மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் புனித பயணம் புறப்படும் தொடக்க விழாவுக்குத் தமிழக ஆளுநர் ரவி சென்றிருந்தார். ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வி.சி.க, தி.க உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டன.
அப்போது ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது கல், கையிலிருந்த கறுப்புக் கொடி உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை , ``தி.மு.க தலைவர்களின் தூண்டுதலின் பேரிலேயே அந்தக் கட்சியின் தொண்டர்கள் ஆளுநரின் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
ஆளுநரின் உயிருக்கு ஆபத்து என்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. முதலமைச்சர் இன்று மாலைக்குள் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்” எனக் கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில், ``ஆளுநர் மீது சிறு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது காவல்துறை.
அதுமல்லாமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அரசியல் சட்ட பதவியில் இருப்பவர்களைக் காப்பாற்றிட, அவர்களுக்குரிய பாதுகாப்பை அளித்திட, இந்த அரசுக்குப் பொறுப்பிருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``எமர்ஜென்சி முடிந்து இந்திரா காந்தி தமிழகம் வந்தபோது, கல்வீசி நெற்றியில் ரத்தம் வழியும் படி தாக்கப்பட்டார். அப்போது அது பற்றிக் கிண்டல் செய்து பேசிய கருணாநிதியின் கட்சியில் இன்று வெட்கமே இல்லாமல் கூட்டணியில் இருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி.
அவருடைய தலைவருக்கு நடந்தது போல இன்று ஆளுநருக்கு நடந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைவர் இதுபற்றி பேசவில்லை. அப்படியானால் கட்சியை தி.மு.க-விடம் அடகு வைத்து வங்கி லாக்கரில் பூட்டி விட்டார்களா? ஒரு அரசியல் தலைவருக்கு அழகு தவறை தவறு என்று சொல்வது. இந்திரா காந்தி மீது தாக்குதல் நடந்தபோது காங்கி்ரஸார் அடுத்த நிலைக்குச் சென்றார்கள்.

இன்று அடுத்த நிலைக்குச் செல்ல பயம். மேலும், ஆளுநரின் பாதுகாப்பு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லும் கருத்தை ஏற்கமுடியாது. திரைத்துறையில் இருப்பவர்களை பா.ஜ.க இயக்கவில்லை. அவர்களாகவே கருத்து தெரிவிக்கின்றனர். இளையராஜா பேசிய விவகாரத்தில் அம்பேத்கரை வைத்து அரசியல் செய்தவர்கள்தான் கோபப்படுகின்றனர். அம்பேத்கர் பற்றி திருமாவளவனுடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.