Published:Updated:

எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்ற ஆன செலவு 52 லட்சம் ரூபாய்! - புதுத் தகவல்

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் எடப்பாடி
தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் எடப்பாடி ( விகடன் )

2017-ம் ஆண்டு சுதந்திர தினத்தில் முதன்முறையாகக் கோட்டையில் கொடியேற்றினார், முதல்வர் எடப்பாடி. அப்போது விழாவுக்காகச் செலவழிக்கப்பட்ட பணம் 52 லட்சம் ரூபாய்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. தலைநகர் டெல்லியில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றிவைப்பார். மாநிலங்களில் முதல்வர்கள் கொடியேற்றுவார்கள். சுதந்திர தினத்தில் கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் கொடியேற்றுவது வழக்கம். சுதந்திர தினத்தில் கோட்டையில் முதல்வர் கொடியேற்ற எவ்வளவு செலவு ஆகும்?

கோட்டைக் கொத்தளம்
கோட்டைக் கொத்தளம்
விகடன்

அழைப்பிதழ்கள், இனிப்புகள், பத்திரிகை விளம்பரங்கள், கொடிக் கம்பத்துக்கும் கொத்தளத்துக்கும் பெயின்டிங் எனச் சுதந்திர தின ஏற்பாட்டுக்காக நிறைய செலவுகள் செய்வார்கள். கோட்டைக் கொத்தளத்துக்கு எதிரே இருக்கிற இடத்தில்தான் நீதிபதிகள், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி-க்கள் என முக்கியப் பிரமுகர்கள் பலரும் அமர்ந்து சுதந்திர தின விழாவைக் கண்டுகளிப்பார்கள். இதற்காகப் பெரிய அளவில் மேடைகளும் மேற்கூரைகளும் அமைப்பார்கள். கோட்டை முழுவதும் சீரியல் லைட் வேறு போடுவார்கள். இப்படியான வசதிகள் செய்து தருவதற்காக அரசின் பணம் செலவழிக்கப்படும்.

இதுதவிர கல்பனா சாவ்லா விருது, சிறந்த நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு விருதுகள் கொடுப்பார்கள். அதற்கான செலவுத் தொகைகளும் இதில்தான் அடங்கும். சுதந்திர தினத்தில் காவல் துறையின் பல பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெறும். இதற்காக ஐந்து நாகள் ஒத்திகை பார்ப்பார்கள். இதில் கலந்துகொள்ளும் போலீஸ்காரர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படும். அந்தச் செலவும் இதில் சேரும்.

தேசியக் கொடியை ஏற்றும் எடப்பாடி...
தேசியக் கொடியை ஏற்றும் எடப்பாடி...
விகடன்

கோட்டைக் கொத்தளத்தில் ஏறுவதற்கு நீண்ட படிக்கட்டுகள் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக அதில் முதல்வர்கள் ஏறிச் செல்வதில்லை. ஏர்போர்ட்டில் விமானத்தில் ஏறுவதற்காகப் பயன்படுத்தும் மொபைல் லிஃப்டைப் பயன்படுத்துவார்கள். மறைந்த முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதாவும் கருணாநிதியும் இந்த லிஃப்ட்டைப் பயன்படுத்தினார்கள். அந்த லிஃப்டை வாடகைக்கு எடுத்தால் அதற்காகத் தனியாகப் பணம் ஒதுக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதெல்லாம் இருக்கட்டும். மொத்தமாக எவ்வளவு செலவு ஆகும் எனப் பார்ப்போம். 2017-ம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு ஆன செலவு விவரம், விகடனுக்கு பிரத்யேகமாகக் கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி முதல்முறையாகக் கொடியேற்றிய 2017 சுதந்திர தினத்துக்கு 52,07,423 ரூபாயைச் செலவழித்திருக்கிறார்கள். 'அரசு நிகழ்ச்சி செலவுகள்' என்ற தலைப்பில் இந்தப் பணம் பற்று வைக்கப்பட்டிருக்கிறது.

2017-ம் ஆண்டு செலவு 52 லட்சம் ரூபாய். கடந்த ஆண்டு அதைவிட அதிகம் ஆகியிருக்கும். அந்த விவரம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு 60 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு