தமிழக அரசின் 'ஓராண்டில் ஒரு லட்சம் மின் இணைப்பு' என்ற திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக அரங்கில் நடந்த விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர், ``தமிழகத்தில் வனப்பரப்பபை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, வனத்துறை சார்பில் பசுமையாக்கல் திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகளில் 261 கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் 33 சதவிகிதம் வன அடர்த்தி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டதின் பேரில் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வன விலங்குகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மனித விலங்கு மோதல்களைத் தடுக்கவும் வனத்துறை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வனப்பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதிகளில் யானை அகழிகள் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அகழிகள் வெட்ட முடியாத இடங்களில் சோலார் தொங்கு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கும், உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கும் முழுமையாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க உயர் மட்ட பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்டவாளங்களில் ரயில் மோதி யானைகள் உயிரிழத்தைத் தவிர்க்கும் வகையில், அதிகளவிலான வேட்டைத் தடுப்பு காவலர்களை பணியமர்த்தி இருக்கிறோம். எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு புதிதாக 1,000 வேட்டைத் தடுப்பு காவலர்களை தேர்வு செய்யப்படுவார்கள்" என்றார்.