Published:Updated:

தலைமையின்றி தவிக்கும் திட்டக்குழு!

திட்டக்குழு
பிரீமியம் ஸ்டோரி
திட்டக்குழு

விளைவுகளை விவரிக்கும் மு.நாகநாதன்

தலைமையின்றி தவிக்கும் திட்டக்குழு!

விளைவுகளை விவரிக்கும் மு.நாகநாதன்

Published:Updated:
திட்டக்குழு
பிரீமியம் ஸ்டோரி
திட்டக்குழு

மாநில அரசுக்குத் தேவையான திட்டங்களை வகுத்துக்கொடுப்பது, வழிகாட்டுவது போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கும் திட்டக்குழுவின் துணைத் தலைவர் பதவி நீண்டகாலம் காலியாகக் கிடக்கிறது. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய அமைப்பும் உருவாக்கப்படவில்லை. இதனால், தமிழகம் பல பாதிப்புகளைச் சந்திப்பதாக விமர்சிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

இந்தியாவை ஒரு நவீன தேசமாக மாற்றியதில் மத்திய திட்டக்குழுவுக்கு பெரிய பங்கு உண்டு. ஐந்தாண்டுத் திட்டங்கள் மீது பல விமர்சனங்கள் இருந்தபோதிலும், அந்தத் திட்டங்களால்தான் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தொழில் உட்பட பல்வேறு துறைகளிலும் இந்தியா முன்னேறியது. அத்தகைய அமைப்பைக் கலைத்துவிட்டு, ‘நிதி ஆயோக்’கை பி.ஜே.பி அரசு கொண்டுவந்தது.

மு.நாகநாதன்
மு.நாகநாதன்

2014-ல் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, ‘மத்திய திட்டக்குழு கலைக்கப்படும்’ என்று தன் முதல் சுதந்திர தின உரையில் அறிவித்தார். அதையொட்டி, தமிழகத்தில் மாநிலத் திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கப்போவதாக அறிவித்தது தமிழக அரசு. மேலும் அந்தப் புதிய அமைப்பின் பெயர் ‘மாநில வளர்ச்சிக் கொள்கை கவுன்சில்’ என்றும் சொல்லப்பட்டது. ஆனால், புதிய அமைப்பு உருவாக்கப்படவேயில்லை. அது மட்டுமல்ல, ஏற்கெனவே இருக்கும் மாநிலத் திட்டக்குழுவும் துணைத்தலைவர் இல்லாமல் தவித்துவருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சாந்த ஷீலா நாயர் துணைத்தலைவராக இருந்தார். அவருக்குப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த இடம் காலியாகக் கிடக்கிறது. இதனால், மக்களுக்குத் தேவையான புதிய திட்டங்களை உருவாக்குவதிலும், மாநில அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களை மதிப்பீடு செய்வது - வழிகாட்டுவது போன்றவற்றிலும் பின்னடைவு இருப்பதாகச் சொல்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள்.

மாநிலத் திட்டக்குழுவின் தலைவராக இருப்பவர் முதலமைச்சர் என்றாலும், உண்மையில் அந்த அமைப்பின் கேப்டனாக இருந்து செயல்படக் கூடியவர் அதன் துணைத் தலைவர்தான். 2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, பொருளாதாரப் பேராசிரியர் மு.நாகநாதன், திட்டக்குழுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகுதான் மாநிலத் திட்டக்குழு என ஒன்று இருப்பதே பரவலாக அறியப்பட்டது.

துணைத்தலைவர் பதவி காலியாக இருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நம்மிடம் விவரித்தார் பேராசிரியர் மு.நாகநாதன்.

‘‘மக்களுடன் நெருக்கமாக இருப்பதும் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவதும் மாநிலங்கள்தான். எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் திட்டக்குழு இருப்பது அவசியம். தமிழ்நாட்டின் மாநிலத் திட்டக்குழு பல தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டியுள்ளது. அதன் துணைத்தலைவராக என்னைக் கலைஞர் நியமித்தார். யாருடைய தலையீடும் இல்லாமல் செயல்பட்டேன். அதன் பலனைத் தமிழகம் பெற்றது.

உதாரணமாக, ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்களுக்குச் செலவு செய்யக்கூடாது என்று அதிகாரிகள் கூறினர். நான், ரூ.84 ஆயிரம் கோடி செலவு செய்யவேண்டும் என்றேன். அதற்கான திட்டங்களையும், நிதி ஆதாரங்களுக்கான வாய்ப்புகளையும் விளக்கினேன். ஆனாலும், ரூ.80 ஆயிரம் கோடி என்று ஃபைல் தயாரித்த அதிகாரிகள் அதை டெல்லிக்கு அனுப்பிவிட்டனர். அதை கலைஞரிடம் சொன்னேன். பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசிய கலைஞர், ஃபைலைத் திருப்பி அனுப்பச்சொன்னார். அதன்பிறகு ரூ.84 ஆயிரம் கோடி என்று மாற்றி அனுப்பப்பட்டது. கடைசியில், ஒவ்வொரு துறையிலும் கவனம் செலுத்தி, ஐந்து ஆண்டுகளில் ரூ.92 ஆயிரம் கோடி செலவு செய்தோம். நிறைய செலவு செய்தால்தான் நிறைய வரி வருமானம் கிடைக்கும். நிறையத் திட்டங்களும் மக்களிடம் போய்ச்சேரும்.

முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் பேசுவதற் கான உரையைத் திட்டக்குழுவில்தான் தயாரிப்போம். அவ்வளவு முக்கியத்துவம் திட்டக்குழுவுக்குத் தரப்பட்டிருந்தது. தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு கேரளாவில் நடைபெற்றபோது, முதல்வருக்குப் பதிலாக நான் பங்கேற்றேன். அதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியைக் கலைஞர் பெற்றுத்தந்தார். மத்திய திட்டக்குழு துணைத்தலைவராக இருந்த மாண்டேக் சிங் அலுவாலியா, அன்றைய முதல்வர்கள் வி.எஸ்.அச்சுதானந்தன் (கேரளா), குமாரசாமி (கர்நாடகா), ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி (ஆந்திரா), ரெங்கசாமி (புதுச்சேரி) ஆகியோர் பங்கேற்றனர். முதலில் பேசியது நான்தான். ‘ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தேவை இருக்கிறது. அது என்ன தேவை என்பது மாநிலங் களில் இருக்கும் எங்களுக்குத்தான் தெரியும். ஆனால், டெல்லியில் இருந்துகொண்டு நீங்கள் திட்டங்களைத் தீட்டுகிறீர்கள். எங்கள் யோசனை களைக் கேட்டுவிட்டு, பிறகு திட்டங்களைத் தீட்டுங்கள்’ என்று பேசினேன். அச்சுதானந்தன் கைதட்டி வரவேற்றார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் திட்டக்குழுவினர் ஆலோசனை
முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் திட்டக்குழுவினர் ஆலோசனை

ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளையும் ஒவ்வோர் ஆண்டும் மதிப்பீடு செய்வோம். அரசு செயலாளர்கள் வந்து தங்களின் பெர்ஃபாமென்ஸ் காட்டுவார்கள். முந்தைய ஆண்டு பெற்ற நிதி முழுமையாகச் செலவிடப்படவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கேட்போம். செயல்பாடு களை மதிப்பீடு செய்து, அதில் குறைபாடுகள் இருந்தால் அதுபற்றியும் கேட்போம்.

11-வது ஐந்தாண்டு திட்டத்துக்கான அறிக்கையைத் தமிழில் கொண்டுவந்தோம். அதை எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தேன். அவர் சந்தோஷப் பட்டார். தமிழில் இருந்த காரணத் தாலேயே பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அந்த அறிக்கையை ஆர்வத்துடன் கேட்டு வாங்கினார்கள்.

எல்லா மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள பிரச்னைகளை ஆய்வு செய்தோம். அனைத்துத் தரப்பினரிட மும் கருத்துகள் கேட்டோம். உதாரண மாக, திருப்பூருக்குச் சென்று சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து அந்த மக்களிடம் பேசினோம். ‘உங்கள் ஊரின் சுற்றுச்சூழலைக் கெடுத்துவிட்டு, நீங்கள் பணக்காரர்களாகி என்ன பயன்? சுற்றுச்சூழலைப் பாதிக்காத அளவுக்கு தொழில் நடத்துங்கள்’ என்று சொன்னோம். அதுபோன்ற முயற்சிகள் இப்போது நடக்கவில்லை.

ஜெயரஞ்சன் உள்ளிட்ட பொருளா தார வல்லுநர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டோம். அவர் கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுவார்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மழைநீர் சேகரிப்பு தொடர்பாக நாங்கள் எடுத்த முயற்சி மிகவும் முக்கியமானது. தமிழ் நாட்டில், மழைநீர் சேகரிப்புக்கான வாய்ப்புகள் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதைக் கண்டறிந்து, அதுகுறித்து அறிக்கை தயாரித்து அரசிடம் அளித்தோம்.

குடிநீர் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான பணியில் இறங்கி னோம். பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கோடைக்காலத்தில் எந்த இடத்தில் வறட்சி இருக்கிறது, மழைக்காலத்தில் எங்கெல்லாம் தண்ணீரைச் சேகரிக்க முடியும் என்று கண்டறிந்து, அதன் அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப அறிக்கையைத் தயார் செய்து அரசிடம் அளித்தோம். அந்த அறிக்கை என்னவாயிற்று என்று தெரியவில்லை.

நான் பணியாற்றிய ஐந்து ஆண்டு களும் மாநிலத் திட்டக்குழு மிகவும் உற்சாகமாகச் செயல்பட்டது. திட்டக் குழுவின் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இருந்தார். அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திட்டக்குழுவுக்கான முக்கியத் துவம் குறைந்துபோனது. இந்த நிலைமை யானது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல வகைகளில் பாதிப்பு தான்’’ என்று விளக்கமாக எடுத்துரைத்தார்.

‘‘மாநிலத் திட்டக்குழுவுக்கு ஏன் துணைத்தலைவர் நியமிக்கப்பட வில்லை, புதிய அமைப்பு என்ன வாயிற்று?’’ என்ற கேள்விகளை நிதித் துறை உயரதிகாரிகள் முன்வைத்தோம்.

‘‘இந்த அமைப்பின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. திட்டங்கள் தொடர்பாக அரசுக்கு வழிகாட்டுவது இதன் முக்கியப் பணி. உதாரணமாக வேளாண் வளர்ச்சி, விவசாயிகளின் வருமானம் ஆகியவற்றுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன திட்டங்களை வகுக்க வேண்டும் என்று நிபுணர்கள் குழு விவாதித்து, சில திட்டங்களை வகுத்துக்கொடுப்பார்கள். அது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பயனுள்ள விஷயமாக இருக்கும்.

வறுமை, தனிநபர் வருமானம், வேலையின்மை, கல்வி, சுகாதாரம் உட்பட ஆறு விஷயங்களில் மாவட்டங்களுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. அந்த இடைவெளி குறைந்தால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதற்காக, பின்தங் கிய வட்டங்கள் என 105 வட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு, மேற்குறிப்பிட்ட ஆறு விஷயங் களில் திட்டங்களை வகுத்து அமல் படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டுவருகிறது. இந்தப் பணியைத் திட்டக்குழுதான் கண்காணிக்கிறது. துணைத்தலைவர் பதவி காலியாக இருந் தாலும், திட்டக்குழுவின் வழக்கமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. மாநில திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, நிதி ஆயோக் மாதிரியான ஓர் அமைப் பைக் கொண்டுவருவது என அரசு முடிவுசெய்தது. இதில் சில விஷயங்கள் விவாத அளவிலேயே இருப்பதால், துணைத்தலைவர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. இதுதொடர்பான முக்கிய முடிவுகள் விரைவில் எடுக்கப்படும்’’ என்றனர்.