Published:Updated:

தி.மு.க-வின் இந்து அடையாளம்... பா.ஜ.க-வின் வெற்றி!

பீட்டர் அல்போன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பீட்டர் அல்போன்ஸ்

- பீட்டர் அல்போன்ஸ் ஆதங்கம்

மக்களிடையே ‘மாஸ்’ காட்டுவதற்காகக் கட்சிகள் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்க... மாட்டுவண்டி ஓட்டுவது, பேக்கரியில் டீ குடிப்பது, யூடியூப் சேனலின் ‘வில்லேஜ் குக்கிங்’கில் கலந்துகொண்டு காளான் பிரியாணி சாப்பிடுவது என்று எளிய வழியில் ‘ஹிட்’டடித்து வைரலாகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. ‘இதுவும் மக்களைக் கவரும் அரசியல் உத்தியா?’ என்ற கேள்வியோடு தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸைச் சந்தித்துப் பேசினோம்...

‘‘மாட்டுவண்டி ஓட்டுவதும், தயிர்ப் பச்சடி தயார்செய்து காளான் பிரியாணி சாப்பிடுவதும் காங்கிரஸ் கட்சிக்கான வாக்குகளாக மாறும் என்று ராகுல் நினைக்கிறாரா?’’

‘‘காங்கிரஸ் கட்சியின் வலிமையான ஆயுதம் ராகுல் காந்திதான்! தமிழக மக்களிடையேயும் அவருக்கென்று மிகப்பெரிய ஈர்ப்பு இருக்கிறது. பா.ஜ.க பல்வேறு வேடங்களில் முகமூடி அணிந்து இங்கே வருகிறது. அதாவது, ‘இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்கள்’ என்று தங்களை விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில், ‘69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது’ என்று சொல்லி, எம்.டெக் படிப்புகளுக்கான உதவித்தொகையை நிறுத்தி, அந்த வகுப்புகளையே ரத்துசெய்கிறார்கள். இந்த உண்மைகளை யெல்லாம் மக்களிடையே எடுத்துச் சொல்கிறார் ராகுல். இது மக்களின் மனநிலையை மாற்றுகிறது.’’

‘‘ ‘பிரசாரத்துக்கு வந்த இடத்தில் சோறுதான் முக்கியம் என்று சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி’ என குஷ்பு பேசியிருக்கிறாரே?’’

‘‘தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் - என்கிறது குறள். எனவே, இப்படிப் பேசியிருக்கும் குஷ்புவை, இரவு தூங்கச் செல்லும்போது அவரது மனசாட்சி ரொம்பவே உறுத்தும் என்று நான் நினைக்கிறேன். டி.வி-யில் ஆச்சி மசாலா விளம்பரத்துக்கு வரும்போது ஒரு பேச்சு, சக்தி மசாலாவுக்கு வரும்போது ஒரு பேச்சு என விளம்பரத் தூதுவர் போன்று மாறி மாறிப் பேசிவரும் குஷ்புவின் பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.’’

‘‘பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, பெட்ரோல் விலை உயர்வு பற்றி விமர்சித்திருப்பது வரவேற்கக்கூடிய அம்சம்தானே?’’

‘‘அவரும்கூட ட்விட்டர் எனும் சமூக ஊடகம் வழியேதான் தன் கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். மற்றபடி ‘பெட்ரோல் - டீசலுக்கு வரி’ என்று தலைப்பிட்டு, பிரபல பத்திரிகைகள் எதிலும் செய்தி இல்லை. ‘பெட்ரோல், டீசல், பருப்பு, பாமாயில், பிஸ்கட், உரம் உள்ளிட்ட பொருள் களுக்கெல்லாம் வரி’ என்பது சின்னஞ்சிறு செய்தியாகத்தான் பதிவாகியிருக்கிறது. இதே காலகட்டத்தில், ஒரு மணி நேரத்துக்கு 90 கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கிற அம்பானிக்கு, ‘கார்ப்பரேட் டாக்ஸ் டிவிடெண்ட்’ குறைக்கப் பட்டிருக்கிறது. இது எவ்வளவு முக்கியமான செய்தி!?’’

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

‘‘மதச்சார்பற்ற அணியைச் சேர்ந்த தி.மு.க-வே ‘இந்து’ மத அடையாளத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய நேரிட்டிருக்கிறதே?’’

‘‘இப்படியொரு நெருக்கடி, வெகுஜன கட்சிகளுக்கே இன்றைக்கு ஏற்பட்டிருப்பதுதான் மிகப்பெரிய துரதிர்ஷ்டம். அரசியல் - கொள்கை - சித்தாந்தரீதியாக மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செய்வது குறித்து எந்த ஓர் அரசியல் கட்சியும் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளவோ, வெளிப்படுத்திக் கொள்ளவோ முடியவில்லை. மாறாக, ‘நான் ஓர் இந்துக் கட்சி’ என்று அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு ஏறக்குறைய எல்லா கட்சிகளையுமே உட்படுத்தியிருப்பது பா.ஜ.க-வுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிதான்!’’

‘‘மதவாதத்துக்கு எதிராக அண்ணா, கருணாநிதி எடுத்த அரசியல் நிலைப்பாட்டை மு.க.ஸ்டாலினால் எடுக்க முடியவில்லையா?’’

‘‘இன்றைய காலச்சூழலில் ஏற்பட்டிருக்கிற நெருக்கடி மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் தந்திருக்கிற புதுவிதமான மிரட்டலும்தான் இதற்குக் காரணம். பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்காக வலதுசாரிகளின் கைகளில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தத் தொழில்நுட்ப ஆயுதத்தையும், அதைப் பயன்படுத்துவதற்குத் தேவையான மிகப்பெரிய பண வசதியையும் எதிர்கொள்ள மற்ற அரசியல் கட்சிகளிடம் சக்தி இல்லை. ‘உண்மை தூங்கி எழுந்து சோம்பல் முறிப்பதற்குள், பொய் தன்னைச் சீவி சிங்காரித்துக்கொண்டு மூன்று முறை வலம் வந்துவிடுகிறது’ என்று அண்ணா சொல்வார். ஆக, இந்தத் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் இன்றைய காலச்சூழலும் மு.க.ஸ்டாலினுக்குப் புதிய நெருக்கடியைத் தந்திருக்கின்றன.’’

‘‘ ‘மூன்றாவது அணி அமைப்போம்’ என்ற கமல்ஹாசனைக் கூட்டணிக்குள் வருமாறு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே?’’

‘‘மூன்றாவது அணி என்று யார் நினைத்தாலும் பேசினாலும் அது பா.ஜ.க-வுக்கு மறைமுகமாக உதவி செய்கிற முயற்சியாகத்தான் முடியும். எனவே, பா.ஜ.க-வுக்கு எதிராக ஒரு வலுவான அரசியல் தளத்தை உருவாக்க நினைக்கிற எல்லோருக்குமே, எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைக்கிற கடமை இருக்கிறது. இதற்காகச் சில தியாகங்களைச் செய்ய வேண்டி வந்தாலும் அவற்றைச் செய்யலாமே தவிர, இந்தக் கடமையிலிருந்து சிறிதும் விலகிவிடக் கூடாது. காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளுக்குமே இந்தப் பொறுப்பு இருக்கிறது.’’

‘‘ ‘தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறிவிடும்’ என்று வைகைச்செல்வனும் சொல்கிறாரே?’’

‘‘தன்னுடைய எதிரிகள் மத்தியில் ‘மித்ரபேத’த்தை உண்டாக்குவது, சந்தேக விதைகளை விதைப்பது உள்ளிட்டவை சாணக்கியத்தனங்களின் முக்கியமான அம்சம். ஆனால், ‘எக்காரணம் கொண்டும் இங்கே பா.ஜ.க-வைக் காலூன்ற விட்டுவிடக் கூடாது’ என்பதில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம்.’’