Published:Updated:

குறிப்பிட்ட சில துறைகளில் தனியாரை அனுமதித்துத்தான் ஆக வேண்டும்!

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

- விளக்குகிறார் அமைச்சர் பி.டி.ஆர்

குறிப்பிட்ட சில துறைகளில் தனியாரை அனுமதித்துத்தான் ஆக வேண்டும்!

- விளக்குகிறார் அமைச்சர் பி.டி.ஆர்

Published:Updated:
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதி நிலைமை, ‘தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு, கட்டண உயர்வுகள், தனியார்மயமாக்கல், தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்…

“தமிழ்நாட்டின் நிதிநிலையை நினைத்தால் பயமாக இருக்கிறது’ எனச் சொல்லியிருந்தீர்கள். இப்போது எப்படி இருக்கிறது நிலைமை?”

“தி.மு.க ஆட்சி தொடங்கி, அடுத்து வந்த அம்மையார் ஆட்சி வரை தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியாக இருந்தது. ஆனால், 2014-க்குப் பிறகு எடுத்த தவறான முடிவுகள், மோசமான திட்டங்கள், சிந்தனையற்ற செயல்பாடுகளால் தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிக மோசமான இடத்துக்குச் சென்றுவிட்டது. மாநில வருமானத்தில் 23 சதவிகிதம் வட்டிக்கு மட்டுமே சென்றதை, தலைவர் கலைஞர் தொடங்கி அந்த அம்மையார் வரை பல்வேறு திட்டங்கள் மூலம் 11 சதவிகிதத்துக்குக் கீழ் குறைத்தனர். ஆனால், இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் வட்டி விகிதத்தை மீண்டும் 27 சதவிகிதத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார்கள். அதனால்தான் நிதி நிலைமை மோசமானது. தற்போது, தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறையை ஓரளவு சரிசெய்திருக்கிறோம். வட்டியையும், கடன் சதவிகிதத்தையும் அதிகரிக்காமல் தடுத்திருக்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகள் வருவாய்க் கணக்கிலுள்ள பற்றாக்குறையை முழுமையாகச் சரிசெய்வோம்.”

குறிப்பிட்ட சில துறைகளில் தனியாரை அனுமதித்துத்தான் ஆக வேண்டும்!

“நிதிநிலை இவ்வளவு மோசமடைந்ததற்கு அதிகாரிகளும் முக்கியக் காரணம் என்றீர்கள். ஆனால், இப்போதும் அதே அதிகாரிகள்தானே பதவியில் தொடர்கிறார்கள்?”

“நியாயமான குற்றச்சாட்டுதான். என் துறையைப் பொறுத்தவரை என் அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லைக்குள் நடவடிக்கை எடுத்து, ஓரளவு சரியான நபர்களை நியமித்திருக்கிறேன். தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள், துறைகள், பொது நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் மேலாண்மை செய்வதற்குக் குறைந்தது 600 முதல் 800 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வேண்டும். ஆனால், இருப்பது 350 பேர் மட்டும்தான். இவர்களை வைத்து தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலத்தை எப்படி மேலாண்மை செய்ய முடியும்... தவறானவர்களை மாற்ற வேண்டும்தான். ஆனால், சரியில்லை என ஒவ்வொருவரையும் நீக்கிவிட்டால், திட்டங்களை யாரைவைத்துச் செயல்படுத்துவது. இருப்பவர்களைவைத்துத் திட்டங்களை எப்படிச் சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அதுதான் இப்போதைக்குச் செய்யக்கூடியதும்.”

“ `தி.மு.க தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ என எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டுகின்றனவே?”

“டெல்லியில் இருக்கும் ஒரு கட்சி கொடுத்த வாக்குறுதிகளை எடுத்து ஆராய்ந்தால், அதில் பத்து சதவிகிதத்தைக்கூட நிறைவேற்றியிருக்க மாட்டார்கள். அதற்கான புள்ளிவிவரங்கள் என்னிடம் இருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமல்ல, சட்டமன்றத்தில் அறிவித்ததில்கூட எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், தலைவர் தலைமையிலான எங்கள் ஆட்சியில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளைத் துறைரீதியாகப் பிரித்து, ஒவ்வொன்றுக்கும் அதிகாரிகளை நியமித்து, செயல்படுத்தவைத்திருக்கிறார் முதல்வர்.”

“500 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகச் சொல்கிறீர்கள். ஆனால், மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை, காஸ் சிலிண்டருக்கான மானியம் உள்ளிட்டவற்றைச் செயல்படுத்தியிருக்கலாமே?”

“முதல்வர் என்னை எப்போது சந்தித்தாலும் முதலில் கேட்கும் கேள்வி ‘இந்த இரண்டு திட்டங்களையும் எப்போது செயல்படுத்தலாம்?’ என்பதுதான். பெட்ரோல், டீசலில் மாநில அரசுக்கு வரிப் பங்கு இருக்கிறது. ஆனால், காஸ் சிலிண்டரில் எங்களுக்கு எந்தப் பங்குமில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். எத்தனை சிலிண்டர் வைத்திருக்கிறார்களோ அத்தனைக்கும் கொடுக்க வேண்டுமா, ஒன்றுக்கு மட்டும் கொடுத்தால் போதுமா என்ற கேள்வி இருக்கிறது. மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். முதல்வரின் மனதுக்கு நெருக்கமான இந்த இரண்டு திட்டங்களும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.”

“ `தேர்தலில் வெற்றிபெறுவதற்காக, வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிட்டது தி.மு.க’ என்று விமர்சனம் வைக்கப்படுகிறேதே?”

“வாக்குறுதிகளால்தான் வெற்றிபெற்றோம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. டெல்லியில் இருக்கும் ஒருவர் ‘ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுக்கிறேன்’ என்றார். ‘கறுப்புப் பணம் ஒழியவில்லை என்றால், என்னைக் கொடூரமாகக் கொலை செய்யுங்கள்’ என்றார். இவை இரண்டுமே நடக்கவில்லையே... அப்படியானால், அவர் எப்படி மீண்டும் வெற்றிபெற்றார்... அதனால்தான் சொல்கிறேன், வாக்குறுதிகளுக்கும் தேர்தல் வெற்றிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.”

குறிப்பிட்ட சில துறைகளில் தனியாரை அனுமதித்துத்தான் ஆக வேண்டும்!

“தமிழ்நாட்டில் தனியார்மயமாக்கல் நடந்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?”

(நீண்ட யோசனைக்குப் பிறகு) “டெல்லியில் அரசாங்கத்தால் கட்டப்பட்ட, உருவாக்கப்பட்ட, சிறப்பாகச் செயல்பட்ட, லாபத்திலிருந்த நிறுவனங்களை திவாலாக்கி விற்கிறார்கள் அல்லது அப்படியே விற்கிறார்கள். அப்படி நாங்கள் எந்தக் காலத்திலும் செய்ய மாட்டோம். ஆனால், குறிப்பிட்ட சில துறைகளில், பணிகளில் தனியாரை அனுமதித்துத்தான் ஆக வேண்டும். தமிழ்நாடு மின்துறையில் கிரீன் எனர்ஜி திட்டத்தைச் செயல்படுத்த 1.5 லட்சம் கோடி தேவை. ஒரு லட்சம் கோடி கடனில் இருக்கும் மின்துறையால் எப்படி இதைச் செயல்படுத்த முடியும்... எனவே, இதில் முதலீடு செய்யத் தயாராக உள்ளவர்கள் மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடுகிறோம். அதில் என்ன தவறு... யதார்த்தத்தில் எது சரியோ அதை பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் மூலம் செயல்படுத்துகிறோம். இதுவரை ஆண்டுக்கு மொத்தம் 35,000 கோடிதான் தமிழ்நாடு அரசின் முதலீடாக இருந்தது. தற்போது தனியாரை அனுமதித்ததன் மூலம், இந்த ஆண்டு 40,000 கோடியாக முதலீடு உயர்ந்திருக்கிறது. நிதிநிலையைச் சீர்செய்துவிட்டால் 2024-25-ம் ஆண்டில், 90,000 கோடி அரசே முதலீடு செய்யும் அளவுக்கு வளர்ந்துவிடுவோம். தனியார் மூலம் ஆண்டுக்கு 50,000 கோடி முதலீடு கிடைத்தால், ஆண்டுக்கு 1.4 லட்சம் கோடி நம்மால் முதலீடு செய்ய முடியும். இதனால், எத்தனை வேலை வாய்ப்பு, எவ்வளவு வளர்ச்சி வரும் என யோசித்துப் பாருங்கள்.”

“தமிழ்நாட்டின் அரசியல் களம், மதத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறதா?”

“தமிழ்நாட்டைச் சிலர் மதத்தை நோக்கி இழுத்துச் செல்ல முயல்கிறார்கள். அந்த மாதிரியான தீயசக்திகளை மக்கள் நிச்சயம் விரட்டியடிப்பார்கள். ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் திராவிட மண், தமிழ்ப் பண்பாடு, அதன் அடிப்படைத் தத்துவங்கள், வாழ்க்கை முறை இவை அனைத்துமே மதவெறியர்களுக்கு விரோதமானவை. மதவெறியர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள். எனவே, அவர்களால் இங்கு எப்போதும் காலூன்ற முடியாது.”

“உங்கள் பார்வையில் தமிழ்நாட்டில் யார் எதிர்க்கட்சி?”

“யாரும், என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், என்னைக் கேட்டால் அ.தி.மு.க-தான் இங்கே எதிர்க்கட்சி. கடந்த ஐம்பது ஆண்டுகளில் பலமுறை ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். உள்ளாட்சி தொடங்கி, சட்டமன்றம் வரை பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்களை வைத்திருக்கிறார்கள். மற்றவர்கள் சும்மா சொல்லிக்கொள்ளலாம்!”