Published:Updated:

EWS: ``மறுசீராய்வு மனு தாக்கல்செய்ய முடிவு; கலந்துகொண்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு" - பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

``முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு கட்சியும் இந்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு போடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு இந்த பத்து கட்சிகளுமே ஒத்துக்கொண்டிருக்கின்றன." - பொன்முடி

EWS: ``மறுசீராய்வு மனு தாக்கல்செய்ய முடிவு; கலந்துகொண்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு" - பொன்முடி

``முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு கட்சியும் இந்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு போடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு இந்த பத்து கட்சிகளுமே ஒத்துக்கொண்டிருக்கின்றன." - பொன்முடி

Published:Updated:
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு(EWS) 10 சதவிகித இடஒதுக்கீடு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதுக்காக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, பா.ஜ.க தவிர்த்து தி.மு.க காங்கிரஸ் உட்பட மொத்தம் 10 கட்சிகள் கலந்துகொண்டன.

அனைத்துக் கட்சி கூட்டம்
அனைத்துக் கட்சி கூட்டம்

அதைத்தொடர்ந்து கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அனைத்து கட்சிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சிகளுமே ஆதரவளித்திருக்கின்றன.

பின்னர் கூட்டம் முடிவடைந்ததையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ``பத்து கட்சிகள் இதில் கலந்திருக்கின்றன. எல்லா கட்சிகளுமே, இந்த பொருளாதார அடிப்படை என்று சொல்லிக் கொண்டிருக்கிற 10 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரித்து உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிற தீர்ப்புக்கு எதிர்ப்பாக நீதிமன்றத்தை மீண்டும் அணுகவேண்டும் என்ற கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு கட்சியும் இந்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு போடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு இந்த பத்து கட்சிகளுமே ஒத்துக்கொண்டிருக்கின்றன. வாய்ப்பு ஏற்படுகிறபோது சட்டத்துறையோடு கலந்தாலோசித்து தமிழக அரசு ஒரு நடவடிக்கை எடுக்கும் என்று ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார். மேலும், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ உட்பட அனைவரும் தங்களின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

குறிப்பாக இன்று அ.தி.மு.க கலந்துகொள்ளவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும் கலைஞரின் கொள்கையை, பெரியாரின் கொள்கையைப் பின்பற்றிய அ.தி.மு.க தான் இன்று இதில் கலந்து கொள்ளவில்லை அது ஏன் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதற்குக் காரணம் இன்று இருக்கிற அ.தி.மு.க-வினுடைய உள் பிரச்னையா அல்லது கொள்கையிலேயே அவர்களுக்கு பா.ஜ.க-வோடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னமோ என்று எங்களுக்குத் தெரியவில்லை.

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

நேற்று கூட ஒரு முன்னாள் அமைச்சர் பெரிய வித்துவானைப் போல பேசியிருக்கிறார். இதில் அ.தி.மு.க-வும் கலந்துகொண்டிருக்க வேண்டும். அவர்கள் கலந்து கொள்ளாதது எங்களுக்கு வருத்தம் அளித்தாலும்கூட அவர்கள் இதை ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. அவர்களும் இந்த மறுசீராய்வு மனுவை அ.தி.மு.க-வின் சார்பில் போடுவார்கள். ஏனென்றால் தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்களில் 90 சதவிகிதம் பேர் இந்த சமூகநீதி கொள்கையின் கீழ் வருகிறார்கள். இந்த 90 சதவிகிதம் பேரையும் எதிர்த்து ஒரு பத்து சதவிகித பேருக்காக இன்று அ.தி.மு.க சென்று கொண்டிருக்கிறது என்பதைத் தமிழகத்து மக்கள் நன்கு உணர்ந்து கொண்டே இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பிருக்கிறதா என்று பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, அதற்குச் சட்ட வாய்ப்புகள் இல்லையென்றும், அதனால்தான் அனைத்துக்கட்சி மறுசீராய்வு தாக்கல்செய்யத் தீர்மானம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொன்முடி கூறினார்.