Published:Updated:

சசிகலாவை பொதுமக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

சசிகலா
சசிகலா

கடந்த நான்காண்டுகளில் சசிகலா குறித்து தமிழக மக்கள்கொண்டிருந்த அபிப்ராயத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

``கடந்த நான்கு ஆண்டுக்காலச் சிறை வாழ்க்கை அவரது கடந்தகால வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது. சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு பாருங்கள்... அந்த மாற்றங்கள் தெரியும்'' என சசிகலா விடுதலையாவதற்கு முன்பாக சூசகமாகச் சொன்னார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஆனால், சசிகலாவிடம் என்ன மாற்றம் நேர்ந்திருக்கிறது என்பதை உலகம் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, கடந்த நான்காண்டுகளில் சசிகலா மீது தமிழக மக்கள்கொண்டிருந்த அபிப்ராயத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

ஜெயலலிதா - சசிகலா
ஜெயலலிதா - சசிகலா

கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9:30 மணிக்கு, உடல்நலக் கோளாறு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. ‘சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்’ என அப்போலோ மருத்துவமனை முதல் அறிக்கையை வெளியிட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே, `ஜெயலலிதாவின் வீட்டில் என்னவெல்லாம் நடந்தது, எதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' எனக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கைக்கு இணையாக பல செய்திகள் உலாவரத் தொடங்கின. அதற்கேற்றாற்போல, ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்ற 75 நாள்களில், அவர் படங்களை வெளியிடாமல் இருந்ததும், அமைச்சர்களின் முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளும் அதற்கு வலு சேர்த்தன.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, சசிகலாவின் மீதான விமர்சனங்கள் உச்சத்தை எட்டின. ஜெயலலிதாவை நாயகியைப்போலவும், சசிகலா அவரைக்கூட இருந்தே கொலை செய்த வில்லியைப்போலவும் செய்திகள் பரவத் தொடங்கின. தொடர்ந்து ஜெயலலிதாவைப்போலவே உடை மற்றும் சிகை அலங்காரத்தை சசிகலா மாற்றியபோது, அதுவரை வில்லியாகப் பார்த்தவர்கள், கேலிக்குரிய நபராக அவரை விமர்சிக்கத் தொடங்கினர். அரசியல் விஷயம் தெரிந்தவர்களுக்கு, ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரையில், சசிகலா அ.தி.மு.க-வில் எந்த அளவுக்கு அதிகார மையமாக இருந்தார் என்பது தெரியும். ஆனால், பொதுச் சமூகத்தில், அவர் ஜெயலலிதாவுக்குத் துணையாக வீட்டில் உதவியாளராக மட்டுமே இருந்தார் என்கிற அளவுக்குத்தான் புரிதல் இருந்தது. அது, சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகப் பதவியேற்றபோது அப்பட்டமாக வெளிப்பட்டது.

சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்.
சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்.

வேலைக்காரியில் தொடங்கி கைநாட்டு, கொலைகாரி, சதிகாரி என ஏராளமான வசவுச் சொற்களுக்கு ஆளானார் சசிகலா. சில பிரபலங்களேகூட அப்படித்தான் அவரை வர்ணித்தனர். மறுபக்கம், சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பி.எஸ்-ஸை கொண்டாடித் தீர்த்தனர். #Isupportops என்கிற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக ட்வீட்கள் பறந்தன. அப்போது மட்டுமல்ல, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்லும்போதும்கூட, அதில் முதன்மைக் குற்றவாளியான ஜெயலலிதாவைவிட அதிகமாக விமர்சனத்துக்குள்ளானது சசிகலாதான். ஜெயலலிதா மறைந்துவிட்டார். மறைந்த ஒருவரைப் பற்றிப் பேசக் கூடாது என்கிற அடிப்படை நாகரீகத்தின் அடிப்படையில் அது நடந்திருந்தால்கூட பரவாயில்லை. சசிகலாதான் ஜெயலலிதாவோடு இருந்து கொள்ளைக் காரியங்களிலெல்லாம் ஈடுபட்டார், ஜெயலலிதாவுக்குப் பாவம் எதுவும் தெரியாது என்கிற அளவுக்கு அந்த விமர்சனங்கள் இருந்தன.

ஆனால், இந்த நான்காண்டுகால சிறை வாழ்க்கை, சசிகலா மீதான மக்களின் பிம்பத்தை பெரிய அளவு மாற்றியிருக்கிறது. ''ஒரு பெண் தப்பு செஞ்சாங்க, அதற்கான தண்டனையை அனுபவிச்சுட்டாங்க... இனிமே அவங்களை என்ன சொல்றது'' என அடித்தட்டு வர்க்கத்தைப் பேசவைத்திருக்கிறது. ``நான்காண்டுகளுக்கு முன்பாக நானும் சசிகலாவை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறேன். ஆனா, இப்போ அவங்களோட அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன். அ.தி.மு.க-வுக்கு அவங்களுடைய தலைமை தேவை. அப்போதுதான் தமிழகத்தில் ஆக்கபூர்வமான ஆளுமங்கட்சி, எதிர்க்கட்சிகள் அமையும்'' எனப் படித்த, மத்திய தர வர்க்கத்தை தங்களின் சமூக வலைதளக் கணக்குகளில் எழுத வைத்திருக்கிறது. அவ்வளவு ஏன், `மன்னார்குடி மாஃபியா, அடாவடி கும்பல்' என சசிகலா குடும்பத்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கடுமையாக வர்ணித்த முற்போக்கு முகாம்களும்கூட, தற்போது, `மத்திய பா.ஜ.க-வை எதிர்க்க சசிகலாவும் தேவைதான்' என்று மாற்றிச் சொல்லவைத்திருக்கிறது. `பா.ஜ.க-வைச் சமாளிக்க சரியான ஆள், எடப்பாடியா , சசிகலாவா' எனத் தொலைக்காட்சி ஊடகங்களில் விவாதங்கள் நடந்துவருகின்றன.

சசிகலா
சசிகலா

``கொள்ளையடித்து ஜெயிலுக்குப் போனவருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு தேவையா?'' என அவருக்குக் கொடுக்கப்பட்ட பகட்டான வரவேற்பை விமர்சித்து ஒரு சில குரல்கள் எழுந்தாலும், `அவரால் நன்மையை அனுபவிச்சவங்க அவங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறாங்க. இதுல நாம சொல்றதுக்கு என்ன இருக்கு... காசு கொடுத்து யாருதான் இந்தக் காலத்துல ஆள் சேர்க்கலை' என்கிற குரல்களையும் கூடவே கேட்க முடிகிறது.

ஆனால், சசிகலாவின் நான்காண்டு சிறை வாழ்க்கை மட்டும் மக்களின் இந்த மனமாற்றத்துக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. அவர் சிறைக்குச் சென்ற பிறகு அ.தி.மு.க-வில் நடந்த களேபரங்கள், `ஓ.பி.எஸ்-ஸை நான்தான் தர்மயுத்தம் இருக்கச் சொன்னேன்' என அந்தக் கட்சிக்குச் சம்பந்தமே இல்லாத நபர் பேசியது, அதே நபர், `இ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரையும் ஆண்மையற்ற தலைவர்கள்' என டிவிட்டரில் கருத்து பதிவிட்டது, இரட்டைத் தலைமைகளின் ஆளுமையைக் கேள்விக்குள்ளாக்கியது. சசிகலாதான் சரியான நபரோ என மக்களை யோசிக்கத் தூண்டியது. அதுமட்டுமல்ல, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது எனச் சொல்லி விசாரணை ஆணையம் அமைக்கக் காரணமாக இருந்த ஓ.பி.எஸ்., பல முறை சம்மன் வந்தும் ஒருமுறைகூட அதில் ஆஜராகாமல் மட்டம் போட்டதுதான், சசிகலாவை ஜெயலிதாவைக் கொலை செய்தவர் என்கிற குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. அதுமட்டுமல்ல, பா.ஜ.க-வின் பினாமி அரசாகத்தான் தமிழகத்தில் அ.தி.மு.க-வின் அரசாங்கம் இருக்கிறது என்கிற விமர்சனங்கள் கடுமையானதும் சசிகலா மீதான மக்களின் பார்வைக்கு முக்கியக் காரணம்.

குருமூர்த்தி
குருமூர்த்தி

சசிகலாவின் வருகை, அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையே... அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் என யாரும் அவரைச் சென்று சந்திக்கவில்லையே என்கிற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கான பதிலாக கண்டிப்பாக வரும் தேர்தல் முடிவுகள் இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ``சசிகலாவின் ஆதரவாளர்கள், அவரால் பதவிக்கு வந்தவர்கள்தான் பெரும்பாலும் அ.தி.மு.க-வில் இருக்கின்றனர். அவர்கள் இன்னும் இரண்டு மாத கால பதவியை ஏன் அவசரப்பட்டு இழக்க வேண்டும் என்றுதான் பொறுமையாக இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் இந்தமுறை எம்.எல்.ஏ சீட்டு கிடைக்கவில்லை என்றால் பாதிப்பேர் கழன்றுகொள்வார்கள். போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் சாதகமாக தேர்தல் முடிவுகள் வரவில்லையென்றால் அப்போது மீதிப்பேர் கழன்றுகொள்வார்கள். பா.ஜ.க-வின் தயவில், எப்படியோ இரட்டை இலைச் சின்னம், அ.தி.மு.க இரட்டைத் தலைமைகளின் வசம்தான் இருக்கிறது. சின்னம் இருக்கும்வரை நிர்வாகிகளும் அ.தி.மு.க-வில்தான் இருப்பார்கள். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிச்சயமாகப் பல மாற்றங்கள் இருக்கும்'' என அடித்துச் சொல்கிறார்கள்.

சசிகலா சொன்ன பொது எதிரி... தி.மு.க-வா, பா.ஜ.க-வா?

சசிகலா தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற மக்கள் தலைவராக மாறிவிட்டாரா என்றால் நிச்சயமாக இல்லை, ஆனால், நான்காண்டுகளுக்கு முன்பாக அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள், கேலி செய்தவர்கள் இப்போது அவரை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. சிறைக்குச் செல்லும் முன் ``இந்த அரட்டல், உருட்டல்களையெல்லாம் பல ஆண்டுகளாகக் கடந்துதான் வந்திருக்கிறேன்'' என சசிகலா பேட்டி கொடுத்தபோதும், ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை சத்தியம் செய்தபோதும் அது கேலியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், சிறையிலிருந்து சென்னைக்கு வந்தபோது, ``தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் மட்டும்தான் நான் அடிமை. அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன். தொடர்ந்து, தீவிர அரசியலில் ஈடுபடுவேன்'' என்று சொன்னபோது உள்ளபடியே அவரை ஆளுமைமிக்க நபராகத்தான் பொதுச்சமூகம் உள்வாங்கிக்கொண்டது.

சசிகலா
சசிகலா

ஏன், நாளை அவரின் செயல்பாடுகளால் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தலைவராகக்கூட அவர் ஆகலாம். அல்லது அவர்மீது தற்போது கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள் சுக்குநூறாக உடைந்தும் போகலாம். எல்லாவாற்றுக்குமான விடை காலத்தின் கையில்தான் இருக்கிறது. அதுவரை பொறுத்திருப்போம்..!

அடுத்த கட்டுரைக்கு