Published:Updated:

எதிர்க்கட்சியினர்கூட இவ்வளவு குடைச்சல் கொடுப்பதில்லை! - கே.எஸ்.அழகிரி ‘குமுறல்’ பேட்டி...

கே.எஸ்.அழகிரி.
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி.

கே.எஸ்.அழகிரி

எதிர்க்கட்சியினர்கூட இவ்வளவு குடைச்சல் கொடுப்பதில்லை! - கே.எஸ்.அழகிரி ‘குமுறல்’ பேட்டி...

கே.எஸ்.அழகிரி

Published:Updated:
கே.எஸ்.அழகிரி.
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி.

தி.மு.க கூட்டணியில் ஒருசில இடங்களில் மட்டுமே கவுன்சிலர் பதவி களுக்கு சீட் ஒதுக்கப்பட்ட நிலையிலும், சற்றும் மனம் தளராமல் விறுவிறு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. அவரிடம் காங்கிரஸ் கட்சித் தலைமையில் நிலவும் பிரச்னை தொடங்கி தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி யில் சீட் பெற முடியாதது வரை பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.

“உங்கள் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல், ‘காங்கிரஸ் கட்சிக்கு உரிய தலைமை இல்லை’ என்று விமர்சித்திருக்கிறாரே?”

“கபில் சிபலின் விமர்சனம் தவறானது; உள்நோக்கம் உடையது. சோனியா காந்தி, ராகுல் காந்தியைத் தவிர காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேறு தலைமை இல்லை. எதிர்க்கட்சியினர்கூட எங்களுக்கு இவ்வளவு குடைச்சல் தருவதில்லை. எங்கள் கட்சியில் இருப்பவர்கள்தான் ‘தலைவர் இல்லை... தலைமை இல்லை’ என்றெல்லாம் பெரிய பிரச்னை ஆக்குகிறார்கள். கபில் சிபல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர். சோனியா காந்திக்கு நெருக்கமானவர். அப்போதும் கட்சியில் பிரச்னைகள் இருந்தனதான். அப்போதெல்லாம் அவர் பிரச்னைகளைப் பற்றிப் பேசவில்லை. இப்போதும் சோனியா, ராகுல் காந்தியிடம் அவர் தொடர்பில்தான் இருக்கிறார். ஆனால், அவர்களிடம் நேரடியாகப் பேசாமல் பொதுவெளியில் அவர் பேசியிருப்பது, பா.ஜ.க-வின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகத்தான் இருக்கிறது.”

“காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் பிரச்னைகள் தொடர்பாக சோனியா, ராகுல் காந்தி வாய் திறக்கவே இல்லையே?”

“ஒரு பெரிய இயக்கத்தில் இப்படியான விமர்சனங்களுக்குத் தலைவர்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அப்படி பதில் சொல்லிக்கொண்டிருந்தால் தலைவர்களுக்கும், விமர்சனம் செய்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.”

“தலைவர்கள் பேசவே இல்லையென்றால் உட்கட்சிப் பிரச்னைகளுக்கு எப்படித்தான் தீர்வு கிடைக்கும்?”

“இதை உட்கட்சிப் பிரச்னை என்று சொல்ல வேண்டாம். அதைவிட மோசமானது. கூடவே இருந்து குழி பறிப்பது. அதனால், தலைவர்கள் பேசத் தேவையில்லை.”

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உங்களை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்கவிருப்பதாகத் தகவல்கள் பரபரக்கின்றனவே?”

“இப்போதைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. அப்படி மாற்றப்படும் சூழல் வரும்போது கட்சித் தலைமைக்குக் கட்டுப்படுவது எனது கடமை.”

“சரி, ஒருவேளை உங்களைத் தலைவர் பதவியிலிருந்து விடுவித்தால், அடுத்து யார் தலைவராக வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?”

“அடுத்த தலைவர் ஒரு பெண்ணாகவோ, தலித்தாகவோ, இளைஞராகவோ இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இவர்களால்தான் கட்சியை அடுத்தடுத்த தளங்களுக்குக் கொண்டுசெல்ல முடியும். வயதானவர்கள் வேண்டாம் என்று நினைக்கிறேன். வயது முதிர்ந்தவர்கள் செயல்படுவதில் சிரமம் இருக்கிறது.”

“ஊரக உள்ளாட்சித் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது தி.மு.க உங்கள் கட்சியினரை மதிக்கவே இல்லை... சீட் பங்கீட்டிலும் எதையும் தரவில்லை என்றெல்லாம் பேச்சுகள் எழுந்திருக்கின்றனவே?”

“எல்லா அரசியல் கட்சியினருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகப் பிரச்னைகள் இருக்கின்றனதான்... அதையெல்லாம் பேசி பேசித்தான் முடிவுக்குக் கொண்டுவர முடியும். ஆம்பூர், பேரணாம்பட்டு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தி.மு.க-வைச் சேர்ந்த சிலர் என்னைச் சந்தித்தார்கள். அவர்களில் ஒருவர், ‘இந்த ஏரியாவில் நீண்ட நாள்களாகப் பணியாற்றிவருகிறேன். நான் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவேன். ஆனால், எனக்குக் கொடுக்காமல் கூட்டணிக்குக் கொடுத்துவிட்டார்கள். இப்போதுகூட நீங்கள் நினைத்தால் மாற்றிக் கொடுத்துவிடலாம்’ என்று கண்ணீர்விட்டார். இப்படிப் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு கூட்டணியின் வெற்றியை நோக்கித்தான் நாம் செல்ல வேண்டும். அதுதான் நேர்மையானது!”

எதிர்க்கட்சியினர்கூட இவ்வளவு குடைச்சல் கொடுப்பதில்லை! - கே.எஸ்.அழகிரி ‘குமுறல்’ பேட்டி...

“இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தலுக்கும் கூட்டணி அவசியமா?”

“உள்ளாட்சித் தேர்தலுக்குக் கூட்டணி தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஊராட்சி மன்றத் தேர்தலில் கட்சி சின்னத்தில் நிற்காதவர்களே அதிகம் போட்டியிடுகிறார்கள்... உள்ளூர் அளவில்தான் யார் சிறந்தவர், யார் மக்களுக்கு உதவி செய்வார்கள் என்பதைப் பார்த்து வாக்களிப்பார்கள்.”

“இவ்வளவு சொல்லும் நீங்கள் ஏன் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடவில்லை?”

“தனித்துப் போட்டியிட்டிருக்கலாம்தான்... தவறில்லை. ஆனால், அதை நான் மட்டுமே முடிவு செய்ய முடியாது இல்லையா... ஒட்டுமொத்தக் கட்சியும், கட்சித் தலைமையும் எடுக்க வேண்டிய முடிவு அது.”

“காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் காலூன்ற தி.மு.க என்ற கட்சியின் தேவை இருக்கிறதா?”

“இந்தியா முழுவதும் கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியாலும் பயணம் செய்ய முடியாது. தேர்தல் வெற்றிக்குக் கூட்டணி அவசியம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசியக்கட்சிகளைவிட திராவிடக் கட்சிகள் அமைப்புரீதியில் பலம் வாய்ந்தவை. ஆனாலும் அவர்களால்கூட தேர்தலில் தனித்துப் போட்டியிட முடியவில்லை... அவர்களிடம் சென்று ‘ஏன் கூட்டணி அமைக்கிறீர்கள், தனித்துப் போட்டியிடலாமே?’ என்று கேட்டிருக்கிறீர்களா? எல்லாக் கேள்விகளையும் எங்களிடம்தான் ஈஸியாகக் கேட்டுவிடுகிறீர்கள்!”

“சரி, ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கிறது?”

“நான்கு மாத ஆட்சிக்காலத்தில் மக்கள் எந்தக் குறையும் இருப்பதாகச் சொல்லவில்லை. ‘கட்சி சார்ந்த அரசாக இல்லாமல் பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாக தி.மு.க இருக்கிறது’ என்று அதன் சித்தாந்தத்தை விரும்பாதவர்கள்கூட பாராட்டுகிறார்கள். அதனால், தி.மு.க தலைமையிலான எங்கள் கூட்டணி 100 சதவிகித வெற்றியைப் பெறும்.”