Published:Updated:

`தினமும் 10,000 டன் நிலக்கரி தர வேண்டும்!' - மத்திய அமைச்சரிடம் கோரிக்கைவைத்த செந்தில் பாலாஜி

மத்திய அமைச்சரைச் சந்தித்த செந்தில் பாலாஜி
News
மத்திய அமைச்சரைச் சந்தித்த செந்தில் பாலாஜி

'மத்திய அரசு முழுமையாக நிலக்கரி வழங்கி, உரிய அளவு மின்சாரத்தைப் பெறும் வகையில் நாள் ஒன்றுக்கு 10,000 டன் நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டெல்லியில் மத்திய மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கைச் சந்தித்தார். அவருடன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு மின்பகிர்மான கழக இயக்குநர் மா.சிவலிங்கராஜன் ஆகியோரும் சென்றனர். செந்தில் பாலாஜி, தமிழக அரசின் சார்பில் 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய அமைச்சரிடம் அளித்தார்.

அந்த மனுவில், ``2003 - ம் ஆண்டு மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது குறித்து ஏற்கெனவே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடித்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறித்து, அதாவது, 237.63 லட்சம் டன் மத்திய அரசால் அனுப்பப்படவேண்டிய நிலையில், ஆண்டொன்றுக்கு 171.1 லட்சம் டன் மட்டுமே வழங்கப்படுகிறது. முழுமையாக நிலக்கரி வழங்கி, உரிய அளவு மின்சாரத்தைப் பெறும் வகையில் (Tolling) நாள் ஒன்றுக்கு 10,000 டன் நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், ஒடிசா மாநிலத்தில், சந்திரபிலாவிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து நிலக்கரி ஒதுக்கீடு பெறுவதற்கு 30.03.2016 அன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

செந்தில் பாலாஜி - மின்னகம்
செந்தில் பாலாஜி - மின்னகம்

ஆனால், 66 மாதங்கள் கழிந்தும், அங்கு இன்னும் நிலக்கரி உற்பத்தி ஆரம்பிக்கப்படவில்லை. ஆகவே, இதற்கான ஒப்பந்த காலத்தை நீட்டித்துத் தர வேண்டும். அதேபோல், மத்திய அரசின் நிதி நிறுவனங்களான PFC, REC, IREDA-ல் இருந்து பெறப்படும் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் 9.5 சதவிகிதம் முதல் 12.65 சதவிகிதமாக உள்ளது. இதை ஒரே மாதிரியாக அனைத்து வகையான கடன்களுக்கும் 8.5 சதவிகிதமாக நிர்ணயம் செய்ய வேண்டும். அதோடு, RAPDRP - Part - B - க்கு உண்டான அனைத்துத் திட்டங்களும் முடிக்கப்பட்டுவிட்டன. மேற்படி, திட்டத்தில் Part - A - ல் உள்ள வேலைகள் ஒப்பந்ததாரர்களால் செய்து முடிக்காத காரணத்தாலும், நீதிமன்ற வழக்கின் காரணமாகவும் முடிக்கப்படாமல் இருக்கின்றன. இதன் காரணமாக, பகுதி A - வுக்கான மானியத் தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, விளக்கமாக எடுத்துக் கூறி கடன்தொகையான (அதாவது, திட்டமதிப்பீட்டில் 50 சதவிகிதம்) ரூ.1,330.93 கோடியை மானியமாக மாற்றம் செய்து தர வேண்டும். மேலும், மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.8,647 கோடி, திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இல்லாததால், மானியத் தொகையை ரூ.12,000 கோடியாக உயர்த்தித் தர வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல், மத்திய அரசின் மின் விநியோக நிறுவனத்தால் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 7 பைசாவிலிருந்து 1 பைசாவாகக் குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும். அதோடு, ரைகார் - புகளூர் - திருச்சூர் - உயர்மின் வழிப்பாதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மின்வழிப்பாதையாக கருத்தப்படவேண்டியும், மின்வழிப்பாதையில் உள்ள அனைத்துப் பயனாளர்களும் பயனடையும்படியும் நிதிச்சுமையை ரூ.720 கோடியிலிருந்து ரூ.216 கோடியாகக் குறைத்து, ரூ.504 கோடி சேமிப்பு செய்வதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அமைச்சரைச் சந்தித்த செந்தில் பாலாஜி
மத்திய அமைச்சரைச் சந்தித்த செந்தில் பாலாஜி

மேலும், மத்திய அரசின் மின் விநியோகக் கழகத்தின் மூலம் மின் கொள்முதல் செய்து வழங்கவேண்டிய, மீதமுள்ள 1,100 மெகாவாட் மின்சாரத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், நிலுவையிலுள்ள ரூ. 38.49 கோடி, மத்திய அரசின் நிதி உதவியை MNRE- லிருந்து TEDA -வுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அதே மாதிரி, மாநிலங்களுக்கு இடையேயான மின்பாதையை உபயோகப்படுத்தச் செலுத்தவேண்டிய தொகையிலுள்ள கணக்கீடு குறைவை நிவர்த்தி செய்து, TANGEDCO - வுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.48 கோடி வரையில் கூடுதல் செலவு ஏற்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மின் கொள்முதலுக்கு உத்தரவாதமாக வங்கி உறுதிக் கடிதம் (Letter Of Credit) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.