Published:Updated:

காஞ்சி மடம் மருத்துவக்கல்லூரி இனி `கல்வித்தந்தை'க்கா... திருவனந்தபுரம் ட்விஸ்ட்! - கழுகார் அப்டேட்ஸ்

காஞ்சி மடம்
காஞ்சி மடம்

``அவசரமாக கோட்டைக்குச் செல்கிறேன். மெயில் செக் செய்யும்” என்று கழுகாரிடமிருந்து வாட்ஸ் அப் மெசேஜ். மெயிலைத் திறந்தோம்…

ஐ.பி. அலுவலகத்தில் கொரோனா?

சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவன், மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலை, நுங்கம்பாக்கம், விமானநிலையம் ஏரியாக்களில் மத்திய உளவுத்துறையான ஐ.பி-யின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பணிபுரிபவர்களில் ஆறு பேருக்குக் கொரோனா வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அலுவலக நிர்வாகம் விஷயத்தை மூடி மறைப்பதாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிவரச் செய்யவில்லை எனவும் பணியாளர்களிடையே கொந்தளிப்பு எழுந்துள்ளது.

Trichy central prison (File Pic)
Trichy central prison (File Pic)
Photo: Vikatan / Manikandan.N.G

கொரோனா பீதி… சிறையில் வசூல் வேட்டை!

நாகை மாவட்டம் சீர்காழி கிளைச்சிறையில் அடைக்கப்படும் கைதிகளை ஓரிரு நாள்களில் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றிவிடுவது வழக்கம். இப்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பத்து நாள்கள் அங்கேயே வைத்திருந்து, பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றுகின்றனராம். கொரோனா பீதியால் திருச்சி மத்திய சிறைக்குச் செல்ல பயப்படும் கைதிகள், தங்களை கிளைச்சிறையிலேயே வைத்திருக்க சிறை காவலர்களுக்கு லஞ்சம் அளிக்கிறார்களாம். இந்த வசூல் வேட்டை பட்டையைக் கிளப்புகிறதாம்.

``ஏன் இவ்வளவு டென்ஷன்?"

கன்னியாகுமரி தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜனுக்கு ஆதரவாக தி.மு.க-வின் ஒரு பகுதியினரும் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ-வான ஆஸ்டினுக்கு ஆதரவாக ஒரு பகுதியினரும் செயல்பட்டு வருகின்றனர். ஆஸ்டினுக்கு ஆதரவாக யாராவது செயல்பட்டால் அவர்களின் முகத்துக்கு நேராகவே கடுகடுத்துவிடுகிறார் சுரேஷ்ராஜன். சமீபத்தில் நாகர்கோவில் மாநகர தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் என்பவர் ஆஸ்டினின் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் அதிகமாகப் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்ராஜன் அவரிடம் நேரடியாகவே கொதித்துவிட்டார். `நீ என்ன சொல்றது?’ என்று சுரேஷும் விடாப்பிடியாக ஆஸ்டினுக்கு ஆதரவான பதிவுகளைத் தொடர, மாவட்ட தி.மு.க-வில் அனலடிக்கிறது. ஏற்கெனவே கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் சீதாராமன் என்பவரிடம் சுரேஷ்ராஜன் கோபப்பட்டதால், அவர் சுரேஷ்ராஜன் இருக்கும் பக்கமே வருவதில்லை. ``தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாகிகளை அரவணைக்காமல், இப்படி டென்ஷனாகிறாரே?” என சுரேஷ்ராஜனுக்கு நெருக்கமானவர்கள் புலம்புகின்றனர்.

Covid 19 Testing (File Pic)
Covid 19 Testing (File Pic)

கிறுகிறுக்க வைக்கும் கொரோனா பரிசோதனை மோசடி!

திருநெல்வேலியில் கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஒதுக்கப்பட்ட நிதி, முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், கிட்னி பிரச்னைகளுக்காக வருவோர்களை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பரிசோதனை கிட் மூலம் கொரோனா பரிசோதனை நடத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.

கொரோனா பரிசோதனைக்குத் தனியார் மருத்துவமனைகளில் ரூ.4,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை நோயாளிகளிடம் வசூலித்துவிட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்கின்றனர். இதற்காக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்குத் தனியார் மருத்துவமனை தரப்பு கமிஷன் கொடுத்துவிடுகிறதாம். கடந்த இரு மாதங்களில் இப்படி நூற்றுக்கும் அதிகமானோருக்கு சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தை மேல்மட்டத்துக்குக் கொண்டு செல்லாமல் கீழ்மட்ட அதிகாரிகளே விசாரணை நடத்தி மூடி மறைத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, `மாவட்டம் முழுவதும் இத்தகைய மோசடி நடந்திருக்கிறதா?' என விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளாராம். அரசு ஆய்வகங்களில் இலவசமாகப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ஆகும் செலவை அரசே ஏற்கிறது. அவ்வளவும் மக்களின் வரிப்பணம். ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இவ்வளவு கொள்ளை நடக்கிறது என்றால், மாநிலம் முழுவதும் விசாரணை மேற்கொண்டால் பல கோடி ரூபாய் மோசடி வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

எம்.எல்.ஏ மீது கல்லெறிந்த ஜெயலலிதா விசுவாசி!

கொடநாட்டுக்கு நிவாரணம் வழங்கச் சென்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-வைக் கல்லால் விரட்டியடித்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தே.மு.தி.க-வின் மாவட்டச் செயலாளராக இருந்து அ.தி.மு.க-வில் இணைந்தவர் சாந்திராமு. குன்னூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். போயஸ் கார்டனுக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க-வின் இரண்டாவது `புனிதத் தலமாக' அ.தி.மு.க-வினரால் கருதப்படும் கொடநாடு, குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதுதான்.

சில தினங்களுக்கு முன்னர் தனது ஆதரவாளர்களுடன் கொடநாட்டுக்குச் சென்ற சாந்திராமு, நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளார். நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்ட போதே இவர்கள் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன. திகிலடைந்த அனைவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்துள்ளனர். கற்களை எறிந்த நபரையும் கண்டுபிடித்துவிட்டனர். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான அந்தநபர், எடப்பாடிமீது ஏற்பட்ட அதிருப்தியால் தி.மு.க-வில் சேர்ந்துள்ளாராம். கல்லெறி வாங்கிய விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி அந்தநபர் மீது புகார் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பியுள்ளது எம்.எல்.ஏ தரப்பு.

நேரில் வாழ்த்து சொன்ன டி.ஜி.பி… நெகிழும் ஐ.பி.எஸ் வட்டாரம்!

கடந்த மே 31-ம் தேதி டி.ஜி.பி. லட்சுமி பிரசாத் ஓய்வு பெற்றார். அப்போதே திரிபாதியும் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாகப் பொறுப்பு வழங்கப்பட்டதால் அவருக்குப் பணிநீட்டிப்பு கிடைத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஓய்வு பெறும் டி.ஜி.பி-க்கு அளிக்கப்படும் பிரிவு உபசார விழா எதுவும் லட்சுமி பிரசாத்துக்கு முன்னெடுப்படவில்லை. இந்நிலையில், அவர் ஓய்வுபெற்ற சில நாள்கள் கழித்து, நேரடியாக லட்சுமி பிரசாத்தின் வீட்டுக்கே சென்று அவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வந்துள்ளார் திரிபாதி. ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் இந்த விஷயம் நெகிழ்ச்சியுடன் பகிரப்படுகிறது.

உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் குபீர் கொள்ளை !

சுகாதாரத்துறையின் கீழ் வரும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சிலரின் வசூல் வேட்டை கிடுகிடுக்க வைக்கிறது. கலப்படப் பொருள் தயாரிப்பவர்கள், சுகாதாரமில்லாத உணவுப் பொருள்களை தயாரிப்பவர்களிடம் வழக்கமாக கமிஷன் பெற்றுவந்த இவர்கள், இப்போது அந்த கமிஷனைப் பொருள்களாக வாங்க ஆரம்பித்துள்ளனராம். காரணம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்களுக்கான உணவு, ஸ்னாக்ஸ் உள்ளிட்டவற்றை வழங்குவது உணவு பாதுகாப்பு அதிகாரிகள்தான். தனிமைப்படுத்திக்கொள்வதற்காக ஹோட்டல்களில் தங்கியிருக்கும் மருத்துவர்களுக்கும், இதர கட்டண நோயாளிகளுக்கும் உணவு வழங்குவதும் இவர்களே… இதற்காக மட்டுமே சுமார் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

உணவு, ஸ்நாக்ஸ்களைக் கலப்படப் பொருள் பார்ட்டிகளிடம் மிரட்டி வாங்கி சப்ளை செய்துவிட்டு, அரசிடம் பில்லை போட்டுவிடுகிறார்களாம் சில அதிகாரிகள். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சில டுபாக்கூர் ஹோட்டல்களைத் தேர்ந்தெடுத்து ஷிஃப்ட் முறையில் ஸ்நாக்ஸ் மற்றும் உணவுப் பொட்டலங்களை இலவசமாகப் பெற்று சப்ளை செய்துவிட்டு, போலி பில் வைத்து கச்சிதமாக செலவு கணக்கை எழுதிவிடுகின்றனராம். இந்த மோசடி தமிழகம் முழுவதும் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனியார் வங்கிக்கு மாற்றப்பட்ட பணம்!

நுண்ணுயிர் பாசனத் திட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 100 கோடி ரூபாய் நிதி உள்ளது. அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில்தான் இந்தப் பணம் இருப்பு வைக்கப்பட்டு கையாளப்பட வேண்டும். இதை தங்கள் வங்கிக்கு மாற்றினால் கமிஷன் தருவதாக ஒரு தனியார் வங்கி சொன்னதும், வேளாண்மைத் துறையைச் சேர்ந்த `குரு’வான ஒரு உயரதிகாரி அரசு வங்கியில் இருந்த பணத்தை தனியார் வங்கிக்கு மாற்றியுள்ளார். ``இதில் மட்டும் கமிஷன் மூன்று சதவிகிதமாம்" என்று வாய் பிளக்கிறது வேளாண்துறை.

மருத்துவக் கல்லூரி பத்திரப்பதிவு... ஏமாற்றத்துடன் திரும்பிய கல்வித்தந்தை!

காஞ்சி மடத்தில் ஜெயேந்திரர் உயிருடன் இருந்தபோது மடம் தரப்பில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரி கெளரி காமாட்சி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை கெளரி காமாட்சிதான் இன்றளவும் நிர்வகித்துவருகிறார். கடந்த ஓர் ஆண்டாக இரு தரப்புக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படவே, அந்தக் கல்லூரியை கெளரி தரப்பிலிருந்து பறித்து, அதை தமிழக கல்வித்தந்தையான அரசியல்வாதி ஒருவரிடம் விற்பனை செய்ய தீவிரமாக காய்நகர்த்திவந்தது மடம் தரப்பு. கெளரி காமாட்சியும் முடிந்தவரை அதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவந்தார். இதற்கிடையே ஜூன் 16-ம் தேதி மடம் தரப்பிலிருந்தும் கல்வித்தந்தை தரப்பிலிருந்தும் கல்லூரியைப் பத்திரப்பதிவு செய்வதற்காக திருவனந்தபுரம் சென்றிருக்கிறார்கள்.

காஞ்சி மடம்
காஞ்சி மடம்

தொடர்ந்து, கெளரி காமாட்சி இதுகுறித்து திருவனந்தபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் பிரச்னையை எடுத்துச் சென்றார். இதில் தலையிட்ட மாவட்ட நிர்வாகத் தரப்பு, `கொரோனா நேரத்தில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது; மடம் தரப்பினர் வாங்க முயற்சிக்கும் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் அரசு புறம்போக்கு நிலங்களும் உள்ளன. எனவே இதில் சட்டச்சிக்கல் எழும்' என்று பத்திரப்பதிவுக்கு தடைவிதித்துவிட்டது.

தவிர, மேற்கண்ட கல்லூரியை விற்கக்கூடாது; மாணவர்களின் படிப்பு தடைபடும் என்று திருவனந்தபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ளூர் நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்றமும் கல்லூரியை விற்க தற்காலிகமாக தடை விதித்திருக்கிறதாம். ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறது மடம் மற்றும் கல்வித்தந்தை தரப்பு!

அடுத்த கட்டுரைக்கு