நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, நாளை தமிழ்நாட்டில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெறவிருக்கிறது. பேரணியின் இறுதியில் பொதுக்கூட்டமும் நடத்தப்படவிருக்கிறது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு 12 நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை விதித்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு அனைத்துக் காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.
தமிழ்நாடு காவல்துறையின் 12 புதிய கட்டுப்பாடுகள்:
1. ஆர்.எஸ்.எஸ். பேரணியின்போது தனி நபர்களைக் குறிப்பிட்டோ சாதி, மதம் பற்றியோ எந்தக் காரணம்கொண்டும் யாரும் தவறாகப் பேசக் கூடாது.
2. இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்தவிதக் கருத்துகளையும் பேசக் கூடாது.
3. நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தச் செயலையும் யாரும் செய்யக் கூடாது.
4. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பேரணி, நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும்.

5. ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்கள் கம்பு, ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்திச் செல்லக் கூடாது.
6. ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் குடிநீர் வசதி, முதல் உதவி, நடமாடும் கழிவறைகள், கேமராக்கள், தீயணைப்புக் கருவிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொள்ள காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினருடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.
7. காவல்துறை அனுமதி அளித்திருக்கும் வழித்தடத்தில் மட்டுமே பேரணி செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இடதுபுறமாக மட்டுமே ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே பேரணிக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
8. ஊர்வலத்தை நடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், ஊர்வலத்தில் செல்பவர்களை ஒழுங்குபடுத்தவும் காவல்துறைக்கு உதவும் வகையில் போதுமான தன்னார்வலர்களை நியமித்திருக்க வேண்டும்.

9. பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலி சத்தம் 15 வாட்ஸ்களுக்கு மிகாமல் இருப்பது அவசியம். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது.
10. ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாசாரம், பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது.
11. பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும்.
12. இந்த நிபந்தனைகள் எதையும் ஊர்வலத்தில் செல்பவர்கள் எந்தக் காரணம்கொண்டும் மீறக் கூடாது. அப்படி மீறும் வகையில் செயல்பட்டால் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காவல்துறைக் கட்டுப்பாட்டுக்கான காரணங்கள் என்ன:
`ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது' எனக் கூறிதான் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் வாதிட்டுவந்தது. இதற்குக் காரணம், மதப்பேரணிகள் மூலம் கலவரங்கள் ஏற்படுவதும், இரு குழுக்களிடையே மோதல்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக நடந்துவருவதுதான். குறிப்பாக, வடமாநிலங்களில் ராமநவமி ஊர்வலம், அனுமன் ஜயந்தி ஊர்வலம் உள்ளிட்ட சில மதப்பேரணிகள் வன்முறையில்தான் முடிந்துவருகின்றன. கடந்த மாதம்கூட ராமநவமி ஊர்வலத்தின்போது பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களில் இரு மதப்பிரிவினர்களிடையே மோதல் வெடித்து அந்த மாநிலங்களின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்தது. அந்த நிலைமை தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து அனுமதி மறுத்துவந்தது' என்கிறார்கள் ஆளும்தரப்பினர்.

ஆனால், தங்கள் பேரணிக்கு தமிழ்நாடு அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தது. ஆனால், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்தது.

நீதிமன்றங்களின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. இந்த நிலையில், நாளை ஏப்ரல் 16-ம் தேதி காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறவிருக்கிறது.