Published:Updated:

2 ஜோடி கேன்வாஸ் ஷூ, புது கோட், கோயில் குங்குமம்! - அமெரிக்கப் பயணத்துக்குத் தயாராகும் ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

வீட்டுவசதி திட்டத்தின் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்காக, பத்து நாள் பயணமாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள், அதிகாரிகள் குழு சமீபத்தில் பிரிட்டன், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குப் பயணித்து வந்தது. இந்த 14 நாள் சுற்றுப்பயணத்தில் 8,835 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து வந்ததாகப் பெருமையோடு முதல்வர் குறிப்பிட்டார்.

கோட் சூட்டில் எடப்பாடி பழனிசாமி
கோட் சூட்டில் எடப்பாடி பழனிசாமி
`` என் அம்மாவுக்குப் புது வாழ்க்கை அமைய வேண்டும்!"- இணையத்தை ஈர்த்த மகளின் ட்விட்டர் பதிவு

முதல்வர் ஒருபக்கம் பறக்க, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன் என மற்ற அமைச்சர்களும் ஆளுக்கொரு நாட்டுக்குப் பயணித்து வந்தனர். பெரியகுளத்துக்கும் சென்னைக்கும் இடையே ட்ரிப் அடித்து வந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வரும் நவம்பர் 7-ம் தேதியன்று டெல்லி சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பயணமாகிறார்.

கிறிஸ்டன், வாஷிங்டன், சிகாகோ நகரங்களுக்கு விசிட் அடிக்கும் ஓ.பி.எஸ்., அமெரிக்க வீட்டுவசதித்துறையின் தொழில்நுட்பங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிய இருக்கிறார்.

துணை முதல்வரின் அமெரிக்கப் பயணம் குறித்து விசாரித்தோம். ``அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. 10 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையிலான குளிர்காற்று சிகாகோ, வாஷிங்டன் நகரங்களைச் சுழற்றிப் போடுகிறது. அமெரிக்கக் குளிரைத் தாங்குவதற்கு ஏதுவாக, கால் முட்டி வரையில் போட்டுக் கொள்ளும் ஓவர் கோட்டுகளை ஓ.பி.எஸ்ஸுக்காக அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். ஷூ போடாமல் கால்களைத் தரையில் வைக்க முடியாது. இரவில் படுத்துறங்கும்போதுகூட சாக்ஸ் போட்டுக்கொண்டுதான் தூங்க வேண்டியதிருக்கும். இதற்காகவே, இரண்டு ஜோடி கேன்வாஸ் ஷூக்களும் ஒரு டஜன் காட்டன் சாக்ஸ்களும் வாங்கியுள்ளனர்” என விவரித்தவர்களிடம்,

“அமெரிக்கப் பயணத்தில் கோட் சூட்டுடன் எடப்பாடி பழனிசாமி கலக்கினார். ஓ.பி.எஸ்ஸும் கலக்குவார் என எதிர்பார்க்கலமா?” என்றோம்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

``அவர் வேஷ்டி சட்டையைத்தான் அதிகம் விரும்புகிறார். `குடும்பத்தினர்தான் குளிர் தாங்க முடியாது, கோட் சூட்டு போட்டுக் கொள்ளுங்கள்’ என நிர்பந்திக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி மார்டன் டிரஸ்ஸில் கலக்கியதை அவரது உறவினர்கள் குறிப்பிட்டு பேச, ‘ராஜேந்திர பாலாஜி வேஷ்டி சட்டையோடு அமெரிக்காவில் இருந்ததற்கு வரவேற்பு கிடைத்ததே... நம்ம அடையாளத்தை விட்டுவிடக் கூடாது’ என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார். அவரது இஷ்ட தெய்வமான தேனி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலின் விபூதி, குங்குமத்தையும் எடுத்து வைக்கச் சொல்லியுள்ளார். கோட் சூட் போட்டாலும், அவரது அக்மார்க் அடையாளமான விபூதி, குங்குமம் நெற்றியிலிருந்து மாறாது” என்றனர்.

ஓ.பி.எஸ்-க்குச் செரிமான பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, வேகவைத்த உணவு வகைகளை மட்டும் சாப்பிடுமாறு அவரது டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். குளிர் நேரத்தில் உடல் சூட்டை ஏற்றுவதற்காக மாடு, பன்றி இறைச்சிகளை உட்கொள்ளும் பழக்கம் அமெரிக்காவில் உண்டு. அப்படி எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாமெனவும் கூறியுள்ளனர்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
Vikatan

`முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தைப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் ஒரு டீம் வைரலாக்கியது. அதுபோல நாமும் செய்யலாமா?' என ஆதரவாளர்கள் கேட்டதற்கு, அதற்கு ஓ.பி.எஸ் மறுத்துவிட்டதாகச் சொல்கின்றனர்.

நவம்பர் 7-ம் தேதி டெல்லி செல்லும் ஓ.பி.எஸ்., அன்றிரவு பா.ஜ.க பிரமுகர்கள் சிலரைச் சந்தித்துவிட்டு, அடுத்தநாள் அதிகாலையில் அமெரிக்காவுக்குப் பயணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பின் செல்ல