போராட்ட அறிவிப்பு எதிரொலி? - அரசுப் பணியாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்ற தமிழக அரசு

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்கு திரும்பப் பெறப்படுவதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 7,500-க்கும் அதிகமான ஊழியர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை மட்டுமல்லாமல், அவர்கள்மீது வழக்குகளும் போடப்பட்டிருந்தன.

இப்படி அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 7,898 பேர் மீதான அனைத்து நடவடிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டிருப்பதாகத் தமிழக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
``அரசு எடுத்திருக்கும் இந்த நல்ல முடிவை ஏற்று, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மேலும் ஊக்கமுடனும், ஆக்கமுடனும் செயல்பட வேண்டும். சிறந்த மக்கள் பணியையும், கல்விப்பணியையும் தொடர வேண்டும்" என்று முதல்வர் கேட்டுக்கொண்டிருக்கிறார். தமிழக அரசின் இந்த அறிவிப்பை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்றுவருகின்றனர்.
இது மட்டுமல்லாமல், சாலைமறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈட்டுப்பட்ட 17,686 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்கள்மீது 408 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதேபோல 2,338 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அரசு துறைரீதியாக மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகளையும், வழக்குகளையும் திரும்பப் பெறக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அவர்கள் மீதுள்ள அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் திரும்பப் பெறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில், கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்டல அளவிலான ஆயத்த மாநாட்டில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால், பிப்ரவரி 2-ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர் சங்கங்கள் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.