`அடேயப்பா... இவ்வளவு நிர்வாகிகளா?’ எனப் பிற கட்சிகளுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி. அதிலும், ``சத்தியமூர்த்தி பவனுக்கே வராத நபருக்கெல்லாம் பொதுச்செயலாளர் பதவியா?’’ என்று கச்சைகட்டத் தொடங்கியிருக்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஞானதேசிகன் இருந்த 2013 காலகட்டத்தில், புதிய நிர்வாகிகள் நியமனம் நடந்தது. அதன் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்தே ஜனவரி 2-ம் தேதி `ஜம்போ’ பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்
கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அந்தப் பட்டியலில், தமிழகத்துக்கு 32 துணைத் தலைவர்கள், 57 பொதுச்செயலாளர்கள், 104 செயலாளர்கள் எனப் பதவிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. அவற்றில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன், தங்கபாலுவின் மகன், திருநாவுக்கரசரின் மகன், முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் மகன் என வாரிசுகளுக்குப் பொதுச்செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

இதில், “சத்தியமூர்த்தி பவனுக்கே வராத தங்கபாலுவின் மகனுக்கெல்லாம் பதவியா?” என்று கொந்தளிக்கிறார்கள் கதர்ச் சட்டைகள். இந்த நியமனங்களை விமர்சித்த கார்த்தி சிதம்பரமும், `இவ்வளவு பெரிய கமிட்டியால் கட்சிக்கு எந்தப் பயனுமில்லை. இதனால், யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது. அதிகாரம் இல்லாததால், யாருக்கும் பொறுப்பும் இருக்காது’ என ட்விட்டரில் பதிவிட்டார்.
இந்த ட்வீட்டால் கொதிப்படைந்த தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா, `சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் 12 துணைத் தலைவர்கள், 16 பொதுச்செயலாளர்கள், 30 செயலாளர்கள், 25 இணைச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறபோது, தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் எண்ணிக்கை குறித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது... ஊருக்கு உபதேசம், தமக்கில்லையோ?’ என அதே ட்விட்டரில் பதிலைத் தட்டினார். இந்த மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், பட்டியலிலுள்ள பலரும் தேர்தலில் சீட் பெறுவதற்காக இப்போதே காய்நகர்த்தத் தொடங்கிவிட்டனர்.

“எதற்காக இவ்வளவு பதவிகள்?” என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ‘‘தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக ரமேஷ் சென்னிதலா இருந்த காலகட்டத்தில் இதைவிட மூன்று மடங்கு நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதைவைத்துப் பார்த்தால் இந்தப் பட்டியலிலுள்ள பொறுப்பாளர்களின் எண்ணிக்கை குறைவுதான்’’ என்று ஆரம்பித்தவர், ‘‘ஈ.வி.கே.எஸ் மகன் திருமகன் ஈ.வெ.ரா, ஏற்கெனவே சமூக ஊடகத்துறையின் தலைவராக இருந்தவர். அதேபோல், திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனும் சமூக ஊடகத்துறையில் பொறுப்புவகித்தவர். வசந்தகுமார் நினைவாக அவரின் மகன் வசந்த்துக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்தது என இவற்றைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தங்கபாலுவின் மகன் கார்த்தி, கட்சியில் எந்தப் பொறுப்பையும் இதுவரை வகித்ததில்லை. அவர் ஒருநாள்கூட சத்தியமூர்த்தி பவன் பக்கம் வந்ததில்லை. அவருக்குப் பொதுச்செயலாளர் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்தப் புதிய பட்டியலில் கார்த்தி சிதம்பரம் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதவி கொடுக்கக் கூடாது என்பதில் அழகிரி உறுதியாக இருந்தார். அவரை எந்தக் குழுவில் போட்டாலும் பிரச்னை செய்வார் என்பதும் மிக முக்கியமான காரணம். அதிலும், ராகுல் காந்தியைச் சுற்றியிருக்கக்கூடிய தமிழகப் பிரதிநிதிகள் சிலர், கார்த்திக்குப் பதவி கிடைக்கவிடாமல் தங்கள் பங்குக்கு லாபி செய்தனர். அடுத்து, பொருளாளராக இருந்த நாசே ராமச்சந்திரன், ஈ.வி.கே.எஸ் ஆதரவாளராக இருந்தார். அவரைத் துணைத் தலைவராக நியமித்துவிட்டு ரூபி மனோகரனைப் பொருளாளராக்கிவிட்டார்கள்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் தொகுதிக்கு அறிமுகமே இல்லாத ரூபி மனோகரனை அங்கே போட்டியிடவைத்தார்கள். இதை உள்ளூர் நிர்வாகிகளே ஏற்கவில்லை. அவர் பொருளாளர் பதவிக்கு வந்ததை யாரும் விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு தலைவருக்கும் ஏற்ற வகையில் அவர்களின் ஆதரவாளர்களை மாவட்டத் தலைவர்களாக நியமித்துவிட்டனர்’’ என்றார் ஆதங்கத்துடன்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் விளக்கம் கேட்க, தொடர்புகொண்டோம். `பிறகு பேசுகிறேன்’ என மெசேஜ் அனுப்பியவரை, அதன் பிறகு தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். ‘‘காங்கிரஸிலுள்ள தலைவர்கள் கொடுத்த பரிந்துரைகளை நிறைவேற்றும்போது யாருக்கும் எந்த வருத்தமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைத்ததால், எண்ணிக்கை கூடிவிட்டது. இதனால் கார்த்தி சிதம்பரத்துக்கு என்ன நஷ்டம் என்று தெரியவில்லை. ஐந்து பேருக்குக் கொடுக்கவிருந்த பதவியை 50 பேருக்குக் கொடுத்தால் நல்லதுதானே! அனைவருமே செயல்படுவார்கள். இதில் எந்தத் தவறுமில்லை. மேலும், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் கார்த்தி சிதம்பரத்தின் பங்களிப்பு என்ன... அவர் எத்தனை முறை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருக்கிறார்... ஏதேனும் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறாரா?
தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டு ராவ் ஆகியோரின் ஒப்புதலுடன்தான் இந்தப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இந்தப் பட்டியலை விமர்சிப்பது என்பது தலைமையை விமர்சிப்பது போன்றதே. அடுத்து, நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிதியை எதிர்பார்க்காமல் ஆளுங்கட்சியை எதிர்கொள்ளும் அளவுக்குத் தேர்தலைச் சந்தித்தவர் ரூபி மனோகரன். அவர் பொருளாளர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். அதேநேரம், தங்கபாலு மகனுக்குப் பதவி கொடுத்ததில் விமர்சனம் உண்டு. அதைத் தவிர்த்திருக்கலாம்’’ என்றார் இயல்பாக.
கட்சியை வளர்க்கச் சொன்னால்... கோஷ்டியை வளர்க்கிறார்களே!