Published:Updated:

`இது வெறும் நம்பர் விளையாட்டு மட்டும் அல்ல!' - ஓ.பி.எஸ்மீது நடவடிக்கை எடுப்பாரா தனபால்?

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

`ஓ.பி.எஸ் பக்கமிருந்த கே.பி.முனுசாமி உட்பட பலரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்துவிட்டனர். தன்பக்கம் ஆதரவாளர்கள் என சொல்லிக்கொள்ளும்படியாக யாரும் இல்லாவிட்டாலும், ஒன் மேன் ஆர்மியாக வலம்வருகிறார் ஓ.பி.எஸ்.’

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள்மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, நாளை காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தவிருக்கிறார் சபாநாயகர் தனபால்.`சபாநாயகரின் நடவடிக்கையைப் பொறுத்து அடுத்த சட்ட நடவடிக்கையைத் தொடங்குவோம்' என்கிறார் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

சபாநாயகர் தனபால்
சபாநாயகர் தனபால்

தமிழக சட்டமன்றத்தில் 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் உளட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர். இவர்கள் 11 பேரையும் தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. முடிவில், `சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார்’ எனக் கூறி வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

அதன் பிறகும் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்காததால், மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்தது தி.மு.க. அந்த மனுவில், ` உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து மூன்று மாதங்கள் ஆகியும் சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்' எனக் கோரியது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதியரசர்கள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா அமர்வு, `இந்த விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாகc செயல்பட வேண்டும்' என அறிவுறுத்தியது. இந்த வழக்கில் முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கத்தில், `அரசுக்கு எதிராக 11 எம்.எல்.ஏ-க்களும் வாக்களித்திருந்தாலும், அவர்கள் அ.தி.மு.க-வுக்கு எதிராகச் செயல்படவில்லை. எனவே, கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை' எனக் கூறியது திருப்பத்தை ஏற்படுத்தியது.

11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... 
‘‘சபாநாயகரை நிர்பந்திக்க சட்டத்தில் இடமில்லை!’’ - அ.தி.மு.க;

இந்நிலையில், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நாளை காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தவிருக்கிறார் சபாநாயகர் தனபால். அ.தி.மு.க-வில் `முதல்வர் வேட்பாளர்' சர்ச்சை முடிவுக்கு வந்த நேரத்தில், இப்படியொரு விசாரணை நடத்தப்படுவது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``இது ஒரு சட்ட நடைமுறை. அவ்வளவுதான். ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அரசு நீடிக்காது என்ற வாதமெல்லாம் காலம் கடந்து போய்விட்டது. பதவியைவிட்டு நீக்கினாலும், நீக்காவிட்டாலும் பிரச்னை எதுவுமில்லை. ஆட்சி முடியும் தறுவாயில் உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சபாநாயகர் செயல்படுகிறார்.

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

ஒருவேளை ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத்தான் போகும். இது வெறும் நம்பர் விளையாட்டு மட்டும் இல்லை. தர்ம யுத்தத்தின்போது ஓ.பி.எஸ் பக்கம் இருந்த கே.பி.முனுசாமி உட்பட பலரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்துவிட்டனர். தன்பக்கம் ஆதரவாளர்கள் எனச் சொல்லிக் கொள்ளும்படியாக யாரும் இல்லாவிட்டாலும், ஒன் மேன் ஆர்மியாக வலம்வருகிறார் ஓ.பி.எஸ். இப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட யாருமே, `எடப்பாடி முதல்வர்' எனப் பேசுவதில்லை. காரணம், தலைமைக் கழகத்திலிருந்து வெளியான அந்த ஒற்றை அறிக்கைதான். அதன் பிறகு அனைவருமே மௌனமாகிவிட்டனர். எனவே, சபாநாயகர் விசாரணையை இந்த விவகாரத்தோடு முடிச்சுப் போட்டுப்பார்க்க வேண்டியதில்லை" என்கின்றனர்.

சபாநாயகர் விசாரணை தொடர்பாக, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். ``இந்த விவகாரத்தில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை. உச்ச நீதிமன்றம், `சபாநாயகர் உடனடியாகச் செயல்பட வேண்டும்' எனக் கூறியுள்ளது. அவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்த்துவிட்டு, சட்ட நடவடிக்கைகளைத் தொடர்வோம்’’ என்றதோடு முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு