Published:Updated:

“கெஜ்ரிவாலிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் காங்கிரஸ்!’’

கோபண்ணா
பிரீமியம் ஸ்டோரி
கோபண்ணா

யதார்த்தம் உடைக்கும் கோபண்ணா!

“கெஜ்ரிவாலிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் காங்கிரஸ்!’’

யதார்த்தம் உடைக்கும் கோபண்ணா!

Published:Updated:
கோபண்ணா
பிரீமியம் ஸ்டோரி
கோபண்ணா

டெல்லி சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டுள்ளது. ‘காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது’, ‘காங்கிரஸ் தலைமைக்கு தெளிவான பார்வை இல்லை’ என்றெல்லாம் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களே கொதிக்க ஆரம்பித்துள்ளனர். இப்படியான சூழலில்தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கோபண்ணாவிடம் பேசினோம்.

“கெஜ்ரிவாலிடம் பாடம்
கற்றுக்கொள்ள வேண்டும் காங்கிரஸ்!’’

“டெல்லியில் ஏன் இவ்வளவு மோசமான தோல்வி?’’

“1998-லிருந்து 2013 வரை தொடர்ந்து 15 வருடங்கள் டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அதுவும் இந்தத் தோல்விக்கு ஒரு காரணம். அதாவது, மக்களின் சலிப்பு மனநிலை. அடுத்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்த பிறகு, அங்கே ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. தற்காலிகத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் சோனியா காந்தியும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், டெல்லி தேர்தலில் வெற்றி வியூகத்தை வகுக்க இயலவில்லை. இந்தத் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதுதான்.’’

“சிறுபான்மையினரும்கூட காங்கிரஸ் கட்சியை நிராகரித்துவிட்டனரே?’’

“உண்மைதான். பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த எங்கள் வாக்காளர்களில் ஐந்து சதவிகிதத்தினர், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்துவிட்டனர். 10 முதல் 12 தொகுதிகளில் சிறுபான்மையிரும்கூட, ‘காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது’ என்ற காரணத்தினாலேயே ஆம் ஆத்மிக்கு வாக்களித்துவிட்டார்கள். ‘காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், வாக்குகள் சிதறி பா.ஜ.க வெற்றி பெற்றுவிடும்’ என்பதால், அந்த வாக்குகளும் ஆம் ஆத்மிக்குக் கிடைத்தன. காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.’’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஆனால், கடந்த காலங்களில் ராகுலின் கோயில்கள் தரிசனம், சபரிமலை விவகாரம், உத்தரகாண்டில் இடஒதுக்கீடு ரத்து தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் காரணமாக இருந்தது... எனப் பல விஷயங்களில் காங்கிரஸ் எடுக்கும் நிலைப்பாட்டால், சிறுபான்மையினர் எப்படி காங்கிரஸை நம்புவார்கள்?’’

‘‘தேர்தல் அரசியலில் சில விஷயங்களைத் தவிர்க்க முடியாது. அதுவே யதார்த்தம். சில நேரங்களில் முடிவுகளை சுதந்திரமாக எடுப்பதற்கும் மாநில காங்கிரஸுக்கு வழிசெய்யப்படுகிறது. சபரிமலை விவகாரம் அப்படித்தான். மற்றபடி மதச்சார்பற்றக் கட்சி என்ற அடிப்படைக் கொள்கையிலிருந்து காங்கிரஸ் ஒருநாளும் பின்வாங்காது.’’

டெல்லி தேர்தல் பிரசாரத்தின்போது...
டெல்லி தேர்தல் பிரசாரத்தின்போது...

“பிரணாப் முகர்ஜியின் மகள், ‘ஆம் ஆத்மியின் வெற்றியை காங்கிரஸ்காரர்களே கொண்டாடுகிறார்கள்’ என்று விமர்சித்திருக்கிறாரே?’’

‘‘ஆம் ஆத்மியின் வெற்றியை நாங்கள் கொண்டாடவில்லை. கெஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரியைப்போல்தான் அந்தக் கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். அதேசமயம், டெல்லியில் பா.ஜ.க வகுப்புவாதம் செய்தபோது கெஜ்ரிவால் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினார். எனவே, காங்கிரஸ் கெஜ்ரிவாலிடம் பாடம் கற்றுக்கொண்டு, டெல்லியில் வெற்றியைப் பெறவேண்டும். அதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.’’

“காங்கிரஸ்காரர்கள் பலரும், ‘மாநில காங்கிரஸுக்கு, கூடுதல் அங்கீகாரம் மற்றும் மாநிலத் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தரப்பட வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்களே?’’

கோபண்ணா
கோபண்ணா

“கட்சியின் முக்கியத் தலைவர்களை உட்கட்சித் தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கும்போது, தவறானவர்கள் வந்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே கட்சித் தேர்தல்களை நடத்தியும் பார்த்து விட்டோம். வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. எனவே, நியமன முறையே ஆரோக்கியமானதாக இருக்கிறது.

அதேநேரம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி, பொதுப்பிரச்னைகளில் மட்டுமே தலையிட வேண்டும். மாநில காங்கிரஸ், மாநில நலன் சார்ந்து சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளைப்போல் காங்கிரஸும் உடனடியாக ஒரு முடிவெடுத்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே, இன்னும் அதிகமான சுதந்திரத்தை கட்சித் தலைமை எங்களுக்குத் தர வேண்டும்.

தற்போது இங்கே கே.எஸ்.அழகிரியே ஒன் மேன் ஆர்மியாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, மாநிலத் தலைமைக்கு உதவ மூத்த தலைவர்களைக்கொண்ட ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும்.”

கோபண்ணா
கோபண்ணா

“காங்கிரஸின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ், ‘எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஒருவர், எம்.பி தேர்தலிலும் போட்டியிடுவது மக்களை ஏமாற்றும் செயல்’ என்று விமர்சித்திருக்கிறாரே?”

‘‘நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து நிற்க வசந்தகுமார் போன்ற வலுவான ஆட்களால்தான் முடியும். அதனால்தான், நாங்குநேரி எம்.எல்.ஏ-வான அவரை தமிழக காங்கிரஸ் கட்சியும் பரிந்துரைத்தது. தலைமையும் அனுமதித்தது. இந்தத் தேர்வு சரி என்பதையே தேர்தல் தீர்ப்பும் உறுதிசெய்துவிட்டது.’’