Published:Updated:

`கொரோனா ஒழிப்புக்கு ரூ.9,027.02 கோடி!’ - பேரவையில் தாக்கலான ரூ.12,845.20 கோடிக்கான துணை பட்ஜெட்

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் - பட்ஜெட்
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் - பட்ஜெட்

தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2020-2021-ம் ஆண்டுக்கான, 12,845.20 கோடி ரூபாய் மதிப்பிலான துணை பட்ஜெட்டை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று 2020-2021-ம் ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கான துணை பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். `ரூ.12,845.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதற்கு வழிவகை செய்கிறது’ என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். துணை பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய அவர், இந்த ஆண்டு தொடக்கம் முதலே கொரோனா நோய்த் தொற்று நம் அனைவரையும் பாதித்திருப்பதால். இந்த ஆண்டு அசாதாரண சூழலே நிலவுகிறது. தடுப்புப் பணிகளுக்காகப் பெருமளவு மாநில அரசு செலவு செய்திருக்கிறது. இதனால், சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு துணை பட்ஜெட்டின் மதிப்பு அதிகமாகவே இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடு, தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மட்டும் 9,027.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

பொது விநியோக அமைப்பு மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களை இலவசமாக வழங்கியதாலும், பொது விநியோகக் கடைகளில் வழக்கத்துக்கு அதிகமாக விற்பனை நடைபெற்றதாலும் 3,359.12 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

``சின்னப் பசங்களை ஆடவிட்டு வேடிக்கை காட்டுறீங்களா?”
- கொதித்த ஓ.பி.எஸ்; ஆவேச எடப்பாடி!

கொரோனா நிவாரண உதவியாக, குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் பல்வேறு நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரொக்கப் பண உதவி வழங்குவதற்காக 3,168.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1,049.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மருந்து, சோதனைக் கருவி, ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை வசதி மற்றும் உள் நோயாளிகளுக்கான உணவு போன்ற செலவுகளுக்காக 1,109.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின் இரண்டாம் தவணை பொது அடிப்படை மானியத்தை வழங்க 987.85 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளைச் செய்வதற்கு வேளாண்துறைக்கு 107.40 கோடி ரூபாய் அரசு அனுமதித்திருக்கிறது. அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவுவதற்காகவும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காகவும் 580.87 கோடி ரூபாய் அனுமதிக்க உத்தேசித்திருக்கிறது’’ என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

2020-2021-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை சமர்ப்பிப்புக்குப் பின்பு அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் மற்றும் அரசின் கூடுதல் செலவினங்களுக்காக சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறத் துணை மதிப்பீடு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.

அடுத்த கட்டுரைக்கு