தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு! - காணும்பொங்கலன்று கடற்கரைகளுக்குச் செல்லத் தடை

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு இன்று (31.12.2020) முடிவடைகிறது. இந்தநிலையில், தற்போது அமலில் இருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டு, ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இதற்கு முன் அளிக்கப்பட்ட பல தளர்வுகளுடன் தற்போது மேலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தளர்வுகளும் நோய் கட்டுப்பட்டுப் பகுதியைத் தவிர மற்ற எல்லா இடங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
உள் அரங்கங்களில் மட்டும், 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக 200 பேர் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடந்த 01.01.2021 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம், சென்னை மாநகராட்சி, காவல்துறையிடம் முறையான அனுமதி பெறவேண்டும்.
திரைப்படம், சின்னத்திரை உட்படத் திரைப்படத் தொழிலுக்கான உள் அரங்கு, திறந்தவெளியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டுப் பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பின்றி பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அனைத்து வழிபட்டுத் தலங்களிலும் வழக்கமான நேர நடைமுறைகளைப் பின்பற்றியும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தொடரும் தடை!
புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள இ-பதிவு நடைமுறை (புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைத் தவிர) தொடரும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை மத்திய அரசால் நீடிக்கப்பட்டுள்ளதால், அந்தத் தடையும் தொடரும்.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம் கூடுவதால், கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் (16.01.2021) அன்று மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும், பொதுமக்கள் அனைவரும் சரியான சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்குமாறும், வெளியில் செல்லும்போது முகக்கவசங்களை அணிந்து, அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.