Published:Updated:

`OPS-க்கு புது விளக்கம்; கை தட்டுனா இதயத்துக்கு நல்லது!' - தேனி நிகழ்ச்சியில் கலகலத்த செல்லூர் ராஜு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் `வேட்டி கட்டிய அம்மா’ எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தேனியில் பேசி அதகளப்படுத்தினார்.

Sellur Raju
Sellur Raju

கூட்டுறவுத்துறை கடன் வழங்கும் விழா தேனி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் கூட்டுறவுத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

OPS, Sellur Raju
OPS, Sellur Raju

நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசத் தொடங்கியபோது,``ஏன் எல்லோரும் அமைதியா இருக்கீங்க? தேனி வந்தா சுறுசுறுப்பா இருப்பீங்கனு பார்த்தா இப்படி இருக்கீங்களே... கை தட்டுனா இதயத்துக்கு நன்கு ரத்த ஓட்டம் இருக்கும். வாட்ஸ் அப், யூடியூப்ல பார்க்குறதில்லையா? கை தட்டுனா உடம்புக்கு ரொம்ப நல்லது. நல்லா கை தட்டுங்கள்" என்று அவர் பேச ஆரம்பித்ததும் கூட்டம் கலகலத்தது.

``என்னுடைய பயோபிக்கில் விஜய்சேதுபதிதான் ஹீரோ!'' -`மக்க கலங்க வைக்கும்' செல்லூர் ராஜு!

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, ``ஓ.பி.எஸ்'க்கு பலரும் விளக்கம் சொல்வார்கள். நான் சொல்கிறேன். O For ஒற்றுமை, P For பாசம், S For சேவை'' எனக் கூறினார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை `வேட்டி கட்டிய அம்மா' எனப் புகழ்ந்த அவர் இரண்டு கவிதைகளைக் கூறி, அண்ணே... அண்ணே... என ஓ.பன்னீர்செல்வத்தை வார்த்தைக்கு வார்த்தை பேச்சிலேயே நெருக்கம் காட்டினார் செல்லூர் ராஜு.

OPS, Sellur Raju
OPS, Sellur Raju

தொடர்ந்து பேசியவர், ``இரண்டு வருடத்துக்கு மேல் இந்தத் துறையில் யாரும் இருந்ததில்லை. இன்றோடு எனக்கு இத்துறையில் 9 வருடங்கள் ஆகிறது. இந்தியாவுக்கே முன்னோடியாக அதிக விருதுகளைப் பெற்றுள்ள துறையாக உள்ளது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். வாங்கிய கடனை நீங்கள் கட்டிவிடுவீர்கள். பார்க்கத்தான் கரடுமுரடாக இருப்பீர்கள். தேனி மக்கள் பாசக்காரர்கள்" என்று கூறி பேச்சை முடித்து அமர்ந்தார்.