Published:Updated:

` நடிகர் விஜய் ஏன் எங்களைத் தாக்கிப் பேசினார்?!' - அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த விளக்கம்

'பிகில்' இசை வெளியீட்டு விழாவில், சென்னையில் ஃப்ளெக்ஸ் விழுந்ததால் சுபஸ்ரீ என்ற பொறியியல் பட்டதாரி இறந்தது தொடர்பாக நடிகர் விஜய் பேசினார். அவரது பேச்சு ஆளுங்கட்சியைச் சாடுவதுபோல் இருந்தது.

Minister Jayakumar, Actor vijay
Minister Jayakumar, Actor vijay

கோவாவில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். இந்தக் கூட்டம் முடிந்து, இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், “ ஜிஎஸ்டி தொடர்பாக, தமிழகத்தின் சார்பில் எடுத்துவைக்கப்பட்ட கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டதன் காரணமாகப் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

ஜிஎஸ்டி-யால் சிறு வியாபாரிகள் நசுக்கப்படுவதாகக் கூறப்படுவது தவறான கருத்து. 2016-ல் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தமிழகத்தில் நிலையான பொருளாதாரச் சூழல் இல்லை என வதந்தியைப் பரப்பிவருகிறார்கள்.

Jayakumar
Jayakumar

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பொருளாதாரம் 8.1 சதவிகித அளவில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. உற்பத்தித்துறையைப் பொறுத்தமட்டில், இந்திய அளவில் தமிழகம் நல்ல நிலையில் இருக்கிறது. ஜிஎஸ்டி மூலம் தமிழகத்துக்கு 4,500 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்குச் சென்றடைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை இந்த இடைத்தேர்தலுடன் ஒப்பிட முடியாது. வேலூர் தேர்தலில், தி.மு.க-வுக்கு `தப்பித்தோம் பிழைத்தோம்' என்ற நிலைதான் இருந்தது. அங்கு, அ.தி.மு.க-வின் வாக்குவங்கி கணிசமாக உயர்ந்துள்ளது” என்றார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

'பிகில்' இசை வெளியீட்டு விழாவில், சென்னையில் ஃப்ளெக்ஸ் விழுந்ததால் சுபஸ்ரீ என்ற பொறியியல் பட்டதாரி இறந்தது தொடர்பாக நடிகர் விஜய் பேசினார். அவரது பேச்சு, ஆளுங்கட்சியைச் சாடுவதுபோல் இருந்தது. இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்தவர், “ விஜய்யோ, கவுண்டமணியோ, செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சியைத் தொடங்கலாம். பழுத்த மரம்தான் கல்லடி படும். அ.தி.மு.க பழுத்த மரம். படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்களைத் தாக்குகிறார்” என்றார்.