Published:Updated:

`அவர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்' - மின்வாரிய ஊழியர்களை கௌரவப்படுத்திய அமைச்சர்கள்!

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்குவதற்கு இரவு பகல் பாராமல் மின்சார வாரிய ஊழியர்கள் உழைத்தார்கள். அவர்களின் பணி எப்போதும் பாராட்டத்தக்கது என்கிறார் அமைச்சர் வளர்மதி.

விழாவில் அமைச்சர்கள்
விழாவில் அமைச்சர்கள்

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான ஆடவர் விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை 8 நாள்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நடக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளில், கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, பூப்பந்து, ஃபிரிட்ஜ், சதுரங்கம், டென்னிஸ், இறகுப்பந்து, கூடைப்பந்து, கபடி, கிரிக்கெட், தடகளம் ஆகிய விளையாட்டுகளில் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, விழுப்புரம், சென்னை, வேலூர், ஈரோடு ஆகிய 8 மண்டலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

விழாவில் கலந்துக்கொண்ட வீரர்கள்
விழாவில் கலந்துக்கொண்ட வீரர்கள்

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான காவல்துறை இயக்குநர் தமிழ்ச்செல்வன், திருச்சி காவல் துறை குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் மயில்வாகனன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் சுந்தரவதனம் உள்ளிட்டோர் கலந்துகொள்ள மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான ஆடவர் விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ``இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் தங்களுக்கு எந்தப் போட்டியில் ஆர்வம் உள்ளதோ அந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துகள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் தங்கள் உடல் ஆரோக்கியத்தையும், நினைவாற்றலையும் வளர்த்துக்கொள்ள முடியும்” என ஷார்ட்டாக முடித்தார்.

விழாவில் அமைச்சர்கள்
விழாவில் அமைச்சர்கள்

அடுத்து பேசிய அமைச்சர் எஸ்.வளர்மதி, ``அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பணிபுரியும் பணியாளர்களின் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் வகையில் இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. 2006 முதல் 2011 வரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் மின்சார தட்டுப்பாட்டினால் தமிழகத்தை இருளில் மூழ்கடித்தார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றப்படும் என அறிவித்துச் செயல்படுத்தினார்கள்.

அவர் மின்சார துறையில் கொண்டு வந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மூலம் இன்று தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது. தமிழக மக்களின் தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில்தான் தமிழக மின் ஊழியர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கு இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடத்துவதற்கு நிதியுதவி வழங்கி வருகிறது.

24 மணி நேரமும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் மின்சார வாரிய ஊழியர்கள் பணி செய்து சேதமடைந்த கம்பிகள் மற்றும் கம்பங்களை சீரமைத்தனர்.
அமைச்சர் வளர்மதி

குறிப்பாக கஜா புயலினால் மின்சாரக் கம்பிகள் மற்றும் மின்சார கம்பங்கள் சேதடைந்த பகுதியில் 24 மணி நேரமும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் மின்சார வாரிய ஊழியர்கள் பணி செய்து சேதமடைந்த கம்பிகள் மற்றும் கம்பங்களை சீரமைத்தனர். அவர்களின் பணியை பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்” என முடித்தார். நிகழ்ச்சி முடித்து துவங்கப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தின் இருளைப் போக்க துடிக்கும் மின்சார வாரிய ஊழியர்கள் ஓடியாடி விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.