Published:Updated:

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... 9.92 கோடி ரூபாயை வீணடித்த அரசு!

18 Disqualified MLAs
18 Disqualified MLAs

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினத்தில், அந்த வழக்குக்காக மக்கள் வரிப்பணம் விரயமான விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது விகடன்.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினம் இன்று. டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.

Speaker Dhanapal
Speaker Dhanapal

தங்கள் முதுகில் குத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பழிவாங்க, ஆளும் தரப்பிலிருந்த 18 எம்.எல்.ஏ-க்களை எடப்பாடிக்கு எதிராக ஏவினார் டி.டி.வி. தினகரன். ‘எடப்பாடியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என ராஜ்பவன் படியேறினார்கள் 18 பேரும். அவர்கள் அளித்த மனு மீது அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரத்தில், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி, 18 பேரின் எம்.எல்.ஏ பதவிகளைப் பறித்தார் சபாநாயகர் தனபால். இதை எதிர்த்து அந்த 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார்கள். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒற்றை வழக்காகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்தது இந்த விவகாரம்.

''தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வந்ததும் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்துவிடும்’’ என்று நம்பிக்கையோடு சொல்லிவந்தார் தினகரன். 2018 ஜனவரி 23-ம் தேதி வழக்கு விசாரணை முடிந்த பிறகும்கூடத் தீர்ப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

Chennai High court
Chennai High court

விசாரணை முடிந்து 90 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், ‘இந்த வழக்கின் தீர்ப்பை விரைவாகச் சொல்லுங்கள் அல்லது அந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுங்கள்’ என தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

ஒருவழியாக, 2018 ஜூன் 14-ம் தேதி தீர்ப்பு வெளியானது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வுதான் வழக்கை விசாரித்தது. 'சபாநாயகரின் உத்தரவு செல்லும்' எனத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் 'சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது' என நீதிபதி சுந்தரும் அறிவித்தார்கள்.

Indira Banerjee
Indira Banerjee

மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால், மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணாவிடம் வழக்கு போனது.

2018 அக்டோபர் 25-ம் தேதி நீதிபதி சத்யநாராயணா அளித்த தீர்ப்பில், 'சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லும்' என அறிவித்த பிறகு, வழக்கு முடிவுக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் வழக்கு இன்னும் இழுக்கப்படும் என்பதால், தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்யவில்லை.

Dhinakaran Supporters
Dhinakaran Supporters
Vikatan

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த இருந்த தடையையும் நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பில் நீக்கப்பட்டதால் எப்போது தேர்தல் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், உடனடியாக அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. 2019 ஏப்ரலில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது அந்த 18 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆளும்கட்சியும் தினகரன் தரப்பும், சட்டப் போராட்டம் நடத்தியது. முதல்வர் எடப்பாடி சார்பாக மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியநாதனும் சபாநாயகர் சார்பில் ஆரியமா சுந்தரமும் அரசுக் கொறடா சார்பில் முகுல் ரோத்தகியும் ஆஜரானார்கள்.

Edappadi Palaniswami with TTV Dhinakaran
Edappadi Palaniswami with TTV Dhinakaran
Vikatan

18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கான சம்பளத்தைத் தினகரன் அளித்திருக்கலாம். ஆனால், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்குக் கட்டணத்தை அரசு கஜானாவில் இருந்துதான் கொடுத்திருக்கிறார்கள்.

எடப்பாடி ஆட்சி மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இப்போதும் நடந்துவருகிறது. இந்த இரண்டு வழக்கிலும் அரசு தரப்பில் ஆஜரானவர்கள் நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள்.

Edappadi Palaniswami and O.Panneerselvam
Edappadi Palaniswami and O.Panneerselvam
Vikatan

தங்கள் ஆட்சியையே தீர்மானிக்க இருந்த இந்த வழக்குகளுக்குத் தமிழக அரசின் பணம் எவ்வளவு செலவழிக்கப்பட்டிருக்கிறது என விசாரித்து ஏற்கெனவே எழுதியிருந்தோம். அதன்படி, 2017-18-ம் நிதியாண்டில் மட்டும் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர், துணைச் சபாநாயகர், சட்டசபைச் செயலாளர் சார்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்களுக்குக் கட்டணமாக மட்டும் 1,81,20,000 ரூபாய் தரப்பட்டிருந்தது. இப்போது 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு முடிந்துவிட்ட பிறகு, எவ்வளவு செலவானது என விசாரித்தபோது, விகடனுக்கு பிரத்யேகமாக வழக்கறிஞர் கட்டண விவரம் கிடைத்தது.

2017-2018-ம் ஆண்டில் அளிக்கப்பட்ட 1,81,20,000 ரூபாய் அதன்பின் அதிகரிக்கப்பட்டு, அந்தத் தொகை 6,05,13,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. 2018-2019-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் சட்டமன்றத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் மற்றும் அவரின் உதவி வழக்கறிஞர் ஆகியோருக்கு வழக்கு கட்டணமாக மூன்று தவணைகளில் 3,78,50,000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.

Money
Money

இந்தத் தொகையையும், பிறகு 3,84,58,000 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள். 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிதியாண்டான 2019 - 2020-ம் ஆண்டில் மூன்று லட்சம் ரூபாயை முதல் கட்டமாக ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த வழக்கு முடிந்த பிறகுதான், இன்னும் எவ்வளவு செலவழித்திருப்பார்கள் என்கிற விவரம் முழுமையாகத் தெரிய வரும்.

` சசிகலா வந்துவிட்டால், அ.ம.மு.க, அ.தி.மு.க-வோடு இணையுமா?' - கும்பகோணத்தில் பதில் கொடுத்த தினகரன்

2017-18 முதல் 2019-20 வரையில் மூன்று ஆண்டுகளில் இந்த இரண்டு வழக்குக்கும் வழக்கறிஞர்களுக்குக் கட்டணமாக அரசு செலுத்திய மொத்த பணம் 9,92,71,000 ரூபாய்.

சீனியர் வழக்கறிஞர்கள் லட்சங்களில்தான் ஃபீஸ் வாங்குவார்கள். அவர்களுக்குச் சட்டமன்றத்தின் சார்பில் தரப்பட்ட கட்டணம் அத்தனையும் மக்களின் வரிப்பணம். இந்தத் தொகை சட்டசபை சார்பாக ஆஜரான வழக்கறிஞர்களுக்கான கட்டணம் மட்டுமே. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர்கள் கட்டணத்துக்கும் அரசின் பணம் செலவிடப்பட்டிருக்கலாம். அதற்கான தொகை விவரம் கிடைக்கவில்லை.

அடுத்த கட்டுரைக்கு