Published:Updated:

ஜெயலலிதாவுக்கு 19.92 லட்சம்; ராமசாமி படையாச்சிக்கு 20 லட்சம்... எடப்பாடி ஆட்சியின் என்ன கணக்கு இது?!

சட்டசபையில் ஜெயலலிதா ராமசாமி படையாட்சி படங்கள்
சட்டசபையில் ஜெயலலிதா ராமசாமி படையாட்சி படங்கள்

சட்டசபையில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தைவிட ராமசாமி படையாச்சியாருக்கு திறக்கப்பட்ட உருவப்படத்துக்கான செலவு அதிகம் என்கிற தகவலைச் சொல்லி அதிர வைக்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்துக்கு நேர் எதிரேதான் ராமசாமி படையாச்சியாரின் படமும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்த இரண்டு படங்களும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகுதான் திறந்து வைக்கப்பட்டன.

பா.ம.க-வுக்கு முன்பே வன்னியர் சமூகத்துக்காகக் குரல் கொடுத்த இயக்கம், உழவர் உழைப்பாளர் கட்சி. வன்னியர்களைத் திரட்டி உழவர் உழைப்பாளர் கட்சியை ஆரம்பித்து, 1952 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, 18 இடங்களில் வென்றவர் ராமசாமி படையாச்சியார்.

ராமசாமி மணிமண்டபம்
ராமசாமி மணிமண்டபம்

வன்னியர்களால் பெரிதும் மதிக்கப்படும் ராமசாமி படையாச்சியாருக்கு 2 கோடி ரூபாய் மதிப்பில் கடலூரில் மணிமண்டபத்தைக் கடந்த ஆண்டு திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி. ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளையும் அரசு விழாவாகக் கொண்டாட ஏற்பாடும் செய்தார்.

ஜெயலலிதாவின் சிலையை அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திறந்து வைத்தார்கள். ஆனால், சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தைத் திறக்க முயன்றபோது எதிர்ப்பு கிளம்பியது. ``சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை எப்படி சட்டசபையில் வைக்கலாம்?’’ என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறித்தான் சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறந்தார்கள்.

ஜெ நினைவிடம் ஃபினிக்ஸ் வடிவம்
ஜெ நினைவிடம் ஃபினிக்ஸ் வடிவம்

ஜெயலலிதா புதைக்கப்பட்ட கடற்கரையில் அவருக்கு அரசு செலவில் 50.80 கோடி ரூபாய் மதிப்பில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு துபாயிலிருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பணிகள் முடிவடைந்து விரைவில் திறப்பு விழாவை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கும் ராமசாமி படையாச்சியாருக்கும் புகழாரம் சூட்டும் நிகழ்வுகள் ஒரே ஸ்டைலில் நடத்திக்கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. சட்டசபையில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தைவிட ராமசாமி படையாச்சியாருக்கு திறக்கப்பட்ட உருவப்படத்துக்கான செலவு அதிகம் என்கிற தகவலைச் சொல்லி அதிர வைக்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள். இதுபற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு ஆன செலவுகள் எவ்வளவு என்பதைப் பார்ப்போம்.

ஜெயலலிதா, ராமசாமி படையாட்சி உருவப்படங்கள்
ஜெயலலிதா, ராமசாமி படையாட்சி உருவப்படங்கள்
`ராஜேந்திர பாலாஜி குறித்த செய்திக்காக மட்டுமா?' -விருதுநகர் நிருபர் தாக்கப்பட்டதில் தொடரும் சர்ச்சை

சட்டசபையில் ஜெயலலிதா படத்தைத் திறக்கச் செய்யப்பட்ட செலவு குறித்த விவரத்தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விகடன் ஆர்.டி.ஐ குழு கேட்டது. ஜெயலலிதா படத் திறப்பு விழாவுக்காகத் தலைமைச் செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதற்காக 2.53 லட்சம் ரூபாய் செலவானது. விழாவின்போது சட்டசபைக்குள் மலர் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். அந்த வகையில் 5.26 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் உருவப்படத்தை வரைந்த ஓவியர் மதியழகனுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் மட்டும் 6.70 லட்சம் ரூபாய். ஜெயலலிதா உருவப்படத் திறப்பு விழாவுக்கு ஆன ஒட்டுமொத்த செலவு 19,92,615 ரூபாய் எனப் பதில் அனுப்பியிருந்தது சட்டப்பேரவைச் செயலகம்.

ஜெயலலிதா உருவப்படத் திறப்பு விழாவுக்கு 19.92 லட்சம் ரூபாய் செலவான நிலையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படத் திறப்பு விழாவுக்காக 20 லட்சம் ரூபாயைச் சட்டமன்ற செயலகம் ஒதுக்கிய தகவல் விகடனுக்கு பிரத்யேகமாகக் கிடைத்தது. இதுபற்றி தலைமைச் செயலக அலுவலர்களிடம் பேசியபோது, ``ராமசாமி படையாச்சியார் உருவப்படத் திறப்பு விழாவுக்கு ஆன செலவு 20 லட்சம் என்பது வெறும் ஒதுக்கீடு மட்டுமே. அந்த விழாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்தத் தொகையைத் தாண்டியும் தனித் தனியாக நிறைய செலவுகள் செய்திருப்பார்கள்.

விகடன் லென்ஸ்
விகடன் லென்ஸ்

அந்தக் கணக்குகள் நேர் செய்யப்பட்டால் இந்தத் தொகை இன்னும் கூடும். 2018 பிப்ரவரி 12-ம் தேதி ஜெயலலிதாவின் படமும் 2019 ஜூலை 19-ம் தேதி ராமசாமி படையாச்சியாரின் படமும் சட்டசபையில் திறக்கப்பட்டது. இரண்டு விழாவுக்கும் ஒரே மாதிரியான செலவுகள்தான் செய்யப்பட்டன. இரண்டு பேரின் படத்தையும் ஒரே ஓவியர்தான் வரைந்தார். ஆனால், ஜெயலலிதாவைவிட ராமசாமி படையாச்சியாருக்கு சற்று கூடுதலாகச் செலவழித்திருக்கிறார்கள்'' என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு