Published:Updated:

`ஹெச்.ராஜாவைக் கைது செய்யாவிட்டால் மெரினாவில் போராட்டம்!' - தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு
தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட வேண்டும் என ஹெச்.ராஜா தலைமையில் பா.ஜ.க-வினர் நேற்று மெரினாவில் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து நெல்லை கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார்.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பற்றி சர்ச்சையாகக் கருத்து தெரிவித்ததுக்காக பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட வேண்டும் எனப் பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று மெரினா காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பெரம்பலூரில் நெல்லை கண்ணன் நேற்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நடத்திய கூட்டத்தில் பேசியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. பா.ஜ.க-வின் கட்டளைக்கு இணங்க தமிழக அரசும் காவல் துறையும் செயல்படுவதாகக் கடுமையாக விமர்சித்துள்ளனர். நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "ஆபரேஷன் சக்சஸ்!" எனப் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நெல்லை கண்ணன் கைது தொடர்பாகத் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

` தனியார் விடுதி ஊழியரால் சிக்கிய நெல்லை கண்ணன்!' -பெரம்பலூரில் நடந்தது என்ன?

அப்போது பேசிய வேல்முருகன், ``நெல்லை கண்ணன் மிகப்பெரிய தமிழறிஞர். அவரை பாரதிய ஜனதா கட்சியின் பேச்சுப்படி தமிழக அரசு கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஹெச்.ராஜா-வின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். கடந்த காலங்களில் ஹெச்.ராஜா பலமுறை வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார். அவர் மீதும் அதுபோன்று அவதூறாகப் பேசிய பாரதிய ஜனதா கட்சியினர் மீதும் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. நெல்லை கண்ணன் அவர்களைக் கைது செய்ய சென்றபோதும்கூட பா.ஜ.க-வினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

காவல்துறையினர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அத்துமீறலில் ஈடுபட்டபோது கைது செய்யாமல் வேடிக்கை பார்த்தது. மற்ற கட்சியினர் மெரினாவில் நான்கு பேருக்கு மேல் கூட முடியாது. இந்த நிலையில் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதித்துள்ளது. இந்த முடிவை வரவேற்கிறோம். மெரினாவில் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சியினருக்கும் அனுமதி அளிக்க வேண்டும். வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய ஹெச்.ராஜா கைது செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் ஹெச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ``நெல்லை கண்ணன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் இயங்கி வருபவர். நகைச்சுவை உணர்வோடு பேசுபவர். அவ்வாறு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பற்றி எதார்த்தமாகத் தெரிவித்த கருத்தை ஹெச்.ராஜாவும் பா.ஜ.க-வினரும் தேவையில்லாமல் சர்ச்சையாக்குகிறார்கள். காவல்துறையினரும் அவர்கள் விதித்த கெடுவுக்கு முன்பாகவே நெல்லை கண்ணனைக் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க-வினர் மீதான வழக்குகளில் காவல்துறை இதுபோன்ற துரிதமாகச் செயல்பட்டதா? நெல்லை கண்ணன் பேசியது எங்கே அவதூறாக, வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்தது. ஹெச்.ராஜா நேரடியாகவே வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியவர். காவல்துறை முதலில் அவரைக் கைது செய்ய வேண்டும். கைது செய்யத் தவறினால் நாங்களும் கெடு விதித்து போராட நேரிடும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.

தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு
தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், "நெல்லை கண்ணனைக் கைது செய்ய வேண்டும் எனப் பா.ஜ.க-வினர் போட்ட உத்தரவை அ.தி.மு.க அரசும் காவல்துறையும் செயல்படுத்துகிறது. பா.ஜ.க-வையும் தாண்டி ஹெச்.ராஜா சொல்வதை அப்படியே செயல்படுத்தும் நிலைக்கு தமிழக அரசு வந்துவிட்டது. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே ஏற்றுக்கொண்ட தலைவர் பெரியாரை செருப்பால் அடிப்பேன் எனப் பேசியவர் ஹெச்.ராஜா. `ம.தி.மு.க தலைவர் வைகோ உயிரோடு திரும்ப முடியாது' என்றும் பேசியிருக்கிறார். இதற்கெல்லாம் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது. அவர்கள் என்ன செய்தாலும் வேடிக்கை பார்ப்போம் என்கிற நிலையில் தமிழக அரசு இருக்கிறது. மாநில அரசு யாரையோ திருப்திபடுத்துவதற்காக இவ்வாறெல்லாம் செய்து வருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு