Published:Updated:

``எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மறக்க முடியாத தலைவர்!''- ஜெயலலிதா குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள்

ஜெயலலிதா
ஜெயலலிதா

`சமீபகால தமிழக அரசியல் வரலாற்றில் கட்சியின் மீதும் ஆட்சியின் மீதும் அவருக்கு இருந்த அதிகாரமும் செல்வாக்கும் வேறு எந்தத் தலைவர்களுக்கும் எக்காலத்திலும் இருந்ததில்லை.’

ஜெயலலிதா இறந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க தொண்டர்களால் தலைவியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர், இறுதிவரை மிகக் கட்டுக்கோப்பாகக் கட்சியை வழிநடத்தினார். நான்கு முறை தமிழகத்தின் முதல்வராகவும் மக்கள் பணியாற்றியுள்ளார். அரசியலில் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டவர். தனி ஒரு மனுஷியாகப் பல சவால்களைச் சந்தித்து வெற்றிநடை போட்டவர். அவரின் நினைவுதினமான இந்தநாளில் மற்ற கட்சிகளின் தலைவர்கள் அவர் குறித்து, தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவர் ஒரு மறக்க முடியாத பெண்மணி. அவரோடு சம காலத்தில் வாழ்ந்த அரசியல் தலைவர்கள், அவர் அருகில் இருந்து அவரைப் பார்க்க வாய்ப்பிருந்தவர்கள், எதிர் முகாமில் இருந்தாலும்கூட அவருடைய ஆளுமையை வியக்காமலும் ஆச்சர்யப்படாமலும் இருந்திருக்க முடியாது.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த எங்களுக்குக்கூட, எங்களின் சில கருத்துகளை அவர் கேட்கத் தயாராக இல்லையே என்கிற வருத்தம்தான் இருந்தது. ஆனால், அவருடைய ஆளுமையின் மீதோ, நிர்வாகத் திறமையின் மீதோ எங்களுக்கு சந்தேகம் இருந்ததில்லை.

சமீபகால தமிழக அரசியல் வரலாற்றில் கட்சியின் மீதும் ஆட்சியின் மீதும் அவருக்கு இருந்த அதிகாரமும் செல்வாக்கும் வேறு எந்தத் தலைவர்களுக்கும் எக்காலத்திலும் இருந்ததில்லை. காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருக்கு இருந்த சவால்கள்கூட ஜெயலலிதாவுக்கு இருந்ததில்லை. அவரை எதிர்த்துப் பேசக்கூடிய தலைவர்கள் ஆட்சியிலும் சரி கட்சியிலும் சரி எப்போதும் இருந்ததில்லை. அவர் செய்வதைத் தவறு என்று சுட்டிக்காட்டக்கூடிய அதிகாரிகளும் அவருக்குக் கீழே பணியாற்றவில்லை. அந்தளவுக்கு ஒட்டுமொத்த விசுவாசத்தையும் அதிகாரத்தையும் அவர் பெற்றிருந்தார். ஆனால், அந்தச் செல்வாக்கை வைத்து அவர், நினைத்திருந்தால் இன்னும் பல நல்ல விஷயங்களைச் செய்திருக்க முடியும்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்னும் தோழமையுடனும் நட்புடனும் அவர்கள் சொல்வதை உள்வாங்கும் மனப்பான்மையுடனும் அவர் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் இவ்வளவு பெரிய தவறுகள் அவர் ஆட்சிக் காலத்தில் நடந்திருக்காது. நான் இன்னும் நம்புகிறேன் பல விஷயங்கள் அவரின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்திருக்கக்கூடும் என்று.

எதிர்க்கட்சிகளின், பத்திரிகைகளின் விமர்சனங்களை அவர் முழுமையாக அனுமதித்திருந்தால், உண்மையிலேயே தமிழகம் என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தங்கத் தாரகையாக அவர் இருந்திருப்பார். ஆனால், அப்படி இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

மற்றபடி அவர் என்றுமே மறக்க முடியாத ஒரு பெண்மணிதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்):

மிகத்திறமையான ஒரு நபர் ஜெயலலிதா. ஒரு முடிவு எடுத்தால் அதை அமலாக்குவதில் மிகவும் உறுதியாக இருப்பார். பா.ஜ.க-வுடன் ஒரேயொரு முறை கூட்டணி வைத்தாலும் வகுப்புவாதம், மதவாதம் கூடாது என நாம் சொன்னால் அதைக் கருத்தில்கொண்டு அதில் உறுதியாக இருந்து கடைசி வரை கூட்டணியில் சேராமல் இருந்தார். மக்களுக்கான நலத்திட்ட உதவிகளில் ஒரு முடிவெடுத்துவிட்டால் ஒருபோதும் அதில் இருந்து பின்வாங்க மாட்டார்.

ஜி.ராமகிருஷ்ணன்
ஜி.ராமகிருஷ்ணன்

''2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகர்மன்றத் தலைவர் ஆகியவர்களைத் தேர்வு செய்வது மறைமுகத் தேர்தலாக நடந்தது. அதில் பலமுறைகேடுகள் நடந்தன. அதனால், 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை நேரடியான தேர்தலாக நடத்த வேண்டும்'' என அப்போது கூட்டணியில் இருந்த நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்றுக்கொண்டவர், அதன்படியே நடத்தினார். மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதவர். தற்போது மத்திய அரசு தங்கள் இஷ்டத்துக்கு தமிழக அரசை ஆட்டுவிப்பதுபோல் அவர் இருக்கும்போது செய்ய முடியாது. தவிர, மழைநீர் சேகரிப்பு எனும் அருமையான திட்டத்தக் கொண்டு வந்தவர் அவர்.

அதேசமயம், அவர் கட்சி நடத்தியவிதம் ஜனநாயக முறையில் இல்லை. அவர் ஒருவரே அந்தக் கட்சியின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கையில் வைத்திருந்தார். அதனால்தான் அவர் மறைவுக்குப் பிறகு, பல சர்ச்சைகள் எழுந்தன. வலிமையான தலைமை கட்சியில் உருவாகவில்லை. அவர் மரணம்கூட இயற்கையான மரணமா என்கிற சந்தேகம் இன்னும் நீடிக்கிறது. அவர் சரியான முறையில், ஜனநாயக முறையில் செயல்படவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுதான் அது.

சீமான்
சீமான்

சீமான் (நாம் தமிழர்கட்சி)

''இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை, ராஜபக்‌சே ஒரு போர்க்குற்றவாளி, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியதற்கு நான் உட்பட 8 பேர் நன்றி சொல்வதற்காக ஜெயலலிதாவைச் சந்தித்தோம். அப்போது, ''ஈழத்தமிழர்களின் நலன் குறித்து ஹிலாரி கிளின்டனிடம் 45 நிமிடங்கள் பேசியதாக எங்களிடம் தெரிவித்தார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை மாற்றாமல் ஈழத் தமிழர்களுக்கு ஏதும் செய்ய முடியாது. அதை மாற்றுவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும் என்றும் சொன்னார். அந்தவகையில் அவரின் நினைவு நாளான இன்று அந்த விஷயங்களை நினைவுகூர்கிறேன். அவருக்கு என் புகழ் வணக்கம்.

`15 நாள்கள்தான் அவகாசம்!’- சசிகலா வீட்டை இடிக்கக் கெடு விதித்த தஞ்சை மாநகராட்சி

வன்னி அரசு (வி.சி.க):

நீட், உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா போன்ற மாநில உரிமைகள் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தவர் அவர். அது நாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் பாராட்டக்கூடியதாகவும் இருக்கிறது.

வன்னி அரசு
வன்னி அரசு

சமூக ரீதியாகப் பார்க்கும்போது, ஜாதி, மதவாதிகளுக்கு எதிராகவும் மிகத் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தவர். ஜாதி, மதவாத சக்திகளுக்கு அச்சத்தை ஊட்டக்கூடியவராக அவர் செயல்பட்டார். இந்த இரண்டு விஷயங்களிலும் ஜெயலலிதா அம்மையாரை நினைவுகொள்ளத் தக்க தனித்துவமுடையவாரக அவர் இருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு