Published:Updated:

`சேவை பெறும் உரிமைச் சட்டம்' - தமிழக அரசுக்கு கமல்வைத்த கோரிக்கை... மக்களுக்கு என்ன பலன்?!

சேவை பெறும் உரிமைச் சட்டம்
News
சேவை பெறும் உரிமைச் சட்டம்

இந்தியாவில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இந்தச் சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. அதேபோல் தமிழ்நாட்டிலும் `சேவை பெறும் உரிமைச் சட்டத்தை' கொண்டுவர வேண்டும்!

`மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, பல்வேறு மாநிலங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்திவரும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தி.மு.க அரசு தமிழகத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’ என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுவருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மேலும், பல்வேறு சமூக ஆர்வலர்களும், சட்ட உரிமை இயக்கங்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துவருகின்றன.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

ம.நீ.ம சார்பில் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:

`தமிழ்நாட்டில், அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாகக் கிடைப்பதில்லை. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை; எத்தனை முறை மனு கொடுத்தாலும் சரியான பதில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மனுக்களை உடனடியாக முடிக்கச் சொல்லி மேலிடம் அழுத்தம் தருவதால், புகார்மீது தற்காலிக நடவடிக்கை எடுப்பது அல்லது நடவடிக்கை எடுப்பதுபோல காட்டிக்கொள்வது காலங்காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அரசின் சேவைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் பெறுவதற்கு சேவை பெறும் உரிமைச் சட்டம் வழிவகுக்கிறது. இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சேவை பெறும் உரிமைச் சட்டத்தின்படி அரசு, மக்களுக்கு அளிக்கும் சேவைகளுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்கவில்லையென்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கவும், இந்த அபராதத் தொகை சேவை தாமதத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படவும், குறித்த காலத்துக்குள் சேவையளிக்கத் தவறிய அலுவலர்கள் தண்டிக்கப்படுவதற்கும்கூட வாய்ப்பு இருக்கிறது.

கமல்ஹாசன் அறிக்கை
கமல்ஹாசன் அறிக்கை

இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் கீழ்க்காணும் சேவைகள் உள்ளிட்ட அரசின் அனைத்துச் சேவைகளும் விண்ணப்பிக்கப்பட்ட நாளிலிருந்து குறிப்பிடப்பட்ட நாள்களுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

குடும்ப அட்டை -30 நாள்கள்,

வாரிசுச் சான்றிதழ் - 15 நாள்கள்,

நிலப்பட்டா - (முழுப் பட்டா 15 மற்றும் உட்பிரிவு பட்டா-30),

இறப்புச் சான்றிதழ் -7 நாள்கள்,

வருமான சான்றிதழ் - 15 நாள்கள்,

சாதிச் சான்றிதழ் -7 நாள்கள்,

மின் இணைப்பு - 14 நாள்கள்,

குடிநீர் இணைப்பு -7 நாள்கள்.

மநீம கமல்ஹாசன் அறிக்கை
மநீம கமல்ஹாசன் அறிக்கை

இதனால் அரசின் சேவைகள் எப்போது கிடைக்கும் என்று நாள்கணக்காக, மாதக்கணக்காக மக்கள் காத்திருப்பது தடுக்கப்படும். ஹரியானா, பீகார், புதுடெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் உட்பட 20 மாநிலங்களில் சேவை பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில், இதற்கென தனித்துறைகள் உருவாக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட காலவரம்புக்குள் அரசின் சேவைகள் மக்களைச் சென்றடைகின்றனவா என்று கண்காணிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, `சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தது. தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அது செயல்படுத்தப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைத் தடுப்பதற்கும், பொதுமக்களுக்கு உரிய சேவைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும்' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மநீம மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம்
மநீம மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம்

இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். ``அரசு நிர்வாகம் என்பது மக்களுக்கான பல்வேறு தேவைகளை சேவைகளாகக் கொடுப்பதுதான்! குறிப்பாக, பட்டா, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, சாதிச் சான்றிதழ், பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் எனப் பலவற்றைக் கூறலாம். பொதுவாக, இந்தச் சேவைகளைப் பெறுவதற்காக மக்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்லும்போதுதான் லஞ்சம், ஊழல் போன்றவை அதிகமாக நடைபெறுகின்றன! பெரும்பாலான அரசு அலுவலர்கள் உரிய நேரத்தில் மக்களுக்கான தேவைகளைக் கொடுக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதால், மக்கள் பணத்தைக் கொடுத்தாவது விரைவில் சேவைகளைப் பெற்றுவிடலாம் என்ற மனநிலைக்கும் தள்ளப்பட்டுவிடுகிறார்கள். கணிசமான அரசு அதிகாரிகளின் நோக்கமும் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கின்றன. இந்தப் பிரச்னைக்கு காரணமே, அரசாங்கத்தின் ஒவ்வொரு சேவையும், இத்தனை நாள்களுக்குள் மக்களுக்கு வழங்கபட வேண்டும் என்ற வரையறை இல்லாததுதான்! அந்தக் கால வரையறையைப் பெற்றுத் தருவதுதான் இந்த சேவை பெறும் உரிமைச் சட்டம்! Right to Information, Right to Education என்பதுபோல இது Right to Services!" என்றார்.

மநீம மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம்
மநீம மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம்

மேலும், ``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவோம் என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்களில் நடைபெற்ற பட்ஜெட், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் சாதிக்கிறது. இந்த ச்சட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டால், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் முறைகேடுகள் தடுக்கப்படும்! இந்தியாவில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இந்தச் சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு ஆட்சிகளுமே ஊழல் மலிந்த ஆட்சிகளாக இருந்ததால் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை! கட்சி ஆரம்பித்ததிலிருந்தே இந்தக் கோரிக்கையை முன்வைத்துவரும் மநீம தலைவர் கமல்ஹாசன் இப்போதும் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இனி ஸ்டாலின் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என 2019-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் தலைவர், வழக்கறிஞர் கு.மணவாளனிடம் பேசினோம். ``மக்களுக்கான அரசின் சேவைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. அரசு அலுவலகங்களில் விண்ணப்பங்களைக் கொடுத்துவிட்டு, மாதக்கணக்கில் வாசலிலேயே காத்துக்கிடக்கவேண்டிய சூழல்தான் தற்போது நிகழ்கிறது. இதனால் மக்கள் இடைத்தரர்களிடம் சிக்கி ஏமாறுவதும், அதிகாரிகள் கேட்கும் லஞ்சத்தைக் கொடுத்து பணத்தை இழப்பதும் காலங்காலமாக நிகழ்ந்துவருகிறது. இவற்றை ஒட்டுமொத்தமாக தடுத்து நிறுத்தத்தான் சேவை பெறும் உரிமைச்சட்டம் வேண்டும் என்கிறோம்.

வழக்கறிஞர் கு.மணவாளன், தலைவர், தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு கவுன்சில்
வழக்கறிஞர் கு.மணவாளன், தலைவர், தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு கவுன்சில்

எப்படி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் மனு கொடுத்து 30 நாள்களுக்குள் எந்த பதிலும் வராத பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று இருக்கிறதோ, அதேபோல சேவை பெறும் உரிமைச் சட்டத்தில் மக்கள் விண்ணப்பம் கொடுத்ததிலிருந்து குறிப்பிட்ட நாள்களுக்குள் சேவை கிடைக்கும் வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நாள்களுக்குள் சேவை வழங்கப்படாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டு, விண்ணப்பித்தவருக்கு இழப்பீடாக வழங்கப்படும். ஆகையால், அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது குறைந்தபட்சம் விண்ணப்பதாரர்களுக்கு பதிலாவது அளிப்பார்கள்" எனத் தெளிவுபடுத்தினார்.

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

மேலும், ``நாங்கள் ஏற்கெனவே 2019-ல் இந்தச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் எனக் கோரி உள்துறை முதன்மைச் செயலாளர், சட்டத்துறை முதன்மைச் செயலாளர் என அனைவருக்கும் மனு அளித்திருந்தோம். ஆனால், அப்போதைய அதிமுக அரசு சார்பில், `நாங்கள் ஏற்கெனவே இது போன்ற திட்டத்தை அம்மா திட்டத்துடன் சேர்ந்து செயல்படுத்திவருகிறோம். அதனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் தேவையில்லை' என உள்துறை முதன்மைச் செயலாளர் தரப்பிலிருந்து பதில் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம். மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, `இந்தச் சட்டத்தால் மக்களுக்குப் பலன் கிடைக்கும். இந்தச் சட்டத்தை அமல்படுத்தவேண்டிய நேரம் இது’ என வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. இதற்கிடையில் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியும் அளித்திருந்தது. ஆனால், அரசின் மெத்தனப் போக்கால் இதுவரையில் சட்டம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு தி.மு.க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்!" எனக் கோரிக்கை வைத்தார்.

இந்தக் கோரிக்கை, குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க தரப்பில் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் இராஜீவ் காந்தியிடம் விளக்கம் கேட்டோம்.

இராஜீவ் காந்தி, திமுக செய்தித் தொடர்பாளர்
இராஜீவ் காந்தி, திமுக செய்தித் தொடர்பாளர்

``இன்றைக்கு வளர்ந்துவரும் ஜனநாயக அமைப்பில் சேவை பெறும் உரிமைச் சட்டம் என்பது மிக அத்தியாவசியமான சட்டம் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பவற்றில் குறுகியகால இலக்கு, நீண்டகால இலக்கு எனப் பல்வேறு இலக்குகளை வைத்திருக்கிறோம். அதனடிப்படையில் முன்னுரிமை அளித்து வரிசையாக சட்டதிட்டங்களைச் செயல்படுத்திவருகிறோம். நிச்சயமாக அடுத்து வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார்" என விளக்கமளித்தார்.

மக்களுக்கு நேரடியாகப் பயன்படும் சட்டங்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.