Published:Updated:

மண்ணின் மக்களுக்கு வேலையில் இட ஒதுக்கீடு:`தமிழகத்துக்குத் தற்போது தேவையில்லை!’ - பா.ஜ.க சீனிவாசன்

தமிழர்களுக்கு வேலை போராட்டம்
தமிழர்களுக்கு வேலை போராட்டம்

ஹரியானாவில் மட்டுமல்ல, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கும் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில்?

ஹரியானா மாநிலத்தில் தனியார்துறை வேலைவாய்ப்புகளை, பிற மாநிலத்தவர்கள் தட்டிப் பறிப்பதைத் தடுக்க, அந்த மாநில மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கேட்டு தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஹரியானா அரசு, தனியார்துறையில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறது. ஹரியானாவில் பா.ஜ.க மற்றும் ஜனநாயக ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வியாழனன்று துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா இட ஒதுக்கீடு தொடர்பான புதிய சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார்.

துஷ்யந்த் சௌதாலா
துஷ்யந்த் சௌதாலா

அந்த மசோதாவில், ``இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். ரூ.50,000-க்குள்ளான சம்பளத்துக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தும். தேவையான திறனுள்ள நபர்கள் இல்லாதபோது வெளி மாநிலத்தவரைப் பணியமர்த்தலாம். அதைக் குறிப்பிட்ட நாள்களுக்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது.

தவிர, `இந்த மசோதாவின் விதிகளின்கீழ் அனைத்து ஊழியர்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு விதிமுறையை மீறினால் ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரை அபராதம் விதிக்கப்படும். 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக்கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்' என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இது போன்ற சட்டம் அங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானாவில் மட்டுமல்ல, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இது போன்ற சட்டம் நடைமுறையில் இருக்கிறது.

தமிழகத்திலும் `தமிழ்நாட்டு வேலைகளில் தமிழர்களுக்கு அல்லது தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கச் சட்டமியற்ற வேண்டும்' என்று தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்த் தேசியப் பேரியக்கம், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தொடர்ச்சியாகக் கோரிக்கையை முன்வைத்துவருகின்றன. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகவும் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல்,``பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவது ஏன்?'' என உயர் நீதிமன்ற நீதிபதிகளே அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஶ்ரீனிவாசன்
ஶ்ரீனிவாசன்

`ஒரே தேசம்' எனப் பேசும் பா.ஜ.க-தான் தற்போது ஹரியானாவில் இப்படியொரு சட்டத்தை இயற்றியிருக்கிறது. கர்நாடகாவிலும்கூட பா.ஜ.க முதல்வர் எடியூரப்பாதான் இப்படியொரு நடைமுறையைக் கொண்டுவந்தார். இந்தநிலையில், தமிழக பா.ஜ.க., ஹரியானாவில் இயற்றப்பட்டிருக்கும் சட்டத்தை எப்படிப் பார்க்கிறது, தமிழகத்தில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் அதே போன்ற கோரிக்கை குறித்து, தமிழக பா.ஜ.க-வின் நிலைப்பாடு என்ன?

தமிழக பா.ஜ.கவின் மாநிலப் பொதுச்செயலாளர், பேராசிரியர் ஶ்ரீனிவாசனிடம் பேசினோம்.

``ஹரியானாவில் தற்போது இயற்றப்பட்டிருக்கும் சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். காரணம், அங்கு வெளி மாநிலத்தவர்கள் 25 சதவிகிதத்துக்கும் அதிகமாக வேலை பார்க்கிறார்கள். அதனால்தான் அங்கு அப்படியொரு சட்டம் தேவைப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சேர்த்தே ஐந்து சதவிகிதம் பேர்கூட வெளி மாநிலத்தவர்கள் இல்லை. அதனால், தமிழகத்தில் அப்படியொரு சட்டம் தேவையில்லை. தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் 90 சதவிகிதத்துக்கும் மேல் தமிழர்கள்தான் வேலை பார்த்துவருகின்றனர். இங்கு வெளி மாநிலத்தவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவு.

நிரந்தரக் கட்டுமானங்கள் தொடர்ச்சியாக நடந்துவரும் தமிழகம் போன்ற மாநிலத்தில் பிற மாநிலத் தொழிலாளர்களின் தேவையும் இருக்கிறது. அவர்களை முற்றிலுமாக வர வேண்டாம் என்று சொல்வது நம் மாநிலத்தின் வளர்ச்சியைத்தான் பாதிக்கும். நம் மாநிலத்திலுள்ளவர்கள், அந்த மாதிரியான வேலைகள் பார்ப்பதில்லை.
பேராசிரியர் ஶ்ரீனிவாசன்

தமிழகத்தில் தற்போது சட்டம் இயற்றும் அவசியம் ஏற்படவில்லை. எதிர்காலத்தில் அப்படியொரு தேவை எழுந்தால், அப்போது பா.ஜ.க ஆட்சியில் இருந்தால், நாங்களேகூட அப்படியொரு சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் ஏற்படலாம்'' என்றார் அவர்.

அருணபாரதி
அருணபாரதி

`தமிழகத்தில் தற்போது ஹரியானாவைப்போல சட்டமியற்றும் தேவை எழவில்லையா?'

`மண்ணின் மக்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ எனத் தொடர்ச்சியாகப் போராடிவரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதியிடம் பேசினோம்,

``பா.ஜ.க ஶ்ரீனிவாசன் சொல்வது மிகவும் தவறான தகவல். தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களை நோக்கித்தான் பிற மாநிலத்தவர்கள் வருவார்கள். விவசாய வேலை முதற்கொண்டு அவர்கள் வந்துவிட்டார்கள். 2011-ம் ஆண்டில் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 44,00,000 பேர் பிற மாநிலத்தவர்கள் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. தற்போது, கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேராவது வெளி மாநிலத்தவர்கள் இருப்பார்கள்.

குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர்,கோயம்பத்தூர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் வெளி மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். தவிர, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10,000 பேர் வெளி மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள். வேலைவாய்ப்புகள் பறிபோவது மட்டுமல்லாமல், தேர்தல்களிலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்திகளாகவும் அவர்கள்தான் இருக்கிறார்கள். அதனால், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்துக்குத்தான் இது போன்ற சட்டம் உடனடியாகத் தேவை'' என்றார் அவர்.

`தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?' - கொதித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்... ஏன்?
தேர்தல்நலனைக் கருத்தில்கொண்டுதான், தமிழகத்தில் பா.ஜ.க வெளி மாநிலத்தவர் வருகை குறித்துப் பேச யோசிக்கிறது. அந்த வாக்காளர்களைக் குறிவைத்துத்தான் குஷ்பு, நமீதா போன்ற வெளி மாநிலத்தவர்களையும் களத்தில் இறக்குகிறது
அருணபாரதி

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கெனவே இது குறித்து கேள்வி எழுப்பியபோது, நாம் அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், வைகைச் செல்வனிடம் பேசினோம். அப்போது அவர்,``மத்திய அரசு வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கவிருக்கிறோம். அது குறித்து சட்டமியற்றவும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன’’ என்றார்.

தற்போது அந்தப் பணிகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்துத் தெரிந்துகொள்ள அவரை மீண்டும் தொடர்புகொண்டோம்.

``தற்போது அ.தி,மு.க-வுக்கு அப்படியோர் எண்ணம் இல்லை'' என முடித்துக்கொண்டார்.

பரந்தாமன்
பரந்தாமன்

தொடர்ந்து நாம், தி.மு.க-வின் சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமனிடம் பேசினோம்.

``மின்துறை, நீதித்துறை, வங்கிகள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் தற்போது பிற மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. தி.மு.க ஆட்சியில் இருந்த காலத்தில், இப்படியொரு சட்டம் இயற்றுவதற்கான தேவை இல்லை. அப்போது தமிழ் ஒரு பாடமாக இருந்தது. தற்போது அ.தி.மு.க அரசு அதிலிருந்து விலக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் அதிகமான பேர் வருகிறார்கள்.

தமிழகத்தில் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் இருக்கும்போது இது போன்ற பிரச்னைகள் எழாத அளவுக்குப் பார்த்துக்கொண்டனர். ஆனால், தற்போது மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள், மாநில உரிமைகளை முழுமையாகப் பறித்துவருகிறார்கள். அதனால், தற்போது சட்டம் இயற்ற வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. அதை தி.மு.க நிச்சயம் நிறைவேற்றும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு