ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் சிறைத் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். இந்த நிலையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரில் ஒருவரான நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த மனுவில், ``இந்திய அரசியல் சாசனம் 161-வது பிரிவின் கீழ் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது.
கடந்த அ.தி.மு.க அமைச்சரவையில் ஏழு பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் 42 மாதங்களாக இந்தத் தீர்மானத்தை நிலுவையில் வைத்திருப்பது சட்டத்துக்கு விரோதமானது. எனவே, ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திராமல் அமைச்சரவை தீர்மானத்தின்படி என்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ``தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் என்ன உத்தரவைப் பிறப்பிக்க முடியும்... ஏழுவர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா அல்லது ஏழு பேரின் வழக்குகளும் அனுப்பப்பட்டனவா?" எனக் கேள்வி எழுப்பினர். மேலும், தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு விளக்கமளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு, ``ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனையில் உள்ள பேரறிவாளன் மட்டுமின்றி ஆறு பேரின் ஆவணங்களையும் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்" என பதிலளித்துள்ளது. முன்கூட்டியே ஏழு பேரை விடுவிக்கக் கோரும் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், `தமிழக அரசு எந்தத் தேதியில் ஆவணங்களை அனுப்பியது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டது.