Published:Updated:

`ஸ்டாலின்தான் வர்றாரா...' Exit Polls முடிவுகள் சொல்வது என்ன?! #TNELECTION2021

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தி.மு.க கூட்டணி 160-190 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகச் சொல்கின்றன தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள். ஸ்டாலின்தான் வர்றாரா..?

`தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?' என்ற கேள்விக்கு விடை கிடைக்க இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே இருக்கின்றன. கிட்டத்தட்ட 25 நாள்களாக அடங்கிப்போயிருந்த அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கொரோனா பற்றிய பேச்சுகளே நிரம்பியிருந்த நிலையில், `எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும்?', `அதிக இடங்களை வெல்லப்போவது யார்?' என்ற பேச்சுகளும் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., ம.நீ.ம ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் 2021 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தன. தமிழகத்தில் ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது என்று சொல்லப்பட்டாலும், அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கிடையேயான போட்டியாகத்தான் இது பார்க்கப்படுகிறது. எனவே, `இந்த இரு கட்சிகளில் வெற்றிவாகை சூடப்போவது எந்தக் கட்சி?' என்பதுதான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது!

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

இந்தநிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் (Exit Polls) வெளியாகியிருக்கின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தேர்தலுக்கு முன்பாகவே பல்வேறு ஊடகங்களும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டிருந்தன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில், `தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்' என்றே சொல்லப்பட்டிருந்தது. அதே கருத்தைத்தான் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் சொல்கின்றன. அவற்றில் சிலவற்றின் முடிவுகளை முதலில் விரிவாகப் பார்ப்போம்.

விசிக - 2, பாஜக - 0, பாமக, மதிமுக-வுக்கு எத்தனை?! - விகடன் மெகா சர்வே முடிவுகள்!
ஏபிபி - சி-வோட்டர்

ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் ரிசர்ச் நிறுவனத்தோடு இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தி.மு.க கூட்டணி முந்தி நிற்கிறது. இந்தக் கூட்டணி அதிகபட்சமாக 172 இடங்கள் வரை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க கூட்டணி 46.7 சதவிகித வாக்குகளைக் கவரும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 35 சதவிகித வாக்குகளைக் கவரும் என்றும் ஏபிபி சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

தி.மு.க + : 160-72

அ.தி.மு.க + : 58-70

ம.நீ.ம+ : 0-2

அ.ம.மு.க - 0-2

மற்றவை - 0-3

Exit Polls
Exit Polls
ரிபப்ளிக் - சி.என்.எக்ஸ்

ரிபப்ளிக் டி.வி., சி.என்.எக்ஸ் நிறுவனத்தோடு இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தி.மு.க கூட்டணி அதிகபட்சமாக 170 இடங்கள் வரை பெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தி.மு.க கூட்டணி 48.9 சதவிகித வாக்குகளையும், அ.தி.மு.க கூட்டணி 35.5% வாக்குகளைப் பெற வாய்ப்பிருப்பதாகவும் இந்தக் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

தி.மு.க+ :160-170

அ.தி.மு.க+ : 58-68

ம.நீ.ம+ : 0-2

அ.ம.மு.க+ : 4-6

மற்றவை: 0

கூட்டணி தவிர்த்து கட்சிவாரியாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது ரிபப்ளிக் டி.வி!

தி.மு.க: 137-147

காங்கிரஸ்: 13-17

அ.தி.மு.க: 49-59

பா.ஜ.க: 2-4

பா.ம.க: 5-7

ம.நீ.ம: 0-2

அ.ம.மு.க: 4-6

மற்றவை: 6-10

இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா

இந்தியா டுடேவும் Axis My India நிறுவனமும் இணைந்து நடத்தியிருக்கும் கருத்துக்கணிப்பில், தி.மு.க கூட்டணி அதிகபட்சமாக 195 சீட்கள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தி.மு.க 48 சதவிகித வாக்குகளையும், அ.தி.மு.க 35 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்பிருக்கிறது எனவும் இந்தக் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது

தி.மு.க கூட்டணி: 175-195

அ.தி.மு.க கூட்டணி - 38-54

அ.ம.மு.க கூட்டணி - 1-2

ம.நீ.ம கூட்டணி - 0-2

மற்றவை - 0

அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எத்தனை இடங்களை வெல்லும் என்பதையும் கணித்திருக்கிறது இந்தியா டுடே!

காங்கிரஸ்: 16-18

வி.சி.க: 3-5

இடதுசாரிகள்: 9-11

பா.ஜ.க: 2-4

பா.ம.க: 2-4

ஐ.யூ.எம்.எல்: 0-1

கருத்துக்கணிப்பு
கருத்துக்கணிப்பு
Today's Chanakya

Today's Chanakya கருத்துக்கணிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் கணிப்பிலும் தி.மு.க கூட்டணிதான் முந்தி நிற்கிறது. அதிகபட்சமாக 186 இடங்களை வரை தி.மு.க கூட்டணி கைப்பற்றுவதற்கான வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தோராயமாக தி.மு.க 51% வாக்குகளையும், அ.தி.மு.க 37% வாக்குகளைப் பெறும் எனவும் டுடேஸ் சாணக்கியா கணித்திருக்கிறது.

தி.மு.க+ :175-186

அ.தி.மு.க+ : 57-68

ம.நீ.ம+ : 2-6

தந்தி டி.வி

தந்தி டிவி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பிலும் தி.மு.க கூட்டணியே முன்னிலைவகிக்கிறது. 133 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க+ : 133

அ.தி.மு.க+ : 68

கடும் போட்டி: 33

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு
P-MARQ
P-MARQ

கருத்துக்கணிப்புகள் நடத்தும் நிறுவனமான P-MARQ நடத்திய கருத்துக்கணிப்பில், தி.மு.க அதிகபட்சமாக 190 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தி.மு.க+ : 165-190

அ.தி.மு.க+ : 40-65

அ.ம.மு.க+ : 1-3

ம.நீ.ம+ : 1-3

மற்றவை: 0-3

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான பிறகு, ``தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் சொன்னதைத்தான் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் சொல்கின்றன. இது மக்களின் முடிவு. இதில் மாற்றமிருக்காது என்பது எங்களுக்கு முன்பே தெரியும். தமிழகத்துக்கு விடியல் பிறக்க இன்னும் இரண்டே நாள்கள்தான் இருக்கின்றன'' என்று தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே கொண்டாட்ட மோடுக்கு சென்றுவிட்டனர் தி.மு.க-வினர்.

அ.தி.மு.க-வினரோ, ``கருத்துக்கணிப்புகளெல்லாம் பொய்த்துப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. தி.மு.க-வை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இரண்டே நாள்கள் பொறுத்திருங்கள். மக்கள் அ.தி.மு.க-வின் பக்கம்தான் இருக்கிறார்கள் என்கிற உண்மை தெரிந்துவிடும்'' என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர், ``இந்தக் கருத்துக்கணிப்புகள் அனைத்தையும் பார்க்கும்போது தி.மு.க அலை இருப்பதாகவே தெரிகிறது. அ.தி.மு.க 35 சதவிகித வாக்குகள் வரை பெறும் என்று சில கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியே இல்லாமல் போகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தங்களது வாக்குவங்கியை அந்தக் கட்சி ஓரளவுக்கு தக்கவைத்திருப்பதாகத் தெரிகிறது.

மற்ற தேர்தல்களைப்போல இல்லாமல் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க தவிர்த்து அ.ம.மு.க., நாம் தமிழர், ம.நீ.ம என மூன்று கட்சிகளும் கவனம்பெற்றிருக்கின்றன. கருத்துக்கணிப்புகளில் அ.ம.மு.க., ம.நீ.ம ஆகிய கட்சிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், நாம் தமிழர் கட்சி பற்றிய கணிப்புகள் எதுவும் சொல்லப்படாதது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த முறை நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கி கணிசமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை. `ம.நீ.ம., அ.ம.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் சட்டசபைக்குள் முதல் அடியை எடுத்துவைக்க வாய்ப்பிருக்கிறது' என்பதையும் இந்தக் கருத்துக கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. என்னதான் இருந்தாலும் இவையனைத்தும் வெறும் கணிப்புகள்தாம். உண்மையான முடிவைத் தெரிந்துகொள்ள இரண்டு நாள்கள் காத்திருப்போம்'' என்கிறார்கள்.

Exit Polls - மே. வங்கம்; கேரளா; அஸ்ஸாம்; புதுச்சேரி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
ஆம்! இவ்வளவு நாள்கள் பொறுத்துவிட்டோம். இரண்டே நாள்கள்தானே... பொறுத்திருந்து பார்ப்போம் `மக்கள் யார் பக்கம்' என்பதை!
அடுத்த கட்டுரைக்கு