Published:Updated:

``அத்து மீறினால்..!" - நாமக்கல் எம்.பி-யை எச்சரிக்கும் அமைச்சர் தங்கமணி

ர.ரகுபதி

``எம்.பி அவருடைய ஆட்களுடன் சென்று போலீஸாருடன் வாக்குவாதம் செய்வது சட்டவிரோதமானது. அத்துமீறினால் சட்டம் தனது கடமையைச் செய்யும்.''

Minister Thangamani
Minister Thangamani

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அரசு சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, 'பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க தமிழக முதல்வர் மக்கள் குறைத்தீர்க்கும் முகாமினை சேலம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இம்முகாமில் அதிகளவில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்துள்ளனர். தமிழக முதல்வர் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Minister Thangamani
Minister Thangamani

இதுவரை 10,000 மனுக்கள் பெறப்பபட்டுள்ளன. மனுக்கள் மீது ஒரு மாதத்தில் அதாவது செப்டம்பர் மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். தகுதி இல்லாத மனு குறித்து தகுதியானவர்களுக்குத் தெரியப்படுத்தப்படும்' என்றார். முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தால் தொழிலதிபர்களை நேரிடையாகச் சந்திப்பதின் மூலம் அதிக முதலீடு ஈட்ட முடியும். சுகாதாரத்துறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்வேறு முதலீடுகள் வர வாய்ப்புள்ளது.

தொடர்ந்து மணல் கடத்தும் லாரிகளை நாமக்கல் தி.மு.க எம்.பி சின்ராஜ் பிடித்து வழக்கு பதிவு செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், ``நான் முன்பே கூறியதுபோல் மணல் கடத்தல் நடைபெறவில்லை. எம்.பி மணல் கடத்தியதாக 2 லாரிகள் பிடிக்கப்பட்டன. கரூரிலிருந்து வாங்கலுக்கு மணல் ஏற்றிச் சென்ற லாரி, திருச்சியில் அரசு மணல் குவாரியில் முறைகேடாக மணல் ஏற்றிச் சென்றுள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் எம்பி சின்ராஜுடன் சப்-இன்ஸ்பெக்டர் வாக்குவாதம்
நாமக்கல் எம்பி சின்ராஜுடன் சப்-இன்ஸ்பெக்டர் வாக்குவாதம்

தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையத்தில் உள்ள லாரி டிரைவரிடம் விசாரணை செய்யப் போகிறேன் என எம்.பி அவருடைய ஆட்களுடன் சென்று போலீஸாருடன் வாக்குவாதம் செய்வது சட்டவிரோதமானது. அத்துமீறினால் சட்டம் தனது கடமையைச் செய்யும். தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் எந்தச் சட்ட விரோத சம்பவமும் நடைபெறவில்லை. அப்படித் தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.