Published:Updated:

“பிரசவ வேதனையை அனுபவிக்கிறது காங்கிரஸ்!”

பீட்டர் அல்போன்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
பீட்டர் அல்போன்ஸ்...

- உண்மையை உடைக்கும் பீட்டர் அல்போன்ஸ்...

“பிரசவ வேதனையை அனுபவிக்கிறது காங்கிரஸ்!”

- உண்மையை உடைக்கும் பீட்டர் அல்போன்ஸ்...

Published:Updated:
பீட்டர் அல்போன்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
பீட்டர் அல்போன்ஸ்...

ஐந்து மாநிலத் தேர்தல் களத்துக்கே இன்னும் ராகுல் காந்தி வந்து சேராதது அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குக் கவலையென்றால், மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸின் பாய்ச்சல்களுக்கு என்ன பதிலடி தருவது என்று யோசிப்பதே தமிழக காங்கிரஸாருக்குப் பெரும் கவலையாக இருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்...

“ஐந்து மாநிலத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆனால், உங்கள் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி களத்திலேயே இல்லையே?’’

“இப்போது உத்தரப்பிரதேசத் தேர்தல் பணிகளை பிரியங்கா காந்தி சிறப்பாகச் செய்துவருகிறார். ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்தாலும்கூட தேர்தல் உத்தி, கள வியூகம், வேட்பாளர் தேர்வு போன்ற முடிவுகள் அவரது ஆலோசனை, அனுமதி பெற்றே நடக்கின்றன.’’

“பிரசவ வேதனையை அனுபவிக்கிறது காங்கிரஸ்!”
“பிரசவ வேதனையை அனுபவிக்கிறது காங்கிரஸ்!”

“ஆனாலும்கூட ராகுல் காந்தி களத்தில் இல்லாதது கட்சிக்குப் பின்னடைவுதானே?’’

“கொரோனா காலகட்டத்தில் தேர்தல் ஆணையமே பெரும் கூட்டங்களுக்குத் தடைவிதித்திருக்கிறது. ராகுல் காந்தி போன்ற பெருந்தலைவர்கள் அரங்கக் கூட்டத்திலேயே பேசிவிடவும் முடியாது. எனவே, விரைவில் ராகுல் காந்தி இணையவழியிலான பரப்புரையை மேற்கொள்வார். அதற்காக, தேர்தல் களத்திலிருந்து ராகுல் ஒதுங்கியிருக்கிறார் என்று அர்த்தம் அல்ல!’’

“தேர்தல் நெருங்கிவிட்டபோதும், உட்கட்சிப் பிரச்னைகளுடனேயே காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கிறதே?’’

“140 வருடங்கள் பழைமையான காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறை, உத்தி, போராட்டங்களை மாற்றியமைக்கும்விதமாக புனரமைத்துக்கொள்ள வேண்டும். இது ஒரு நீண்டகாலப் பணி. எப்படி ஒரு கூட்டுப்புழு தனது கூட்டைப் பிய்த்துக்கொண்டு வெளியே வந்து சிறகடிக்கிறதோ... அதே போன்று காங்கிரஸ் கட்சியும் புதிய மாற்றத்துக்கான பிரசவ வேதனையைத்தான் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே இருக்கும் இந்தச் சிக்கல்களையெல்லாம் இப்போதைய தேர்தல் பிரச்னைகளோடு சம்பந்தப்படுத்த வேண்டாம்.’’

“பிரசவ வேதனையை அனுபவிக்கிறது காங்கிரஸ்!”
“பிரசவ வேதனையை அனுபவிக்கிறது காங்கிரஸ்!”

“ ‘தேசிய அரசியலில், ஸ்டாலின் வியூகம் வகுக்க வேண்டும்’, ‘ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உண்டு’ என்றெல்லாம் பேசப்படுகிறதே... அப்படியென்றால், ராகுல் காந்தியின் நிலை?’’

“தேசிய அரசியலையும், மாநில அரசியலையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம். ‘முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டும்’ என்று வெளிப்படையாகவே பேசிவருகிற யோகி ஆதித்யநாத், உ.பி தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால், அவரை பா.ஜ.க நேரடியாக டெல்லிக்கே கொண்டுவந்துவிடும். இந்த நிலையில், பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதுதான் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். பா.ஜ.க-வை முறியடிக்கும் சூத்திரத்தை தமிழ்நாட்டில் அழகாக வகுத்துத்தந்தவர் மு.க.ஸ்டாலின். ஆனால், இந்த ஃபார்முலாவை உ.பி-யில் ஸ்டாலினால் கொண்டுவர முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.’’

“மு.க.ஸ்டாலினுக்குப் பிரதமராகும் தகுதி இல்லை என்கிறீர்களா?’’

“பிரதமராகும் தகுதி இங்கே யாருக்கு இருக்கிறது, யாருக்கு இல்லை என்பதெல்லாம் பிரச்னையில்லை. பிரதமராவது குறித்தான கேள்வி ஒருமுறை கருணாநிதியிடம் கேட்கப்பட்டபோது, ‘என் உயரம் எனக்குத் தெரியும்’ என்று ஒரே வரியில் பதில் சொன்னார். அப்போது நானும் அவர் பக்கத்தில்தான் நின்றிருந்தேன். கடந்த நான்கைந்து மாதங்களாக ஸ்டாலினையும் அருகிலிருந்து கவனித்துவருகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தவிர அவரது சிந்தனையில் வேறு எதுவும் இல்லை. எனவே, ஸ்டாலினைப் பொறுத்தவரை, இந்தக் கேள்வியையே தேவையற்றதாகத்தான் கருதுவார்.’’

“ `மேக்கேதாட்டூ அணையைக் கட்டியே தீர வேண்டும்’ என்று கர்நாடக காங்கிரஸ் நடைப்பயணம் செல்கிறது... தமிழக காங்கிரஸ் கனத்த அமைதி காக்கிறதே?’’

“காங்கிரஸ் கட்சியின் அடிப்படை லட்சியங்களைத் தவிர, மற்ற பிரச்னைகளில் மாநிலம் சார்ந்த முடிவுகளை எடுக்கும் உரிமை மாநிலத் தலைமைக்கு உண்டு. அந்தவகையில், தமிழக நலனுக்கு மட்டுமே நான் முன்னுரிமை கொடுப்பேன். அது போன்ற சூழல்களில், எனது முடிவுக்கு நெருக்கடி ஏற்படுமேயானால், அதன் பிறகு தமிழகம் சார்ந்து எந்தவொரு முடிவை எடுக்கவும் நான் தயங்க மாட்டேன்.’’

“அப்படியென்றால், தமிழக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைமையிடம் மாநில நலன் சார்ந்த விஷயங்களில் உறுதி இல்லையா?’’

“அப்படிச் சொல்லவில்லை... கர்நாடக காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் நியாயமானது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமை ஆதரித்ததாக எந்தவொரு செய்தியும் இல்லையே... தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்வதற்கும், தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்குமான ஆயுதமாகத்தான் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறார்கள். எனவே, இது குறித்து தமிழக காங்கிரஸ் கவலைப்படத் தேவையில்லை.’’

“பிரதமர் மோடியின் கிராபிக்ஸ் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை, சமீபத்தில் நீங்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானதே?’’

“அது எனது தவறுதான்... அந்தப் புகைப்படத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகளை பிரதமர் பார்வையிடுவதை, புகைப்பட நிபுணர் ஒருவர் தரையில் படுத்துக்கொண்டு புகைப்படம் எடுப்பதாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படத்திலுள்ள புகைப்பட நிபுணர் குறித்து நான் கருத்து பதிவிடவில்லை. மாறாக, அரசுத் துறை சார்ந்த பணிகளை ஆய்வு செய்கிற பிரதமர், தன்னுடன் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளை ஏன் அழைத்துச் செல்வதில்லை என்றுதான் கேள்வி எழுப்பியிருந்தேன். இதை ஒப்புமைப்படுத்தத்தான் நமது முதல்வர் அமைச்சர், அதிகாரிகளோடு மருத்துவமனையைப் பார்வையிடும் புகைப்படத்தையும் சேர்த்துப் பதிவு செய்திருந்தேன். ஆனால், கிராபிக்ஸ் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பதிவிட்டதால், நான் கேட்டிருந்த கேள்வி மறைக்கப்பட்டுவிட்டது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism