Published:Updated:

`கமல்ஹாசன் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம்!' - சிலிர்க்கும் பீட்டர் அல்போன்ஸ்

ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசனை, காங்கிரஸ் கூட்டணிக்குள் வருமாறு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொதுக்கூட்டங்கள், கிராமசபைக் கூட்டம் என தி.மு.க., அ.தி.மு.க தொடர்ச்சியாக மக்களைச் சந்தித்துவருகின்றன. தேசியக் கட்சிகளாக பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளும் தமிழக அரசியலில் கவனம் குவித்துவருகின்றன. குறிப்பாக, எளிமையான மக்கள் சந்திப்புகளால் அனைவரையும் ஈர்த்துவருகிறார் ராகுல் காந்தி.

இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸை நேரில் சந்தித்தேன்...

ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்
ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்

``தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்துவரும், காங்கிரஸ் கட்சி தனித்தே தேர்தல் பிரசாரம் செய்துவருகிறதே... என்ன காரணம்?''

``இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. தேர்தல் பிரசாரம் என்று களம் மாறுகிறபோதுதான் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி மக்களைச் சந்திப்பார்கள். தற்போதைய சூழலில், மக்களை நேரடியாகச் சந்தித்து ஆட்சி அதிகாரத்தின் அவலங்களை எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, தன்னுடைய சக்திக்கு உட்பட்டு காங்கிரஸ் கட்சியும் கூட்டங்களை நடத்திவருகிறது. இதேபோல், தி.மு.க தரப்பிலும் `கிராமசபைக்கூட்டம்', 'விடியலை நோக்கி', `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்று தொடர்ச்சியாக மக்களை சந்தித்து வருகின்றனரே...''

``வருகிற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டம்தான் என்ன?''

``இன்றைக்கு இந்தியாவில், பா.ஜ.க-வின் வலதுசாரி சித்தாந்தங்களும், அவர்களது மதம் சார்ந்த அணுகுமுறைகளும் மக்கள் மத்தியில் எடுபடாத மாநிலங்களில், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் கேரளாவும் முக்கியமான இடத்தில் இருக்கின்றன. எனவே, வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலைப் பயன்படுத்தி எப்படியாவது தமிழ்நாட்டில் காலூன்றிவிட வேண்டும் என்று பா.ஜ.க-வும் முழுப் பிரயத்தனம் செய்துவருகிறது. ஆனால், `தமிழக மக்களுக்கு ஒரு நல்ல அரசு கிடைப்பதற்கு நாங்கள் உதவி செய்வோம்' என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். எனவே, பா.ஜ.க தமிழ்நாட்டில் தத்துவார்த்தரீதியாக காலூன்றுவதற்கான ஏற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதும் காங்கிரஸின் வேலை!''

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

``தமிழக பா.ஜ.க இந்தத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளும் என்று நினைக்கிறீர்கள்?''

``தமிழக அரசியல் சூழலில், தி.மு.க., அ.தி.மு.க என இந்த இரண்டு திராவிடக் கட்சிகளின் கைகளில்தான் 85% இடங்கள் இருக்கின்றன. 10% இடங்களில் காங்கிரஸ் கட்சியும், மீதமுள்ள 5% மற்ற சின்னச் சின்ன கட்சிகளும் இருந்துவருகின்றன. இந்தச் சூழலில், புதிதாக உள்ளே வரும் பா.ஜ.க-வுக்கு தி.மு.க., அ.தி.மு.க என இந்த இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியை இந்தத் தேர்தலோடு முடித்துக்கட்ட வேண்டும். இதில் தி.மு.க மீது அவர்கள் கைவைக்க மாட்டார்கள். ஏனெனில், தி.மு.க என்ற ஒரு கட்சி களத்தில் இருந்தால்தான், `இது இந்து விரோத கட்சி' என்ற பெயரில் ஓர் எதிரியைப் பொய்யாகக் கட்டமைத்து, அவர்கள் வெற்றிபெற முடியும். அதன் பிறகு அவர்கள் சார்ந்து நின்றுகொண்டிருக்கும் கட்சியையே முழுமையாக ஆக்கிரமித்து, அதையும் பா.ஜ.க-வாக மாற்றிவிடுவார்கள். இதுதான் இந்தியா முழுக்க அவர்கள் பயன்படுத்திவரும் சித்தாந்தம்!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``மதச்சார்பற்றக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளும்கூட நேரடியாக மதவாதத்தை எதிர்த்து நிற்கத் தயங்குவது ஏன்?''

``பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை எதிர்த்து நிற்கக்கூடிய துணிச்சல் இந்திய அரசியலிலேயே வெகு சிலருக்கு மட்டுமே இருந்தது. அதாவது, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி வரையிலான தலைவர்கள்தான் பா.ஜ.க-வின் இந்தச் சித்தாந்தத்தை நேரடியாக எதிர்த்து நிலைத்து நின்றிருக்கிறார்கள். இந்துக்கள் மட்டுமன்றி கிறிஸ்தவர், இஸ்லாமியர் என அனைத்துத் தரப்பு மக்களுமே மதம் சார்ந்தவர்களாகத்தான் இந்த மண்ணில் வாழ்ந்துவருகிறார்கள். இந்தச் சூழலில், மதத்தை எதிர்த்து அரசியல் கட்சி நடத்துவது என்பது வாக்குவங்கி அரசியலுக்கு உகந்ததாக இல்லை.''

கருணாநிதி
கருணாநிதி

``மதவாதத்துக்கு எதிரான அரசியலை கருணாநிதி வரையிலான தலைவர்கள் மிகச்சரியாக எதிர்கொண்டு வெற்றிபெற்றிருக்கிறார்கள்தானே?''

``மதவாதத்தை எதிர்கொள்வதில், ஒவ்வொரு தலைவருக்குமிடையே வித்தியாசங்கள் உண்டு. மகாத்மா காந்தியடிகள் 100% உண்மையான - நேர்மையான இந்து. ஆனால், `உன் மதம் உனக்கு, என் மதம் எனக்கு' என்ற அவரது கொள்கையால் அவரையும்கூட இந்துத்துவவாதிகள் எதிர்த்தனர். ஆனாலும்கூட `ராம்' என்ற பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட 25 வருடங்களாக, இந்த மதவாதிகள் அரசியலின் மையப்பகுதிக்குள் வந்துவிட்டாமல் தடுத்தாண்டு வெற்றிபெற்றார்.

படேல், சுபாஷ் சந்திரபோஸைவிடவும் மதம் சார்ந்த அரசியலில் தன்னை இழந்துவிடாமல், அடித்தட்டு மக்களின் நலன் நாடுகிற அரசியல்வாதியாக ஜவஹர்லால் நேருவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டதால்தான் அவரையே தன்னுடைய அரசியல் வாரிசாக காந்தி சுவீகாரம் எடுத்துக்கொண்டார்.

இன்றைய சூழலைப் போன்று தத்துவார்த்தரீதியிலான நெருக்கடியோ, மாநில அதிகாரங்கள் முழுவதையும் தங்களின் கைகளில் வைத்துக்கொண்டு மாநில அரசை ஓர் அடிமைபோல் நடத்திவருகிற மத்திய அரசோ கருணாநிதியின் காலகட்டத்தில் வாய்க்கவில்லை. `எமர்ஜென்ஸி' என்ற ஒரு சிறு தடங்கல் மட்டும் ஏற்பட்டது... ஆனால், அதையும்கூட பின்னர் கருத்தியல்ரீதியாக சரிப்படுத்திக்கொண்டார்கள். எனவே, கருணாநிதியின் காலகட்டமே வேறு!''

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

``மத்திய அரசின் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதைவிடவும், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியே ட்விட்டர் வழியே கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?''

``அதனால்தான் இப்போது ட்விட்டர் கணக்குகளையும் மத்திய அரசு முடக்க ஆரம்பித்துவிட்டது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவந்த பத்திரியாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. கிராமத்து டீக்கடைகளில் உட்கார்ந்து பேப்பர் படிக்கும் சாமான்யனுக்கு மத்திய அரசின் பட்ஜெட் குறித்த உண்மையான தகவல்கள் போய்ச் சேரவில்லை. சமையல் எண்ணெய், பிஸ்கட், உரம் என தான் அன்றாடம் பயன்படுத்துகிற பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறது என்பது அந்த சாமான்யனுக்கு கடையில் போய் பொருளை வாங்கும்போதுதான் தெரியவரும்.

கொரோனா நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில், மாதம் 3,000 ரூபாய்கூட சம்பாதிக்க முடியாத சாமான்யர்கள் பயன்படுத்துகிற பொருள்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. ஆனால், நாட்டிலுள்ள பெரும் பணக்காரர்களுக்கான வரிவிதிப்புகள் குறைக்கப்படுகின்றன. இவையெல்லாம் ஊடகத்தில் செய்தியாக வெளிவர முடியாத அளவுக்கு ஜனநாயகத்தையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது மத்திய பா.ஜ.க அரசு. ஆக, இந்த உண்மையெல்லாம் சாமான்ய மக்களுக்கு எப்போது தெரியவரும்?''

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

``ஜல்லிக்கட்டு விழாவைக் காணவந்தபோதும்கூட ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலினைச் சந்திக்காமல் தவிர்த்துவிட்டதன் காரணம் என்ன?''

``ராகுல் காந்திக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நல்லதொரு புரிதல் இருக்கிறது. ஆனால், `வேண்டுமென்றே சந்திப்பைத் தவிர்த்துவிட்டார்' என்பது போன்ற வதந்திகள் இங்குள்ள பா.ஜ.க ஆதரவு ஊடகத்தினரால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

`ஸ்டாலின் மீது அளவுகடந்த அன்பு இருக்கிறது' என்பதை ராகுல் காந்தியே வெளிப்படுத்தியிருக்கிறார். காரணம், இன்றைக்கு பல்வேறு மாநிலக் கட்சித் தலைவர்களும் தங்களுடைய தனித்தன்மையை பா.ஜ.க-விடமிருந்து காப்பாற்றிக்கொள்ள வழி தெரியாமல் சரணடைந்துவிட்டனர்.

விவசாயிகள் போராட்டம்:  ரிஹானா முதல் சித்தார்த் வரை.. ட்விட்டர் கருத்து மோதல்! - இதுவரை நடந்தது என்ன?

உதாரணமாக ஒடிசா நவீன் பட்நாயக், பீகார் நிதிஷ் குமார், தெலங்கானா சந்திரசேகர ராவ், ஆந்திரா ஜெகன்மோகன் ரெட்டி, உத்தரப்பிரதேச மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு பா.ஜ.க-வை எதிர்த்து கருத்து சொல்லக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். ஆனால், இவர்களிலிருந்து வித்தியாசப்பட்டவராக, மாநில உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்காதவராக, மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுத்துச் செல்பவராக மு.க.ஸ்டாலின் தனித்து நிற்கிறார்.''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``ராகுல் காந்தி - மு.க.ஸ்டாலின் இடையிலான அரசியல் உறவு சுமுகமாக இருக்கிறதா?''

``ஏற்கெனவே மாநில அரசுகளிடமிருந்து வந்த வரிவிதிப்பை மத்திய அரசு முழுமையாக பறித்துக்கொண்டுவிட்டது. இப்படி மாநிலங்களிடமிருந்து வரியாக வசூலிக்கிற தொகையில் 45 %-ஐ திரும்பவும் மாநிலங்களுக்கே மத்திய அரசு வழங்கியாக வேண்டும். ஆனால், இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காகவே பெட்ரோல் வரியை `செஸ்' முறையில் வசூலித்துவருகிறது மத்திய அரசு.

கேரளா:`ஒருவருக்கு தங்கம் மீது பிரியம்; மற்றொருவருக்கு சோலார் மூலம் ஆற்றல்! - ஜெ.பி.நட்டா கிண்டல்

உதாரணமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2 ரூபாய் 50 காசு மட்டும் வரியாக வசூலிக்கப்படுகிறது என்றால், ஒரு நாளில் காஷ்மீரில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரையிலும் எத்தனை லட்சம் கோடிகளுக்கு மேல் வசூலாகும். ஆனால், இந்தத் தொகையில் ஒரு பகுதியைக்கூட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திருப்பித் தர வேண்டிய தேவையில்லை என்று பகிரங்கமாகவே பட்ஜெட்டில் அறிவிக்கிறார்கள். ஆனாலும் இது குறித்து நம் முதலமைச்சர் வரையில் யாருமே எதிர்த்து வாய் திறக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில், மாநில உரிமைகளுக்காக துணிச்சலுடன் எதிர்த்து பேசுகிற தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இதுதான் ஸ்டாலின் மீது ராகுல் காந்திக்கும் தனிப்பட்ட மரியாதையாக இருக்கிறது.''

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

``கமல்ஹாசனைத் தொடர்ச்சியாக கூட்டணிக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறீர்களே... என்ன காரணம்?''

``கமல்ஹாசன் உடலில் ஓடிக்கொண்டிருப்பது காங்கிரஸ் ரத்தம். ஏனெனில், அவருடைய தந்தை அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர்; சுதந்திரப் போராட்டத் தியாகி. அடுத்ததாக, மதச்சார்பற்ற அரசியலில் கமல்ஹாசனுக்கு முழுமையாக நம்பிக்கை இருக்கிறது. இன்றைய காலச் சூழலில், பா.ஜ.க-வின் தத்துவார்த்தத்துக்கு எதிரான சக்திகள் அனைவரும் ஒன்றாக இருப்பது அவசியம்.

300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு பா.ஜ.க வந்துவிட்டாலும்கூட அவர்கள் பெற்றிருக்கும் மொத்த வாக்கு 35%தான். மீதமுள்ள 65% மக்களும் பா.ஜ.க-வின் தத்துவங்களுக்கு எதிரானவர்கள்தான். ஆனாலும்கூட இவர்கள் அனைவரையும் ஓரணியில் நாம் திரட்டமுடியாததாலேயே வெறும் 35% வாக்குகள் பெற்றவர்கள் ஒட்டுமொத்தமாக அனைவரையும் ஆட்சி செய்துவருகிறார்கள். இந்த அடிப்படையில்தான் மதச்சார்பற்ற கொள்கைகளின் மீது நம்பிக்கை கொண்ட கமல்ஹாசனையும் தொடர்ந்து அழைக்கிறோம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு