Published:Updated:

மேயருக்கு நேரடித் தேர்தல் ரத்து; மறைமுகத் தேர்தலுக்கு முடிவு? - அரசின் புதிய திட்டம்

உள்ளாட்சித் தேர்தலை இப்போது நடத்தினால் ஆளும்கட்சியான அ.தி.மு.க தரப்பில் தலைவர் பதவிகளைக் கைப்பற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்கிற பேச்சு அந்தக் கட்சிக்குள்ளேயே எழுந்திருக்கிறது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடித்தேர்தல் முறையிலிருந்து மறைமுகத் தேர்தல் முறைக்கு மாற்ற முடிவாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநிலத் தேர்தல் ஆணையம்
மாநிலத் தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, ஆளும்கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விருப்பமனுக்கள் வாங்குவது வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தி.மு.க தரப்பும் விருப்பமனு வாங்கும் காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடந்தாலும் கட்சி சின்னத்தில் போட்டியிடும் 50,000-த்துக்கும் அதிகமான இடங்களுக்கு மட்டுமே விருப்பமனு பெறப்படுகிறது. 15 மேயர் பதவிகள், 123 நகர்மன்றத் தலைவர்கள், 529 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி வாக்களிப்பு மூலம் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழக உள்ளாட்சி விதிப்படி மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகள் நேரடியாகவும் ஊராட்சி ஒன்றியத் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் மறைமுகத் தேர்தல் மூலமாகவும் தேர்வு செய்யப்படும் நடைமுறை தற்போது உள்ளது. இந்த முறையில் வரும் உள்ளாட்சித்தேர்தலை நடத்தினால் ஆளும்கட்சியான அ.தி.மு.க தரப்பில் தலைவர் பதவிகளைக் கைப்பற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்கிற பேச்சு அந்தக் கட்சிக்குள்ளேயே எழுந்திருக்கிறது.

`அம்மா இருந்தவரை உழைத்தவர்களுக்கு சீட் கிடைத்தது..இனி?’- உள்ளாட்சி அரசியலால் கலங்கும் அ.தி.மு.க

இந்தச் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான ஆலோசனையே பிரதானமாக இருந்திருக்கிறது.

இந்த முறையை இந்தத் தேர்தலில் கடைப்பிடித்தால் கணிசமான இடங்களில் ஆளும்கட்சியினர் வெற்றிபெறுவார்கள் என்று அமைச்சர்கள் ஐடியா கொடுத்துள்ளார்கள். அதற்கு முதல்வரும் ஒப்புதல் கொடுத்துள்ளார். இதனால் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறைமுகத் தேர்தல் முறையில் குதிரை பேரம் அதிகம் நடக்கும் என்ற காரணத்தால்தான் ஜெயலலிதா நேரடி தேர்தல் முறையை மீண்டும் கொண்டுவந்தார். ஆளும்கட்சி தங்களது வெற்றியை உறுதியாக்கிக்கொள்ளவே, இந்த ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது என்று இப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள் எதிர்க்கட்சியினர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

`அதேநேரம் தமிழக சட்டமன்றத்துக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது உள்ளாட்சிப் பகுதிகளில் கணிசமான அளவில் அ.தி.மு.க-வினர் பதவியில் இருந்தால்தான் அந்தத் தேர்தலை சந்திக்க வசதியாக இருக்கும். அதற்காகத் தமிழகத்தின் உள்ளாட்சி விதிமுறைகளை தங்கள் இஷ்டப்படி மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டது ஆளும் கட்சி' என்கிறார்கள். இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. அடுத்த பொதுத்தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சிக்கல் வந்துவிடும். அதை இப்போது உணராமல் அ.தி.மு.க அரசு இந்த முடிவை எடுக்கப்பார்க்கிறது என்றும் அ.தி.மு.க-வினர் வருந்துகின்றனர்.