Published:Updated:

`ரேஷன் அரிசியில் குறைபாடு இருப்பது உண்மைதான்!' - ஆய்வுக்குப் பின் உறுதிசெய்த அமைச்சர் மனோ தங்கராஜ்

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்

'முந்தைய அரசு கொள்முதல் செய்த தரமற்ற அரசி என்பதால், அதில் குறைபாடு உள்ளது. எனவே, அந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்' என்றார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட ரேஷன் கடைகளுக்கு அரிசி சப்ளை செய்யும் கோணம் அரசு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சேமிப்புக் கிட்டங்கிக்குள் சென்ற அமைச்சரும் கலெக்டரும் அரிசி மற்றும் உணவுப் பொருள்களை பார்வையிட்டு அதன் தரத்தை சோதனை செய்தனர். மாவட்டம் முழுவதும் தரமான உணவுப் பொருள்களை ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும் என்றும். கிட்டங்கியில் பூச்சிகள் வராதவண்ணம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.

கோணம் அரிசி குடோனில் ஆய்வு செய்யும் அமைச்சர் மனோ தங்கராஜ்
கோணம் அரிசி குடோனில் ஆய்வு செய்யும் அமைச்சர் மனோ தங்கராஜ்

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ரேஷன் அரிசியில் குறைபாடு இருப்பது உண்மைதான். முந்தைய அரசு கொள்முதல் செய்த தரமற்ற அரசி என்பதால், அதில் குறைபாடு உள்ளது. எனவே அந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். முடிந்த அளவுக்கு நல்ல அரிசியைத்தான் வழங்கிக்கொண்டிருக்கிறோம். இப்போது துறை சார்ந்த அமைச்சரோடு பேசி, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அரிசியில் கறுப்பு தன்மை அதிகமாக இருக்கிறது; அதை மாற்றிக் கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் அதைச் சரிசெய்வோம்" என்றார்.

தமிழக அரசு அறிவித்த 14 வகையான மளிகைப் பொருள்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 சதவிகிதம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார். விடுபட்டவர்களுக்கு விரைவில் பொருள்கள் வழங்கப்படும் என்றும், அதற்குக் கால அவகாசம் இல்லை என்றும், மளிகைப் பொருள்கள் வழங்குவதில் தமிழகத்தில் டாப் 10 லிஸ்ட்டில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளதாகவும் கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

அரிசி குடோனின் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
அரிசி குடோனின் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு

அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னதாகச் சிதிலமடைந்து கிடக்கும் பழைமையான இரணியல் அரண்மனையைப் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், "இரணியல் அரண்மனையைப் புதுப்பிக்க கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கியும் பணி தொடங்க தாமதமானது. இப்போது காலதாமதம் இல்லாமல் பணி செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம். அரண்மனையைச் சீரமைக்க அதிக நிதி தேவைப்பட்டால், முதலமைச்சரிடம் எடுத்துக் கூறி அரண்மனை சீரமைப்புப் பணியை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு