Published:Updated:

கொஞ்சம் படிங்க பாஸ்!

திராவிட இயக்கத் தலைவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
திராவிட இயக்கத் தலைவர்கள்

``திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப் படும்’’ என சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

ந்த நாவலரை உருவாக்கியதில் சட்டமன்ற நூலகத்துக்கும் சிறு பங்கு இருக்கிறது. அந்தச் சட்டமன்ற நூலகத்துக்கும் இப்போது வயது நூறுதான்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு, அவையில் அவர்கள் வெளிப்படுத்திய திறன் ஆகியவை மட்டுமே வைத்துச் சிறந்த நாடாளுமன்றவாதியாக ஒருவர் ஆகிவிட முடியாது. நுனி நாக்கில் புள்ளிவிவரம், கடந்த கால வரலாறு, பரந்துபட்ட ஞானம், ஆழமான வாதம், அபார நினைவாற்றல், மையப் பொருளை வைத்துக் களமாடும் திறன் ஆகியவை சிறந்த நாடாளுமன்றவாதியாக ஆவதற்கான அடிப்படை அம்சங்கள். இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது வாசிப்பு. எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் ‘சிறந்த நாடாளுமன்றவாதி’ ஆவதற்கான தகுதிகளில் ஒன்று புத்தகங்கள் பத்திரிகைகள் படிப்பது, நூலகங்களுக்குச் செல்வது. தமிழக சட்டமன்றத்தில் நடந்த பல காத்திரமான, சுவாரஸ்யமான விவாதங்களுக்கு அடிப்படையாக இருந்தது இந்தச் சட்டமன்ற நூலகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1920-ம் ஆண்டு அமைக்கப்பட்ட மிகப் பழைமையான நூலகம் இது. இங்கே ஏழு பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். முக்கியமான புத்தகங்கள், சட்டமன்றம் நாடாளு மன்றம் தொடர்பான நூல்கள், விசாரணை ஆணைய அறிக்கைகள், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள், ஆவணங்கள் என அனைத்தும் இந்த நூலகத்தில் உள்ளன.

கொஞ்சம் படிங்க பாஸ்!

ஒவ்வொரு நாளும் சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் அனைத்தும் தேதிவாரியாக அவை நடவடிக்கைக் குறிப்புகளாகத் தயாரிக்கப்படும். அந்த அவை நடவடிக்கைக் குறிப்புகள் அனைத்தும் இந்த நூலகத்தில் உள்ளன. 1952-ம் ஆண்டு தொடங்கி இப்போது வரையிலான அவை நடவடிக்கைக் குறிப்புகள் நூலகத்தில் வைக்கப்படும். அந்த வகையில் 11,613 அவை நடவடிக்கைக் குறிப்பு நூல்கள் உள்ளன. இதுதவிர நாடாளுமன்றத்தில் இருந்தும் புத்தகங்கள் பெறப்படுகின்றன. இங்கே உள்ள மொத்தப் புத்தகங்களின் எண்ணிக்கை 24,926.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு வரையில் புத்தகங்கள் வாங்கியதற்காக 2,91,357 ரூபாயைச் செலவிட்டிருக்கிறது அரசு. 2018-ம் ஆண்டு எந்தப் புத்தகத்தையும் வாங்கவில்லை. தி.மு.க ஆட்சிக்காலமான 2010-ம் ஆண்டு 1,26,239 ரூபாய்க்கு நூல்கள் வாங்கியிருக்கிறார்கள். அதன்பிறகு தொடர்ந்து அ.தி.மு.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், புத்தகங்கள் கொள்முதல் செய்வது குறைந்துவிட்டது. புத்தகங்கள் தவிர 13 தமிழ் நாளிதழ்களும் 10 ஆங்கில நாளிதழ்களும், 22 பருவ இதழ்களும் வாங்கப்படுகின்றன. இதில் சில பத்திரிகைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் பெறப்படுகின்றன. இப்படிப் பத்திரிகைகள் வாங்குவதற்காக மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் நான்கு லட்சம் ரூபாயைத் தமிழக அரசு செலவழிக்கிறது. இப்படி எம்.எல்.ஏ-க்களின் அறிவை விரிவுபடுத்துவதற்காக மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டிருக்கும் நிலையில் இப்போதைய எம்.எல்.ஏ-க்களில் எத்தனை பேர் இந்த நூலகத்துக்கு வந்து புத்தகங்கள் எடுத்திருக்கிறார்கள் தெரியுமா?

234 சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் 47 பேர்தான் சட்டமன்ற நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துப் போயிருக்கிறார்கள். இவர்கள் எடுத்துப் போன மொத்த நூல்களின் எண்ணிக்கை 145. பதினேழு எம்.எல்.ஏ-க்கள் தலா ஒரு புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள். பத்து எம்.எல்.ஏ-க்கள் தலா இரண்டு புத்தகங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஐந்து எம்.எல்.ஏ-க்கள் தலா மூன்று புத்தகங்களையும், மூன்று எம்.எல்.ஏ-க்கள் தலா நான்கு புத்தகங்களையும், இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தலா ஐந்து புத்தகங்களையும், நான்கு எம்.எல்.ஏ-க்கள் தலா ஆறு புத்தகங்களையும் எடுத்திருக்கிறார்கள்.

இந்த 47 எம்.எல்.ஏ-க்களில் அதிக புத்தகங்களைச் சட்டமன்ற நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தவர்களில் திரு.வி.க.நகர்த் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சிவகுமார் (எ) தாயகம் கவிதான் முதலிடத்தில் இருக்கிறார்.

2016-ம் ஆண்டு முதல் இதுவரை 13 புத்தகங்களை எடுத்துச் சென்றிருக்கிறார். இரண்டாவது இடத்தில் பொன்னேரித் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பி.பலராமன் இருக்கிறார். இவர் 10 புத்தகங்களை எடுத்துச் சென்றிருக்கிறார். 9 புத்தகங்களை எடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார், துறைமுகம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ

பி.கே.சேகர்பாபு. நூலகத்தில் புத்தகங்களை எடுத்ததில் கட்சிவாரியாகக் கணக்கிட்டால் தி.மு.க முன்னிலையில் இருக்கிறது. 22 தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நூல்களை எடுத்திருக்கிறார்கள். ஆளும்கட்சியாக அதிக இடங்களில் உள்ள

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 21 பேர்தான் புத்தகங்களை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேரும், மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ ஒருவரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்று பொதுமக்களைக் குற்றம் சாட்டுவதற்குமுன், பொதுமக்களின் பிரதிநிதிகள், வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அது வரலாற்றை அறியவும் உதவும்; புதிய வரலாற்றைப் படைக்கவும் உதவும்.

காமராஜர், அண்ணா
காமராஜர், அண்ணா

நூலக நூற்றாண்டு விழா நடத்துவார்களா?

காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என ஆளுமைகள் தவிர எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நூலகத்துக்கு வந்து சென்றிருக்கிறார்கள். குறிப்புகளும் புத்தகங்களும் எடுத்துப் போய் சட்டமன்றத்தில் உரையாற்றியி ருக்கிறார்கள். ஆனால், சமீப ஆண்டுகளாக இந்த நூலகத்தைச் சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவது குறைந்துவிட்டது. மண்டபத்தில் யாராவது எழுதிக்கொடுப்பதை அப்படியே அவையில் படிக்கும் கிளிப்பிள்ளை எம்.எல்.ஏ-க்கள் இப்போது இருக்கிறார்கள். சட்டமன்ற நூலகத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்கிற அக்கறைகூட ஆட்சியாளர்களுக்கு இல்லை. அதற்கு சாட்சி ஒவ்வோர் ஆண்டும் இந்த நூலகத்துக்கு வாங்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைவதுதான்.