Published:Updated:

தமிழ்நாடு அரசின் '12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும் முறை' இதுதான்!

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு
ப்ளஸ் டூ பொதுத்தேர்வு

கொரோனா தொற்றின் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண்களைக் கணக்கிடும் முறை குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையில், தொற்றுப் பரவல் அதிகரித்ததன் காரணமாக, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது அரசு. உயர்கல்விக்கு அடிப்படையாக இருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது சரியான முடிவு அல்ல எனவும், தொடர்ந்து கற்றலே நடைபெறாத சூழலில் தேர்வுகள் நடத்தி மாணவர்களை மேலும் அழுத்தத்துக்கு ஆளாக்காமல் தமிழ்நாடு அரசு அதை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதேபோல நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இரண்டு வகையான கருத்துகள் எழுந்தன. உயர்கல்விக்குப் பெரிதும் பயன்படும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் எப்படிக் கணக்கிடப்பட உள்ளது என்ற கேள்வியும் எழுந்தது. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு நியமித்தது.

பொதுத்தேர்வுகள்
பொதுத்தேர்வுகள்

10, 11-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு அதற்கான மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு (அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரியை வைத்து சதவிகிதம், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண்களை மட்டும் வைத்து) சதவிகிதம், 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வை வைத்து 30 சதவிகிதம் என்று மொத்தம் 100 சதவிகிதத்துக்கு மதிப்பெண் கணக்கிடப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

'நீட் தேர்வு ரத்து குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை' - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

மேலும், “12-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வில் 20 மற்றும் அக மதிப்பீட்டில் 10 என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு, முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

அரசு அறிவிப்பு
அரசு அறிவிப்பு

11, 12-ம் வகுப்புகளில் செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்கு பெறாத மாணவர்களுக்கு 10, 11-ம் வகுப்புகளின் எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலையில் இருந்திருந்தாலோ, அந்த மாணவர்களுக்கு தற்போது அந்தத் தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும்.

11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வு அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு அக மதிப்பீடு செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில்கூட கலந்துகொள்ளாத மாணவர்கள், தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31-ம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறை இணையத்தில் வெளியிடப்படும். இந்த மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் 12-ம் வகுப்பு எழுத்துத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு நடத்தப்படும் தேர்வில், அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும்.

தேர்வு முடிவு
தேர்வு முடிவு

தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து தக்க சமயத்தில் தேர்வு நடத்தும். இந்தத் தேர்வுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்” எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு