Published:Updated:

`எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளை முடித்து வைக்கலாம்!' - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

எஸ்.பி.வேலுமணி மீதான புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், திமுக, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி, பல்வேறு டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டிக்கிறார் எனவும் அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தற்போது, எஸ்.பி.வேலுமணி மீதான புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், திமுக, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

முன்னதாக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், `உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டிலிருக்கும் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கைகாட்டும் நபர்களுக்கே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, அமைச்சரின் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பலகோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டிருக்கின்றன' என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ஆர்.எஸ். பாரதி
ஆர்.எஸ். பாரதி

மேலும், `ரூ.942 கோடி அளவுக்கு உபரி வருவாயைக் கொண்டிருந்த சென்னை மாநகராட்சி, எஸ்.பி.வேலுமணியின் தவறான நிர்வாகத்தால் ரூ.2,500 கோடி அளவுக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!" என ஆர்.எஸ். பாரதி தனது மனுவில் கோரியிருந்தார்.

அதேபோல் கடந்த 2018-ம் ஆண்டு ஜெயராம் வெங்கடேஷ் தொடர்ந்த வழக்கில், `2014 ஜூன் முதல் 2015 நவம்பர் வரை கோவை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் சுற்றுசுவர் அமைத்தல், குடிநீர்குழாய் பதித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு கே.சி.பி இன்ஜினியர்ஸ் (KCP Engineers Pvt Ltd ), எஸ்.பி பில்டர்ஸ் (SP Builders) போன்ற வேலுமணிக்கு நெருங்கிய நிறுவனங்களுக்கே டெண்டர் ஒதுக்கப்பட்டிள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.'

அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேஷ்
அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேஷ்

இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்திருந்த எஸ்.பி. வேலுமணி, `அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுத்தேனேத் தவிர, மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் நான் தலையிடுவதில்லை' என குறிப்பிட்டிருந்தார். மேலும், `தான் எம்.எல்.ஏ.வாகும் முன்பே தன் சகோதரர்களின் நிறுவனங்கள், கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரராக இருந்திருக்கின்றனர். எனவே, மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்துபோன டெண்டர் ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கமுடியாது என விளக்கமளித்தார். மேலும், `தனது பெயரையும் தான் சார்ந்திருக்கும் கட்சியின் பெயரையும் களங்கப்படுத்தவே இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது' என பதிலளித்திருந்தார்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

இந்த நிலையில், தற்போது இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ``முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதால், தி.மு.க., அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை நிலுவையில் வைக்காமல், முடித்துவைக்கலாம்'' எனக் கூறினார். அதேபோல தி.மு.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவனும் இந்த வழக்கை முடித்துவைக்கலாம் எனக்கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேசமயம் அறப்போர் இயக்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுரேஷ் ,``முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வழக்குபதிவது மட்டுமே கோரிக்கை அல்ல; அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரால் பலனடைந்தவர்கள் என அனைவரையும் வழக்கில் சேர்க்கும் வகையில் `சிறப்பு புலனாய்வுக் குழு' ஒன்றை அமைக்க வேண்டும். அதன்பிறகு, நீதிமன்றம் மேற்கொண்டு முடிவெடுக்கலாம்" என எதிர்த்து வாதாடினார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சதீஷ் பராசரன், வி.இளங்கோ ஆகியோர், ``இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள வேலுமணி தயாராக இருக்கிறார். அதேசமயம், தனக்கு எதிரான இந்த வழக்கு எதனடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான ஆவணங்களையும் கையளிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி, பி.டி. ஆதிகேசவலு ஆகியோர், வழக்குகளின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு