Published:Updated:

``இளைஞர்களிடம் போராடும் எண்ணத்தை விதைத்துள்ளது!" - தபால்துறை தேர்வால் கொதித்த எம்.பி-க்கள்

கலிலுல்லா.ச

தபால்துறை தேர்வில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக எம்.பி-க்கள் மாநிலங்களவையில் கொதித்தனர்.

தம்பிதுரை
தம்பிதுரை

`தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும்’ என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. தபால்துறை காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில், அந்தந்த மாநில மொழிகள் மற்றும் இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் கேள்வி கேட்கப்படும். மத்திய அரசு மாநில மொழிகளைப் புறக்கணித்து வெளியிட்ட அறிவிப்பு, அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நவநீத கிருஷ்ணன்
நவநீத கிருஷ்ணன்

இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியும், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்வில் மாநில மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை நேற்று நடந்த சட்டப்பேரவையில் தி.மு.க எழுப்பி வெளிநடப்புசெய்தது. அதேபோல, இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் பேசிய அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன், ``கிராமப்புறங்களில் காலியாக உள்ள தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வின் வினாக்கள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழில் கேள்விகள் இடம்பெறவில்லை. எனவே, இந்த தபால்துறை தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழ் மொழியில் புதிதாகத் தேர்வு நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அதேபோல, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ``தபால்துறை தேர்வு தொடர்பான மத்திய அரசின் சுற்றறிக்கை, தமிழக இளைஞர்கள் மத்தியில் போராடும் எண்ணத்தை விதைத்துள்ளது. முன்னதாக நடத்தப்பட்ட தேர்வுகள், இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் நடத்தப்பட்டன. இப்படியிருக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. மத்திய அரசு பணிகளில் எங்கள் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர்.

தபால் தேர்வு
தபால் தேர்வு

ரயில்வே உள்ளிட்ட துறைகளில் தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளனர். எனவே, மத்திய அரசின் இந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும். ஏற்கெனவே உள்ளபடி, மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்பட வேண்டும்” என்றார். சபாநாயகர் வெங்கைய நாயுடு, ``இது தொடர்பாக மாநிலங்களவை பா.ஜ.க தலைவர் தாவர்சந்த் கெலாட் ஆராய வேண்டும். நீங்கள் அமைச்சரிடம் பேசுங்கள்’ என்று தெரிவித்தார்.