத் தலைமை முடிவெடுக்காதவரையில் தனிப்பட்ட கருத்துகள் எல்லோருக்குமே இருக்கலாம். ஆனால், கட்சி ஒருமனதாக ஒரு முடிவெடுத்துவிட்ட பிறகு, தங்கள் சொந்தக் கருத்தை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்!’’