Published:Updated:

`தமிழகக் காவல்துறை எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறது!'- நீதிபதியிடம் முறையிட்ட விவசாயிகள்

பசுமைச் சாலை
பசுமைச் சாலை

சேலம் மாவட்டத்தில் 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராடியதால், அவர்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டு சேலம் ஜே.எம். 1ல் நீதியரசர் செந்தில் முன்னிலையிலும், ஜே.எம். 2வில் நீதியரசர் சிவா முன்னிலையிலும் வழக்கு நடைபெற்று வருகிறது.

சேலம் டு சென்னை 8 வழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது தமிழகக் காவல் துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாகச் சொல்லியும் அந்தப் பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.2 குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியைச் சந்தித்து புகார் மனு கொடுத்தார்கள்.

புகார் மனு
புகார் மனு
எம்.விஜயகுமார்

இதுபற்றி 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள், ``சேலம் டு சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் 2018 -ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு படிப்படியாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களைப் பறிமுதல் செய்தனர். இதனால் பல விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து நடு ரோட்டிற்கு வரும் நிலை ஏற்பட்டது.

அதையடுத்து ஜனநாயக முறைப்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயியும் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினோம். தமிழகக் காவல்துறை அடக்கு முறையைக் கையாண்டு எங்களை மிரட்டித் துன்புறுத்தியதோடு பலர் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தார்கள். எங்களுடைய நியாயமான போராட்டத்தை உணர்ந்து பல தரப்பினரும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

அருள்
அருள்
எம்.விஜயகுமார்

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதல்வர் ஓமலூர் கட்சி அலுவலகத்திற்கு வந்த போது 18 விவசாயிகளை செட்அப் செய்து சேலம் டு சென்னை 8 வழிச் சாலை வேண்டும் என முதல்வரிடம் மனு கொடுத்ததாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஒரு மாதம் கழித்து ஜூலை மாதம் சேலம் பொருட்காட்சி திறப்பு விழாவிற்கு முதல்வர் வரும் போது 200-க்கும் மேற்பட்டவர்கள் விவசாயிகள் கூடி 8 வழிச் சாலை வேண்டாம் என்று மனு கொடுக்கச் சென்றோம்.

பொருட்காட்சி திறப்பு விழா பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. ஆனால், எங்களை ஐந்து ரோட்டிலேயே காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்து விட்டார்கள். பிறகு எங்கள் மீது சட்ட விரோதமாகக் கூடுதல், முறையற்று விழாவைத் தடுத்தல் போன்ற வழக்குகள் போட்டார்கள். அந்த வழக்கிற்குச் சம்மன் அனுப்பியிருந்தார்கள். இது பொய்யான வழக்கு என்றும் தொடர்ந்து இதுபோன்ற பொய்யான வழக்குகளை எங்கள் மீது போடுகிறார்கள் என்றும் நீதி அரசரைச் சந்தித்து மனு கொடுத்து இருக்கிறோம்'' என்றார்கள்.

பார்த்திபன்
பார்த்திபன்
எம்.விஜயகுமார்

விவசாயிகள் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் பார்த்திபன், ''சேலம் டு சென்னை 8 வழிச் சாலை திட்டத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக முறையில் அவர்கள் போராடுவதற்கு உரிமை உள்ளது. அவர்கள் மீது பொய் வழக்கு போடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. உயர் நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் தொடர்ந்து விவசாயிகள் மீது பொய் வழக்குகள் போடுகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராடியவர்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டு சேலம் ஜே.எம். 1ல் நீதியரசர் செந்தில் முன்னிலையிலும், ஜே.எம். 2வில் நீதியரசர் சிவா முன்னிலையிலும் வழக்கு நடைபெற்று வருகிறது. காவல்துறை தொடர்ந்து 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்டு வருவதை நீதியரசர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்ல புகார் மனு கொடுத்துள்ளோம்'' என்றார்.

இதுபற்றிக் காவல்துறை தரப்பில் விசாரித்த போது, ``யார் மீதும் பொய் வழக்கெல்லாம் போடவில்லை. அரசு திட்டத்தைச் செயல்படுத்த விடாமல் தடுத்தவர்கள் மீதும், முதல்வரை முற்றுகையிட முயன்றதாலும் வழக்கு போடப்பட்டுள்ளது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு